கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட கிட்ஸ்டார்ட் (KidSTART), இவ்வாண்டு தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
கிட்ஸ்டார்ட் திட்டத்தின்மூலம் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் பயனடைந்துள்ளனர்.
இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கரையோரப் பூந்தோட்டங்களில் முதல் பட்டமளிப்பு விழாவை நடத்தியது கிட்ஸ்டார்ட். இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு விருது வழங்கினார்.
கர்ப்பகாலம் முதல் ஆறு வயது வரையிலான காலம் ஒரு குழந்தையின் வாழ்நாள் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.
குழந்தைகளின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட கிட்ஸ்டார்ட்டின் பாடத்திட்டம், அவர்களின் வளர்ச்சி மற்றும் தாயின் நலனைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, குறைந்த வருமானக் குடும்பங்களில் 80% குழந்தைகளைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
கிட்ஸ்டார்ட் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோயல் டான், குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு பெற்றோரின் பங்களிப்பு அவசியம் என்று கூறினார்.
பொருளியல் வளர்ச்சியைத் தாண்டி, சூழ்நிலையால் ஒரு குழந்தையின் தொடக்கக் காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியது.

