அதிகரித்துவரும் கண்புரை பாதிப்பு

3 mins read
a9c2abff-0ee6-4dea-a0c8-7878ece2847f
உலகில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 28 மில்லியன் கண்புரை அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. - படம்: ஐஸ்டாக்ஃபோட்டோ
multi-img1 of 2

மங்கலான பார்வை என்றாலே அது கண்புரை நோயாகத்தான் (cataract) இருக்கும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், இது தவறான புரிதல் என்கிறார் சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவர் டாக்டர் சுதர்சன் சேஷாசாய்.

பார்வைக் குறைபாடுகளுக்குப் பின்னால் பல தீவிரமான காரணங்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் இவர்.

“கண் அழுத்த நோய் (glaucoma), முதுமை சார்ந்த விழித்திரைச் சிதைவு போன்ற பிரச்சினைகளும் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும்.

“இவற்றைத் தொடக்கத்திலேயே கண்டறியாவிட்டால், சரிசெய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படக்கூடும்,” என்கிறார் டாக்டர் சுதர்சன். எனவே, பார்வையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவ நிபுணர்களை அணுகுவது அவசியம்.

சிங்கப்பூரில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கண்புரை பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

“60 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினரைக் கண்புரை பாதிக்கிறது. இருப்பினும், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்று,” என்று அவர் நம்பிக்கையூட்டினார்.

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 28 மில்லியன் கண்புரை அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

இந்தச் சிகிச்சை, நோயாளிகளின் பார்வையிலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்திலும் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தாங்கள் அடிக்கடி கேள்விப்படுவதாக டாக்டர் சுதர்சன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அறுவை சிகிச்சைக்குப் பின் கண்புரை மீண்டும் வருமா?

அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் கண்புரையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது நோயாளிகளிடையே நிலவும் ஒரு பொதுவான சந்தேகம்.

இதற்குப் பதிலளித்த டாக்டர் சுதர்சன், “அறுவை சிகிச்சையின்போது கண்புரை படிந்த இயற்கையான விழிவில்லை (lens) முழுமையாக அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாகச் செயற்கை விழிவில்லை பொருத்தப்படுகிறது. எனவே, கண்புரை மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை,” எனத் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், சிலருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் விழிவில்லையின் பின்புறம் ஒரு மெல்லிய படலம் (Posterior Capsular Opacity) உருவாகி, பார்வை மங்கலாம். இதனை எளிய லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியும் என்றார் டாக்டர் சுதர்சன்.

கண்புரை என்பது பார்வை மங்குவது மட்டுமல்லாது வேறுசில அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.

குறைந்த வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமம், அதிக ஒளியைக் காணும்போது கண்கள் கூசுதல், விளக்குகளைச் சுற்றி வளையங்கள் தெரிவது போன்ற உணர்வு, நிறங்கள் மங்கலாகத் தெரிவது, முதியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் தடுமாற்றங்கள் அல்லது கீழே விழுதல் ஆகியவையும் கண்புரையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கண்ணாடி மாற்றியும் பார்வை சரியாகாத நிலையில், அது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும்போது பொதுவாக அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

நவீன சிகிச்சை முறைகளும் விழிவில்லைத் தெரிவுகளும்

சிங்கப்பூர் தேசிய கண் நிலையம் தனது 35வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், கண்புரை சிகிச்சையில் தரம், பாதுகாப்பு, நவீன கண்டுபிடிப்புகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாக டாக்டர் சுதர்சன் கூறினார்.

அறுவை சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நோயாளிகள் குணமடையும் செயல்முறையில் பெருமாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

இன்று பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் புரையைக் கூழாக்கி நீக்கல் (Phacoemulsification) என்ற முறையிலேயே செய்யப்படுகின்றன. மிகச் சிறிய துளை வழியாகச் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால், நோயாளிகள் 2 முதல் 4 வாரங்களுக்குள் முழுமையாகக் குணமடைந்துவிடுகின்றனர்.

எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருந்துகளை முறையாகப் பயன்படுத்துவதும் தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதாரத்தைப் பேணுவதும் அவசியம்.

ஒற்றைக் குவிய (Monofocal) விழிவில்லைகள் மட்டுமன்றி, பல்குவியம் (Multifocal), இடிஓஎஃப் (EDOF), அல்லது சிதறல் பார்வையைச் சரிசெய்யும் டோரிக் (Toric) விழிவில்லைகள் எனப் பல தெரிவுகளும் இன்று உள்ளன.

விழிவில்லைத் தெரிவு என்பது ஒவ்வொருவரின் கண் நலத்தையும் அன்றாடச் செயல்பாடுகளையும் பொறுத்து தனிப்பட்ட முறையில் அமையும் என்று டாக்டர் சுதர்சன் குறிப்பிட்டார்.

பார்வைத்திறனைப் பேணும் வழிகள்

கண் பார்வையைப் பாதுகாக்கவும், கண்புரை ஏற்படுவதைத் தாமதப்படுத்தவும் நல்வாழ்வு முறைகளைப் பின்பற்றலாம்.

முறையான உடற்பயிற்சி, சத்தான சமச்சீர் உணவு, போதுமான உறக்கம் ஆகியவை கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. மேலும், வெளியில் செல்லும்போது புற ஊதாக் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாக்க சூரியக் கண்ணாடி அணியலாம்.

குறிப்பாக, மின்னிலக்கக் காட்சித் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து, ‘20-20-20’ விதியைப் பின்பற்றிக் கண்களுக்குப் போதுமான ஓய்வளிக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்குப் பிறகும் 20 நொடி நேரம் குறைந்தது 20 அடி தொலைவிலுள்ள ஒன்றைப் பார்க்க வேண்டும்.

“இத்தகைய எளிய பழக்கவழக்கங்கள், ஒட்டுமொத்த பார்வைத்திறனைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன,” என்று டாக்டர் சுதர்சன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்