எஸ்ஜி 60 கொண்டாட்டங்களின் தொடர்பில், சிங்கப்பூர் நிலப்பரப்பில் தொடர்ந்து வாழ்வின் ஓர் அங்கமாகவே இருந்துவரும் ‘கோப்பிக் கடை’ கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த நகைச்சுவை நாடகம் நடைபெறவுள்ளது.
அவாண்ட் நாடகக் குழு சார்பில் ஏறத்தாழ 31 பேர் இணைந்து நடிக்கும் ‘கோப்பிக் கடை’ எனும் இந்நாடகம் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை சிங்கப்பூர்க் கலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மூன்று நாள்களும் பிற்பகல் 3 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இரு காட்சிகள் அரங்கேறவுள்ளன.
‘கோப்பித்தியாம்’கள் சமூகத்தின் பிணைப்பாகத் திகழ்கின்றன என்று கூறிய நாடக இயக்குநர் செல்வா, 2024ஆம் ஆண்டு முதல் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“கோப்பித்தியாம்கள் கோப்பி, ரொட்டிகளுக்கு அப்பால் கலாசாரம், அன்றாடப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் தளங்கள். நம்பிக்கையின் அடிப்படையில் நட்புறவுகள் உருவாகுமிடங்கள்,” என்றார் அவர்.
சிங்கப்பூர்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பன்மொழிகளில் இந்நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மையாகத் தமிழ் மொழியிலும், மலாய், ஹொக்கியன், மாண்டரின் மொழிகளில் ஆங்கில வசன வரிகளுடனும் அமைந்துள்ளது ‘கோப்பிக்கடை’.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று அறுபதாவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் வெறும் பொழுதுபோக்காக மட்டுமன்றி நல்லிணக்கம், மீள்திறன், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தை நினைவூட்டி, நிகழ்காலத்தைக் கண்முன் நிறுத்துவதுடன் எதிர்காலத்துக்கான பாதையைச் சுட்டும் வகையில் இது அமைந்துள்ளதாகவும் கூறினார் செல்வா. ஒரு சாதாரண கோப்பிக்கடை வியக்கத்தக்க பிணைப்புகளை வடிவமைப்பதைப் பார்வையாளர்கள் காணலாம் என்றும் அவர் கூறினார்.
இரண்டரை மணி நேரம் நடைபெறும் இந்நாடகம் 1980களில் தொடங்கி 1990, 2000 ஆகிய மூன்று காலகட்டங்களில் அமைந்துள்ளது. முப்பரிமாணக் கலை வடிவமைப்புகள், நேரடி இசைக்கோப்புடன் ‘கோப்பித்தியாம்’களின் பரிணாம வளர்ச்சியையும் கண்முன் கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“நடிகர்கள், குழுவினரின் முயற்சியில் உருவாகியுள்ள இந்நாடகம், கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை,” என்று கூறிய வடிவழகன் பிவிஎஸ்எஸ், “நீண்ட நாள்களுக்குப் பிறகு மேடை நாடகத்தில் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பங்காற்ற முடியும் என்றும் பார்வையாளர்கள் அரங்கை விட்டுப் புன்னகையுடன் வெளியேறுவார்கள் என்றும் நம்புகிறேன்,” என்று கூறினார்.
உள்ளூர்த் தொலைக்காட்சிப் பிரபலங்கள், புதுமுகங்கள் எனப் பல்லினக் குழுவினரின் பங்களிப்புடன், சையது அஷ்ரத்துல்லா எழுதிய கதையை நாடகத்துக்கேற்ப மேம்படுத்தி, மூன்று மாதகாலத் தொடர் பயிற்சிகளுக்குப்பின் இந்த நாடகம் மேடையேற உள்ளது.
சாலையோர உணவுக்கடைகள் உணவங்காடி நிலையமாக உருவெடுத்து, சிங்கப்பூர் உணவுக் கலாசாரத்தை வடிவமைத்த அதே வேளையில், சமூக ஒன்றிணைவுத் தளமாகத் தமது கலாசாரத்தைத் தக்க வைத்துள்ளதையும் இந்த நாடகம் பேசுகிறது என்றார் இயக்குநர் செல்வா.
மேலும், ‘அவாண்ட் குழு’ இந்த நிகழ்ச்சியின் தொடர்பில் நாடகத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்த ஏழு பேருக்கு ‘நாடகக் கலைமாமணி’ விருதும் வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது.
கார்த்திகேயன் சோமசுந்தரம், அஹமத் அலிகான் அப்துல்லா கான், இளவழகன் முருகன், முத்துசாமி லிங்கம், வடிவழகன் சண்முகசுந்தரம், புரவலன் நாராயணசாமி, வனிதா இளஞ்சேரன் ஆகியோருக்கு 18ஆம் தேதி இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.
“நாடகத்துறையில் நீண்ட காலம் பங்களித்தோரைப் பெருமைப்படுத்தவும் இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன,” என்றார் செல்வா.