நடிகர், எழுத்தாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களில், சிங்கப்பூர் நாடகத் துறையின் வளர்ந்துவரும் நட்சத்திரங்களில் ஒருவராக 29 வயது கிரிஷ் நடராஜன் கருதப்படுகிறார்.
இவருக்கு 2024ஆம் ஆண்டில் அடுத்தடுத்து நாடகத் தயாரிப்புகள் அமைந்த வண்ணம் உள்ளன. தற்போது ஆண்டை நிறைவுசெய்யும் முத்தாய்ப்பாக ‘சைல்ட்எய்ட்’ நிகழ்ச்சிக்கு வசனம் எழுதியுள்ளதுடன் இதை இயக்கியும் உள்ளார் கிரிஷ்.
கற்பனைக் கதைகளைச் சொல்வதில் அவருக்குள்ள அதீத ஆர்வமும் சிறுவர்களுடன் இணைந்து செயல்படும் மகிழ்ச்சியும் கலந்த ஓர் உன்னத அனுபவத்தை இந்த சைல்ட்எய்ட் தமக்கு வழங்குவதாக இவர் கருதுகிறார்.
‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’, ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ இரண்டும் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் ‘சைல்ட்எய்ட்’, இசை, நடனம், நாடகம் ஆகியவற்றோடு திறமையான சிறுவர் கலைஞர்களை ஒருசேரக் கலந்து வசதிகுறைந்த பிள்ளைகளுக்காக நன்கொடை திரட்டி வருகிறது.
“சிறுவர்கள் அசாத்திய திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதீத ஈடுபாடும் திறமையும் கொண்டவர்களாக உள்ளனர். பெரியவர்களிடம் காண முடியாத உற்சாகத்தை இவர்கள் இங்கு கொண்டு வருகிறார்கள்,” என்று கண்கள் ஒளிரக் கூறினார் கிரிஷ் நடராஜன்.
பார்வையாளர்களைத் துப்பறிவாளர்களாக மாற்றும் அனுபவரீதியான படைப்புகளுக்குப் பேர்போனவர் இவர். இருப்பினும் சிறுவர்களுடன் இணைந்து செயல்பட்டதில் அவரது புத்தாக்க இயல்பு மெருகூட்டப்பட்டது.
“இது வேறுபட்ட ஒரு மொழி. பொதுவாக நான் விளக்கம் அளிப்பதை வெளிக்காட்ட நான் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது,” என்று புன்னகைத்தவாறு கூறினார். பெரியவர்கள் என்றால் சொற்களைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், சிறுவர் கலைஞர்கள் என்பதால் உடல்ரீதியாகச் செய்து காட்ட வேண்டியுள்ளதாகச் சொன்னார்.
இவ்வாண்டு ‘சைல்ட்எய்ட்’ 20வது முறையாக நடைபெறவுள்ளது. ஆடல் பாடலுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தோடு சிறுவர்களின் கனவுகள் மெய்ப்படும் ஓர் மந்திர உலகில் அமையவுள்ள இப்படைப்பு, பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“தங்களின் கனவுகள் யாவும் உன்னதமானவை என்று சிறுவர்கள் உணர்வதற்காக ஓர் உலகை உருவாக்குவது பற்றியதுதான் இந்தப் படைப்பு,” என்றார் கிரிஷ் நடராஜன்.
எஸ்பிளனேட் தியேட்டரில் நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. $28, $38, $68 ஆகிய விலைகளில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. நிகழ்ச்சிவழி திரட்டப்படும் நிதி, ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதி’, ‘த பிசினஸ் டைம்ஸ் வளரும் கலைஞர்கள் நிதி’ ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.

