இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதை கூறும் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘கிருஷ்ண மஞ்சரி’, செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு பிஜிபி அரங்கில் நடைபெறவுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்ச்சியின் 2025ஆம் ஆண்டு பதிப்பில், பிரபலப் பாடகி ஸ்பூர்த்தி ராவ், மாண்டலின் கலைஞர் விஷ்வஸ் ஹரி, உள்ளூர் மிருதங்கக் கலைஞர் சித்தார்த் ஆனந்த், உள்ளூர் தப்லா கலைஞர் ஷ்யாம் லால் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதில் இசைக்கச்சேரி, பஜனைகளுடன் கண்ணனின் வாழ்வைக் காட்டும் நடன நிகழ்ச்சியும் கலைப்படைப்புக் கண்காட்சியும் இடம்பெறும்.
முதல் 30 நிமிடங்கள் உள்ளூர்க் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து பிற இசை, பஜனை நிகழ்ச்சிகளுடம் இடம்பெறும்.
பகவத் கீதையில் இடம்பெற்றுள்ள ஆழமான வாழ்வியல் கருத்துகளை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் நோக்கில், ஏறத்தாழ 30 தனி அமைப்புகளின் கூட்டமைப்பான ‘கீதா ஜெயந்தி’ செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கான பகவத் கீதை வாசிக்கும் போட்டி தொடங்கி, கிருஷ்ண மஞ்சரி வரை பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் இப்பணியை மேற்கொண்டு வருவதாக ‘கீதா ஜெயந்தி’ தலைவர் ஜி.சீனிவாசன் கூறினார்.
2019லிருந்து இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஒரு பகுதியாக ‘கீதா ஜெயந்தி’ செயல்படுவதாகக் கூறிய அவர், இவ்வாண்டு அனைத்து அமைப்புகள், கோவில்களின் ஆதரவுடன் சிங்கப்பூர் வங்காளிகள் சங்கம் இந்நிகழ்ச்சியை வழிநடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற www.gitajayanti.org.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.