தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகை மயக்கும் லபுபு பொம்மைகள்

3 mins read
10584205-021a-4824-a21c-77b8d51af7be
டோபி காட் பாப் மார்ட் கடையில் லபுபு பொம்மையை வாங்கிய களிப்பில் சரீனா காலித், 13. - படம்: ரவி சிங்காரம்

ஜூன் பள்ளி விடுமுறையின்போது ஒரு செவ்வாய்க்கிழமைக் காலை 10.30 மணிக்கே டோபி காட்டிலுள்ள பாப் மார்ட்டுக்கு வெளியே மூன்று நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர்.

சிலர் அதிகாலையிலிருந்தே வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

பாப் மார்ட் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்..
பாப் மார்ட் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்.. - படம்: ரவி சிங்காரம்

இதற்குக் காரணம், ஹாங்காங் ஓவியர் காசிங் லுங் 2015ல் உருவாக்கிய, சீன நிறுவனம் ‘பாப் மார்ட்’டால் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ‘லபுபு’ (Labubu) பொம்மை. இந்தப் பொம்மை, காசிங் லுங்கின் ‘தி மான்ஸ்டர்ஸ்’ பொம்மை வரிசையில் இடம்பெற்ற ஒன்று. 2019ல் பாப் மார்ட் அவருடன் சேர்ந்து லபுபுவை மர்மப் பெட்டிகளாக விற்கத் தொடங்கியதும் அது புகழ்பெறத் தொடங்கியது. டிக்டாக் காணொளிகளும் அதனை மேலும் புகழ்பெறச் செய்தன.

அதனால், சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் மக்கள் ஆர்வத்தோடு இப்பொம்மையைச் சேகரித்துவருகின்றனர்.

ஒவ்வொரு முறை ‘மான்ஸ்டர்ஸ்’ வரிசையில் புதிய பொம்மை வெளியிடப்பட்டதும் பாப் மார்ட் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையைக் காணலாம்.

அந்தச் செவ்வாய்க்கிழமைக் காலை ஆறு லபுபு பொம்மைகள் $150 எனும் சலுகையில் விற்கப்பட்டதால் வரிசை நீண்டது.

மிடல்டன் அனைத்துலகப் பள்ளியில் உயர்நிலை ஆங்கிலப் பாடப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் திருவாட்டி நாதியா காலித் ஃபெரோஸ், தன் 13 வயது மகள் சரீனா காலித்துடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.

ஜூன் விடுமுறையில் ஆறு லபுபு பொம்மைகளை வாங்க தம் மகளுடன் வந்திருந்த திருவாட்டி நாதியா காலித் ஃபெரோஸ்.
ஜூன் விடுமுறையில் ஆறு லபுபு பொம்மைகளை வாங்க தம் மகளுடன் வந்திருந்த திருவாட்டி நாதியா காலித் ஃபெரோஸ். - படம்: ரவி சிங்காரம்

“தற்செயலாகக் காலையில் பாப் மார்ட் இணையத்தளத்தைப் பார்த்தபோது லபுபு விற்பனை குறித்து அறிந்தேன். உடனடியாக விரைந்துவந்தோம்,” என்றார் திருவாட்டி நாதியா.

தொடக்கத்தில் தான் லபுபு பொம்மைகளை விரும்பவில்லை என்றார் சரீனா.

“பொம்மையைப் பார்க்க பயங்கரமாக இருக்கும். ஆனால், என் சமூக ஊடகப் பக்கங்களில் லபுபு பொம்மைகள் வந்துகொண்டே இருந்தன,” என்றார் சரீனா.

பிளாக்பிங்க் எனும் புகழ்பெற்ற தென்கொரியப் பெண்கள் இசைக்குழுவின் லிசா தன் பையில் லபுபு பொம்மையை வைத்திருந்ததைப் பார்த்ததும் அவற்றின்மீது சரீனாவுக்கு ஆர்வம் அதிகரித்தது.

“என் நண்பர்களும் லபுபு பொம்மையின் சிரிப்பைப் பார்த்து அஞ்சுகின்றனர். அதனால், அவர்களைப் பயமுறுத்துவதற்காகவும் இதை வாங்க விரும்பினேன்,” எனப் புன்முறுவலுடன் அவர் கூறினார்.

தன் தாயாருக்கே தெரியாமல் வீட்டில் பல பொம்மைகளை வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

எனினும், கிட்டத்தட்ட அரைமணி நேரம் வரிசையில் காத்திருந்து, உள்ளே நுழைவதற்கு சற்று முன்பு, தாங்கள் தேடிவந்திருந்த ஆறு பெரிய லபுபு பொம்மைகள் விற்றுவிட்டதால் சிறிய லபுபு பொம்மையையே அவர்களால் வாங்க முடிந்தது.

லபுபு மோகத்துக்கு வயது வரம்பில்லை

சிறுவர்களுக்கு மட்டுமே லபுபு மோகம் என்றில்லை. பெரியவர்கள் பலரும் வரிசையில் நின்றனர்.

அவர்களில் சிலர் முந்திக்கொண்டு லபுபு பொம்மைகளை வாங்கிக்கொண்டு, இணையத்தில் கூடுதல் விலைக்கு மறுவிற்பனை செய்பவர்கள். ஒருவர் அதிகாலையிலிருந்து ‘ஐயோன் ஆர்ச்சர்ட்’ பாப் மார்ட்டில் வரிசையில் நின்றுவிட்டு டோபி காட் பாப் மார்ட்டுக்கு வந்ததாகக் கூறினார். “ஒரு கடையில் ஒன்றை மட்டுமே தருகின்றனர்,” என்றார் அவர்.

வெளிநாட்டவரும் லபுபு பொம்மைகளை இங்கு வாங்குகின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியர் அருள் ராஜா, 55.

தன் 25 வயது மகளுக்காக மலேசியாவில் கிடைக்காத ‘லபுபு’, ‘மான்ஸ்டர்ஸ்’ பொம்மை சார்ந்த பொருள்களை சிங்கப்பூர் பாப் மார்ட்டில் வாங்கும் திரு அருள் ராஜா, 55.
தன் 25 வயது மகளுக்காக மலேசியாவில் கிடைக்காத ‘லபுபு’, ‘மான்ஸ்டர்ஸ்’ பொம்மை சார்ந்த பொருள்களை சிங்கப்பூர் பாப் மார்ட்டில் வாங்கும் திரு அருள் ராஜா, 55. - படம்: ரவி சிங்காரம்

பிளாசா சிங்கப்பூராவில் ஒரு வேலைக்காக வந்திருந்த அவர், அங்குத் தமது 25 வயது மகளுக்காக ‘தி மான்ஸ்டர்ஸ்’ கருவிலான ஐஃபோன் மின்னூட்டு கம்பிவடத்தை வாங்க வந்திருந்தார்.

“லபுபுவைப் பொறுத்தவரை மலேசியாவைவிட சிங்கப்பூரில் விலை சற்று மலிவுதான். மேலும், இங்குக் கிடைக்கும் சில லபுபு பொம்மைகள் மலேசியாவில் கிடைப்பதில்லை,” என்றார் திரு அருள்.

இணையத்திலும் பலரும் லபுபு பொம்மைகளை விற்றாலும் சிலர் போலி பொம்மைகளை விற்பதாக அவர் குறிப்பிட்டார்.

“அதனால்தான் நான் நேரடியாகப் பாப் மார்ட்டில் வாங்குகிறேன்,” என்றார் அவர்.

முன்கூட்டியே பாப் மார்ட் இணையத்தளத்தில் புதிய பொம்மைகளுக்குப் பதிவுசெய்ய முடிந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொள்ள நேரில் வருவதற்குள் சிலமுறை அவை தீர்ந்துவிடுவதாக அவர் சொன்னார்.

கணக்காய்வாளராகப் பணியாற்றும் அவருடைய மகளுக்கு ஈராண்டுகளுக்கு முன் லபுபு மீது நாட்டம் வந்தது. “அவருடைய நண்பர்கள் லபுபு பொம்மையை வாங்கியதால் அவரும் வாங்கத் தொடங்கினார்,” என்ற திரு அருள் ராஜா, பாப் மார்ட் விற்பனை உத்திகளைப் பாராட்டினார்.

“குறுகிய காலத்துக்கே கிடைக்கும் பொம்மைகளை அடிக்கடி அறிமுகப்படுத்துவதால் பலரும் விரைந்து வாங்குகின்றனர். மேலும், மக்கள் ஒரு பொம்மையை வாங்குவதோடு நிற்பதில்லை. ஒரு வரிசையைச் சார்ந்த அனைத்து பொம்மைகளையும் வாங்க ஆசைப்படுகிறார்கள்.

“ஒவ்வொரு ‘மான்ஸ்டர்ஸ்’ வரிசையிலும் மர்மப் பெட்டிகளும் உள்ளன. கிடைப்பதற்கான வாய்ப்பு அரிது என்றாலும் அவை கிடைக்கும் என்ற ஆசையிலேயே பலரும் தொடர்ந்து வாங்குகின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

லபுபு மட்டுமன்றி பொதுவாக ‘மான்ஸ்டர்ஸ்’ தொடரிலும் மர்மப் பெட்டிகள் இருப்பதால் அவற்றைப் பெறும் ஆசையில் மக்கள் வாங்குவதாகக் கூறினார் திரு அருள் ராஜா.
லபுபு மட்டுமன்றி பொதுவாக ‘மான்ஸ்டர்ஸ்’ தொடரிலும் மர்மப் பெட்டிகள் இருப்பதால் அவற்றைப் பெறும் ஆசையில் மக்கள் வாங்குவதாகக் கூறினார் திரு அருள் ராஜா. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்