ஒரு குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலைத் தனி ஒரு பெண்ணாக எடுத்து நடத்த முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குபவர் ரஞ்சினிஸ் ராஜேந்திரன்.
தம் தாய்வழித் தாத்தாவான ஸ்ரீனிவாச பத்தர், சிங்கப்பூரில் பல குடும்பங்களுக்கு தலைமுறை தலைமுறையாக நகை செய்து கொடுத்ததும், அதன் மூலம் அவர்களது குடும்பங்களுடன் ஏற்பட்ட நட்பு, அவர்கள் அடைந்த மனநிறைவு, இவற்றைப் பார்த்து வளர்ந்த ரஞ்சினிசுக்கும் நகை தொடர்பான தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
குறிப்பாக, தொழில் நவீனமடைந்தாலும், தொழில் செய்யும் முறை தம்முடைய தாத்தாவைப் போலவே இருக்க வேண்டும் என்பதை மனத்தில் நன்கு விதைத்துக் கொண்டார் இவர்.
“நான் வெறும் வணிகர் அல்லர், நான் பத்தர், அடிப்படையில் ஒரு கலைஞர்,” என்று பெருமையுடன் சொன்னார் ரஞ்சினிஸ்.
மரபுத் தொழில்கள் பல மறைந்து வருவதைப் போலவே, மரபுவழி தொழில் செய்யும் முறைகள் அழிந்து வருகின்றன. அதனைக் கைவிடாமல் இருப்பதே தமது இலக்கு என்றும் சொன்னார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பத்திரிகை, தொடர்புத் துறைகளில் இளங்கலைப் பட்டமும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மொழியியல் கல்வியும் பயின்ற இவர், தாம் நினைத்தபடியே வைர நகைத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
“இது மிகவும் சிரமமான தொழில் என்று பலரும் கூறினார்கள். அதனை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை,” என்றார் ரஞ்சினிஸ். தொடர்ந்து, “இயற்கையாகவே பெண்களுக்கு அழகியல், வடிவமைப்புக் கண்ணோட்டம் உண்டு. எனக்கு என் முன்னோர்களின் ஆசியால், எதையும் நேர்த்தியாகச் செய்யும் குணமும் வாய்த்துள்ளது,” என்றார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் முழுநேர வைர வியாபாரியாக இருக்கும் இவர், தமது வீட்டையே அலுவலகமாகப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்படும் வைரப் பட்டறையும் வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வைரம் ஒருவரது குணாதிசயங்களின் பிரதிபலிப்பு என்று சொன்ன ரஞ்சினிஸ், “வைரம் வாங்க வரும் யாவரையும் குடும்பத்துடன் வீட்டில் உபசரித்து அவர்களது ரசனை, தேவைகளைக் குறித்து கலந்தாலோசித்து, அவர்களுக்கான நகைகளைப் பார்த்துப் பார்த்து வடிவமைப்போம்” என்றார்.
முதலில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற நகைகளைக் கணினியில் வடிவமைத்துக் காட்டி, அவர்களது எண்ணங்களுக்குத் தமது பட்டறையில் வடிவம் கொடுப்பதாகக் கூறினார்.
இவ்வாண்டு நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசாவில் நடந்த ‘அல்ட்ரா லக்ஸ்’ (Ultra Luxe) எனும் அனைத்துலக நகைகள் கண்காட்சியில் தமது நகைகளைக் காட்சிப்படுத்தியுள்ளார் ரஞ்சினிஸ்.
தாம் மேற்கொண்ட பணியைத் தமக்கே உரிய பாணியில் செய்வது தம் வெற்றியின் ரகசியம் என்று சொன்னார். தமது தொழில் பங்குதாரர்கள், குடும்பத்தார், குடும்பத்தில் ஓர் அங்கமாக மாறித் தொடர்ந்து தம்மிடம் நகை வாங்குவோர் என அனைவரும் நல்கும் ஊக்குவிப்பு தம்மை மேன்மேலும் வளரச் செய்யும் என்று நம்புகிறார் ரஞ்சினிஸ்.
தம்முடைய தாத்தாவின் பெயரை அழியாமல் காப்பதுதான் தமது கடமை என்றும் சொன்னார்.
மேலும், “அனைவருக்கும் கனவுகள் இருக்கும். அதனை மேற்கொள்ள பயமின்றி முதல் அடி எடுத்து வைத்தால் அடுத்தடுத்து எல்லாம் சிறப்பாக அமையும்,” என்றார்.

