விநாயகர் சதுர்த்திக்காகக் கடைசி நிமிடத்தில் விநாயகர் சிலைகளையும் வழிபாட்டுப் பொருள்களையும் வாங்க லிட்டில் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) கூட்டம் அலைமோதியது.
சில கடைகளுக்கு விற்பனை சென்ற ஆண்டைப் போலவே இருந்தாலும் மற்ற கடைகள், இணைய வர்த்தகங்களிலிருந்து வந்த போட்டியால் விற்பனை சரிந்ததாகக் கூறின.
“இவ்வாண்டு விற்பனை சென்ற ஆண்டைப் போலவே இருந்தது. ஆனால், அனைவரும் கடைசி நேரத்தில் வந்து வாங்குகின்றனர். 2024ல் விநாயகர் சதுர்த்தி செப்டம்பரில் வந்தது. இம்முறை ஆகஸ்ட் மாதமே வந்துவிட்டதால் கடைசி நேரத்தில் வருகிறார்கள்,” என்றார் ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை உரிமையாளர் ராஜகுமார்.
பொருள்களின் விலை உயர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
“கொவிட்-19 தொற்றுக்குப் பின்னர் விமான, கடல் போக்குவரத்துக் கட்டணங்கள் அப்படியே இருக்கின்றன. இந்தியாவில் பொருளியல் மேம்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் விநாயகர் சிலைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சிங்கப்பூரில் இன்று பலருக்கும் செலவுசெய்யும் சக்தி குறைவாக உள்ளதால் எங்கள் லாபத்தைக் குறைத்துக்கொண்டு முன்பிருந்த விலையிலேயே விற்கிறோம்,” என்றார் திரு ராஜகுமார்.
21 கஃப் சாலையிலுள்ள தம் கடையில் 3,000 விநாயகர் சிலைகளைக் காட்சிப்படுத்தியுள்ளதாக கூறிய திரு ராஜகுமார், பலரும் ஒரு மாதத்திற்கு முன்பே விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்ததாகக் கூறினார்.
“30 ஆண்டுகளுக்கு முன்பு 20 சிலைகள்தான் விற்றோம். இன்றோ, இந்தியாவிலிருந்து வருவோர் தம் பண்பாட்டையும் கொண்டுவருகின்றனர். அவர்களுடன் இணைந்து சிங்கப்பூரர்களும் கொண்டாடுகின்றனர்,” என்று அவர் சொன்னார்.
மாறாக, இவ்வாண்டு விற்பனை 50 விழுக்காடு சரிந்துவிட்டதாகக் கூறினார் கேம்பல் லேனில் உள்ள லெட்சுமி புஷ்பக்கடையின் உரிமையாளர் திரு சாமி, 74. அவர் முப்பது ஆண்டுகளாகக் கடையை நடத்திவருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த ஈராண்டுகளாக விற்பனை மோசமாக இருக்கிறது. இணையத்திலிருந்து நிறைய போட்டி. இப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று கரும்பு விற்கிறார்கள். அவர்களுக்குக் கடை வாடகை செலுத்தத் தேவையில்லை. இன்று பத்துக் கடைகள் இருந்தால் அவற்றில் இரண்டு கடைகளையே சிங்கப்பூரர்கள் நடத்துகின்றனர். நானும் இன்னும் ஈராண்டுகளில் கடையை மூடிவிடுவேன். எங்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது,” என்றார் திரு சாமி.
“விநாயகர் சிலைகளை விற்கமுடியாவிட்டாலும் அவை வீணாகிவிடும்; நாளடைவில் சிலையில் பிளவுகள் ஏற்படும். அடுத்த ஆண்டுவரை அவற்றை வைத்திருக்க முடியாது.” என்றும் அவர் சொன்னார்.
கேம்பல் லேனில் மற்றொரு கடை, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை $20 முதல் $800 வரையிலான விலையில் விற்பதாகக் கூறியது.
பஃப்ளோ சாலையில் உள்ள ‘ஓம் சிவசக்தி’ புஷ்பக்கடையின் உரிமையாளர் முருகேசன் வேலுமணி, 56, தம் கடையில் விற்பனை சிறப்பாக இருப்பதாகக் கூறினார். “அருகம்புல் மாலை, மோதகம், எருக்கம்பூ மாலை, அவல் பொரி, விளாங்காய், களாக்காய் போன்ற பலவற்றையும் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்,” என்று அவர் சொன்னார்.
விநாயகர் சதுர்த்தியன்று ‘யுனிவர்செல்’ நிறுவனம், கடையிலேயே விநாயகர் சிலையை வைத்து, தோரணங்களால் அலங்கரித்து, வாடிக்கையாளர்களுடன் இணைந்து ஒரு பெரிய கொண்டாட்டமாக வழிபட்டு, பொங்கல், கொண்டைக்கடலை, பரிசுப்பொருள்களை வழங்கவிருப்பதாக கடை மேலாளர் கார்த்தி கூறினார்.
“இந்தியாவில் ஊர்வாரியாக, தெருவாரியாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அதே உணர்வு லிட்டில் இந்தியாவிலும் கிடைக்கிறது. தமிழகத்தில் கடையில் விநாயகர் சிலையை வைத்து, பக்கத்தில் உண்டியல் வைத்து, அதில் வசூலிக்கப்படும் பணத்தில் விநாயகருக்குப் பிரசாதம் வைத்துக் கொண்டாடுவது வழக்கம். இங்கும் நாங்கள் அப்படித்தான் செய்கிறோம்,” என்றார் திரு கார்த்தி.
படிகத்தால் செய்யப்பட்ட விநாயகரை அலங்கரித்துக் கடை வாசலில் வைத்துள்ளது ‘அபிராமி பாப்புலர் ஜுவல்லர்ஸ்’.
வாடிக்கையாளர்களின் விநாயகர் சதுர்த்தி
பலரும் இந்தியாவில் செய்வதுபோல் களிமண் விநாயகரைக் கடலில் கரைக்க இயலாவிட்டாலும் வாளிகளில் கரைப்பதாகக் கூறினர்.
சிங்கப்பூரர்கள், வடஇந்தியர்கள், தென்னிந்தியர்கள் எனப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களும் லிட்டில் இந்தியாவுக்கு வருகையளித்தனர்.
“இவ்வாண்டு என் மகள் கர்ப்பமாக இருப்பதால் அவருக்காகவும் சேர்த்து விநாயகர் சதுர்த்திக்கான பொருள்களை வாங்குகிறேன். வேலைக்குச் செல்வதற்குமுன் என் வீட்டில் வழிபாடும் இரவில் என் மகள் வீட்டில் வழிபாடும் செய்வேன்,” என்றார் தாதியாகப் பணிபுரியும் திருவாட்டி சங்கரி, 58.
திருவாட்டி ரெத்தினகுமாரி, தன் வீட்டு விநாயகருக்காக வாடாமல்லியால் செய்யப்பட்ட மாலையை வாங்கினார். “முழுக்க முழுக்க வாடாமல்லியால் செய்யப்பட்ட மாலை ஒரு வாரம் நீடிக்கும். இன்று பஃப்ளோ சாலையின் முதல் கடையில்தான் அத்தகைய மாலையைக் கண்டேன். வீட்டில் பளிங்கு விநாயகர் வைத்திருப்பதால் விநாயகர் சதுர்த்திக்காக நாங்கள் விநாயகரைக் கரைப்பதில்லை,” என்றார் அவர்.
பெங்களூரிலிருந்து வந்த மேலாளர் ஸ்ரீநிவாஸ், தன் மனைவி, உறவினர்களுடன் பெரிய குடும்பமாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதாகக் கூறினார்.