மொத்தம் 50 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

மனித உணர்வுகளை வடித்த கவிதைகளின் தொகுப்பு ‘நீராம்பல்’

2 mins read
39104fd7-9ec6-42c7-8746-ff15eaa8c6c4
நூல் வெளியீட்டு மேடையில் (இடமிருந்து) ‘நீராம்பல்’ கவிதை நூலைப் புனைந்த கங்கா பாஸ்கரன், திருமதி திலகவதி அன்பழகன், கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். - படம்: பா. கங்கா

கல்வியாளர் பா. கங்காவின் ‘நீராம்பல்’ கவிதைத் தொகுப்பு, பிப்ரவரி 9ஆம் தேதி, உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் வெளியீடு கண்டது.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

“நீராம்பல் கவிதை நூல் மனித உணர்வுகளைப் பற்றியது. மகிழ்ச்சி, காதல், பிரிவு போன்றவற்றுக்கு ஆட்பட்டோரின் மன உணர்வுகள் கவிதையாக வடிக்கப்பட்டுள்ளன. கண்ட, கேட்ட, படித்த, அனுபவித்தவற்றின் கோவையே இந்நூல்,” என்றார் திருவாட்டி கங்கா.

பல்லாண்டுகளாகத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் கவிதை எழுதிக்கொண்டிருந்த அவர், 2023ஆம் ஆண்டு தேசியக் கலை மன்றம் நடத்திய தங்கமுனைப் போட்டியில் கலந்துகொண்டு கவிதைப் பிரிவில் முதல் பரிசு பெற்றார்.

“அப்போதே நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தேன். அதற்கு ஏதுவாக, போட்டியில் வென்றவர்களுக்காக தேசியக் கலை மன்றம் ஒரு தொடர்பிணைப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்தது,” என்றார் திருவாட்டி கங்கா.

கவிதைப் போட்டியின் தலைமை நீதிபதியான கனடாவைச் சேர்ந்த கவிஞர் சேரனின் ஊக்கத்தாலும் முயற்சியாலும் தன் கவிதைகள் நூலாக வெளியீடு கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

“கவிஞர் சேரன் என் கவிதைகளை ஆய்ந்து எனக்கு வழிகாட்டுதல் தந்தார். அத்துடன் காலச்சுவடு பதிப்பகத்தாருடன் இணைந்து நூல் வெளிவரவும் அவர் பெரிதும் துணைநின்றார்,” என்றார் திருவாட்டி கங்கா.

63 பக்கங்கள் கொண்ட ‘நீராம்பல்’ புத்தகத்தில் மொத்தம் 50 கவிதைகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் தொடர்ச்சியாக எழுதிய கவிதைகளில் மனத்திற்கு நெருக்கமான சிலவற்றைச் சேர்த்திருப்பதாக நூலாசிரியர் கங்கா கூறினார்.

“தங்கமுனைப் போட்டியில் வெற்றி ஈட்டித் தந்த நான்கு கவிதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் பிறந்து வளர்ந்து, 2001ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்து கல்வியாளராகப் பணிபுரியத் தொடங்கிய திருவாட்டி கங்கா, 2007இல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார்.

தானும் இலக்கியம் படைக்கவேண்டும் என விரும்பி கவிமாலை உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து தொண்டாற்றியதாக அவர் கூறினார்.

“கவிதை குறித்த பயிலரங்குகள் நடத்துவது, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டியாக இருந்தேன். கவிமாலை நடத்திய மாதாந்தரப் போட்டியில் சில மாதங்கள் பங்கேற்றேன். பரிசுகளும் பெற்றேன். கவிதை நூல்களை விமர்சிப்பது, கவியரங்கில் கவிதை வாசிப்பது, கவிதைகளுக்கு நடுவராக இருப்பது என கவிதை சார்ந்து இயங்கியதும் நான் கவிதை நூல் கொண்டுவரக் காரணிகளாக இருந்தன எனக் கூறலாம்,” என்றார்.

“விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அவற்றைக் கடந்துசென்று கவிதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும். அத்துடன், கவிதை தொடர்பான நூல்களை வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். நிச்சயம் ஒருநாள் கவிதை நமக்குக் கைவரும்,” என்று உறுதியாகக் கூறுகிறார் திருவாட்டி கங்கா.

குறிப்புச் சொற்கள்