ஓவியம் பொதுவாக அதிகம் மதிக்கப்படும், ரசிப்பதற்கு தனித்திறன் தேவை என்றும் கருதப்படும் கலை. நடப்பவற்றையும் கனவுகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கலை, காலப்போக்கில் பரிணமித்துப் பன்முக பாணிகளும் உருவாயின.
வடிவங்கள், நிறங்கள், ஊடகம், வெளிப்படுத்தும் கருத்துகளைப் பொறுத்து ஒவ்வொரு பாணியும் தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் சில அடிப்படை வகையைத் தெரிந்துகொள்வது ஓவியத்தின் மீதான ரசனையை மேம்படுத்தலாம்.
‘ரியலிஸம்’ எனும் யதார்த்தவாதம்
மக்கள், பொருள்கள், அன்றாடக் காட்சிகள், சுற்றுப்புறம் என நேரில் காணும் காட்சிகளை ஓவியமாக வரையும் பாணி இது. சாதாரண மக்களின் வாழ்க்கை யதார்த்தங்களைக் காட்டும் ஒரு சமூக வர்ணனை வடிவமாக இவை பெரும்பாலும் செயல்படுகின்றன.
இவற்றில் பாரம்பரியம், புராணங்கள், ஆன்மிகம், நாட்டுப்புறக் கதைகளை நேரடியாகச் சித்திரிக்கும் ஓவியங்களும் அடங்கும்.
நவீன ஓவியக்கலையின் தொடக்கமாகவும் அடுத்தடுத்து வந்த கலை, ஓவியம் சார்ந்த இயக்கங்களில் இது தாக்கம் ஏற்படுத்தியதாகவும் நம்பப்படும் பாணி.
இந்தியர் வாழ்க்கையின் அழகியலும் போராட்டங்களை வியத்தகு முறையில் வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த பிரபலமான ‘ராஜா ரவிவர்மாவின்’ ஓவியங்கள் அனைத்தும் ‘ரொமான்டிக் ரியலிஸம் பாணியில் அமைந்தவை.
‘ஃபோட்டோரியலிசம்’ எனும் மிகை யதார்த்தவாதம்
இது ‘ஹைப்பர்ரியலிசம்’ அல்லது ‘சூப்பர்-ரியலிசம்’ என்று குறிப்பிடப்படுகிறது. சிக்கலான காட்சித்தன்மையுடன் ஆழம், தெளிவு, உணர்வற்ற நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைவது இந்தப் பாணி ஓவியங்கள்.
புகைப்படக் காட்சிகளை ஓவியமாக்கும் போக்கும் இந்தப் பாணியில் அடங்கின. 60களில் தொடங்கிய இந்தப் பாணி ஓவியங்கள், 1990களின் முற்பகுதியில் துல்லியமான காட்சிகளை வழங்கும் மின்னிலக்கக் கருவிகளின் வருகையால் அதிகரிக்கத் தொடங்கின.
கற்பனைகளுக்கு உருவம் தரும் ஓவியக்கலைக்கு இந்தப் பாணி அச்சுறுத்தலாக அமையும் எனும் சர்ச்சைகளும் அக்காலகட்டத்தில் பரவலாக இருந்தது.
நியூயார்க் நகர வீதிகள், குறிப்பாக கடைகளின் கண்ணாடிக் கதவுகள், வாகனங்களின் கண்ணாடிகள் எனப் பிரதிபலிப்புத் தன்மை மிகுந்த பரப்புகளைத் தமது ஓவியங்களில் நேர்த்தியாக வழங்கிய ரிச்சர்ட் எஸ்டெஸ் இப்பாணியின் முன்னோடி ஓவியராகக் கருதப்படுகிறார்.
‘எக்ஸ்பிரஷனிஸம்’
ஒருவகையான சிதைந்த வடிவங்கள், கண்களைப் பறிக்கும் வண்ணங்கள்மூலம் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிக்கொணர்வது இந்த ‘எக்ஸ்பிரஷனிஸம்’ எனும் பாணி.
வலுவான, தனிப்பட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இவை சற்றே மிகைப்படுத்தப்பட்ட அம்சங்களை உள்ளடக்கும். அடிப்படை வடிவங்களைக் கொண்ட ‘கியூபிஸம்’, இவற்றைத் தொடர்ந்து உருவான ‘போஸ்ட் எக்ஸ்பிரஷனிஸம்’ ஆகியவையும் இந்த ஓவிய முறையின் அடியொற்றி வந்தவை.
‘ஸ்டாரி நைட்ஸ்’ உள்பட பல்வேறு பிரபல ஓவியங்களைப் படைத்த ‘வின்சென்ட் வேன் கோ’, பேப்லோ பிக்காசோவின் சில ஓவியங்கள் இந்தப் பாணியையொட்டி அமைந்தவை.
‘இம்ப்ரெஷனிஸம்’
பிரகாசமான நிறங்களில், ஒளிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி இது. பெரும்பாலும் குறுகிய தூரிகைத் திட்டுகளுடன் இயக்க உணர்வையும் இவ்வோவியங்கள் பிரதிபலிக்கும்.
இவை பெரும்பாலும் ஓவிய அறையில் இல்லாமல் வெளிப்புறச் சூழல்களிலிருந்து வரையப்படுபவை. இயற்கைக் காட்சிகளின் சித்திரிப்பு, இயற்கை ஒளியின் பிரதிபலிப்பு, ஒன்றோடொன்று கலக்காத நிறங்களைக் கொண்ட ஓவியங்கள் பெரும்பாலும் இந்தப் பாணியைச் சேர்ந்தவையாக இருக்கும்.
‘ஆப்ஸ்ட்ராக்ட்’ எனும் கருத்தியல் ஓவியம்
இந்த வகை ஓவியம், இயல்பான காட்சிகளை நேரடியாகச் சித்திரிக்காமல் நிறம், வடிவம் ஆகியவற்றால் குறிப்பாக உணார்த்துபவை.
இவை, ஒரு அனுபவத்தையோ, நினைவையோ, உணர்வையோ தூண்டும் விதமாக, பெரும்பாலும் புரிதலைப் பார்வையாளர்களிடம் அளிக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ராம்குமார் வரைந்த பல ஓவியங்கள் இந்தப் பாணியில் அமைந்தவை.
இவை தவிர, வடிவங்களை மட்டும் வைத்துப் பலவகை கண்ணோட்டங்களைக் காட்டும் ‘க்யூபிஸாம்’, சமகால பிரபலமான அம்சங்களைக் காட்டும் ‘மல்டி மீடியா ஆர்ட்’ எனப்படும் ‘பாப் ஆர்ட்’ ஆகியவையும் பர்வலாகப் பயன்படுத்தப்படும் ஓவிய பாணிகள்.
வெளிப்பாட்டு ஊடகம்
வெவ்வேறு பாணி மட்டுமின்றி, ‘மீடியம்’ எனப்படும் ஓவியம் வரையப் பயன்படுத்தப்படும் ஊடகம், பொருள்களைப் பொறுத்தும் ஓவியங்கள் வகைப்படுத்தப்படும்.
‘ஆயில் பெயிண்டிங்’, ‘அக்ரிலிக்’ எனும் தண்ணீரில் கலக்கக்கூடிய வண்ணங்கள், ‘டெம்பெரா’ (Tempera) எனும் பாரம்பரிய முறை ஓவியம், ‘என்காஸ்டிக்’ (Encaustic) எனும் மெழுகின் உதவியுடன் வண்ணங்களைக் கலக்கும் வடிவம் ஆகியவை பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முறை.