தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கும்பகோணத்தில் தயாரான சிங்கப்பூர் சிற்பி லீ குவான் யூவின் சிலை

2 mins read
2c843a85-4cc3-4aaf-9c53-dcd321f5775d
கும்பகோணத்தில் செய்யப்பட்ட திரு லீ குவான் யூவின் முழு உருவ வெண்கலச் சிலை சிங்கப்பூரை விரைவில் வந்தடையும். - படம்: நியூ வேதா கோவில் பணிகள்

நவீன சிங்கப்பூரின் சிற்பி என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் யூவின் முழு உருவ வெண்கலச் சிலையை கும்பகோணத்தில் செய்து சிங்கப்பூரில் இறக்குமதி செய்யவுள்ளார் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர்த் தொழிலதிபர் ஒருவர்.

பெயரைக் குறிப்பிட விரும்பாத தொழிலதிபர், திருவலஞ்சுழியில் உள்ள ‘நியூ வேதா கோவில் பணிகள்’ எனும் நிறுவனத்திடம் அச்சிலையைச் செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

ஆறடி உயரம், இரண்டு அடி அகலம், 170 கிலோகிராம் எடை கொண்ட கிட்டத்தட்ட 4,000 வெள்ளி (250,000 ரூபாய்) மதிப்பிலான சிலை, ஜூன் 12ஆம் தேதி தயாராகி, கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டது.

கூடிய விரைவில் அது சிங்கப்பூருக்குப் புறப்படும். சிங்கப்பூரைச் சென்றடைய ஒரு மாதமாவது ஆகும் என கணிக்கப்படுகிறது.

திரு லீயின் திட்டங்களால் தாம் உட்பட தமிழ்நாட்டிலிருந்து பலருக்கும் சிங்கப்பூரில் வாழ்வாதாரமும் வர்த்தக வாய்ப்புகளையும் கிடைத்ததால் அதற்கு நன்றிகூறும் வகையில் தொழிலதிபர் இச்சிலையை உருவாக்கியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

“அவர் சிங்கப்பூர் வந்ததிலிருந்து அவருக்கு திரு லீ மீது தனி ஈர்ப்பும் மரியாதையும் இருந்ததால் இத்தகைய சிலையை செய்ய பல நாள்களாகவே ஆசைப்பட்டாராம்,” என்றார் சிலையின் சிற்பிகளில் ஒருவரான “முத்து” எனும் முத்தையன் ராமலிங்கம், 40, கூறினார். அவர் உட்பட கிட்டத்தட்ட 20 சிற்பிகளின் கைவண்ணம் இச்சிலையில் உள்ளது.

முத்துவின் அண்ணன் “வேதா” எனும் வினோத், இச்சிலையை உருவாக்கிய மையச் சிற்பி. தந்தையுடன் குடும்ப வணிகமாக ‘நியூ வேதா’ நிறுவனத்தை அவர்கள் நடத்திவருகின்றனர். இவ்வாண்டு நிறுவனம் தம் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது.

எனினும், மாதத்திற்கு 20 அல்லது 30 மூன்று, நான்கடிச் சாமிச் சிலைகளையும் பல சிறிய சாமிச் சிலைகளையும் செய்துவரும் நிறுவனத்துக்கு லீ குவான் இயூ சிலையைச் செய்வது இதுவே முதன்முறை.

“தொழிலதிபர் எங்களிடம் முதலில் காட்டிய திரு லீயின் சிறு உருவச் சிலையைக் கொண்டு மூன்றரை மாதங்களில் நாங்கள் களிமண் அச்சு செய்தோம்.

“அதன்பின்பு அவரே நேரில் வந்து, எங்களுடன் நான்கைந்து நாள்கள் தங்கி, நிறைய மாற்றங்களைக் கூறினார். அதன்பின்பு, நாங்கள் வெண்கலத்தை உருக்கி, வார்த்து, கிட்டத்தட்ட 40 பகுதிகளை ஒன்றாக சூடேற்றி இணைத்தோம்.”

“ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும் நாங்கள் துருபிடிக்காத அளவிற்கு இச்சிலையைச் செய்துள்ளோம். அனைத்தும் கையால் செய்யப்பட்டது. அதுதான் கும்பகோணத்தின் சிறப்பு.” என்றார் முத்து.

இதனால் திரு லீயைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறிய முத்து, சென்னையில் அவர் குறித்து நூல்கள் படிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

சுத்த வெண்கலத்தினாலான 7,300 வெள்ளி (450,000 ரூபாய்) ஏழு அடி உயரம், 390 கிலோகிராம் எடை கொண்ட இராஜராஜ சோழன் சிலையையும், ஓர் அடி உயரம் கொண்ட தஞ்சை பெரிய கோயில் உருவச்சிலையையும் அதே தொழிலதிபருக்காக செதுக்கியுள்ளது ‘நியூ வேதா’. அவரது சென்னை நிலையத்தில் அவை வைக்கப்படும்.

திரு லீ குவான் யூ சிலையோடு ஏழு அடி இராஜராஜ சோழன் சிலையும் ஓரடி தஞ்சை பெரிய கோயில் உருவச்சிலையும் செதுக்கப்பட்டன.
திரு லீ குவான் யூ சிலையோடு ஏழு அடி இராஜராஜ சோழன் சிலையும் ஓரடி தஞ்சை பெரிய கோயில் உருவச்சிலையும் செதுக்கப்பட்டன. - படம்: நியூ வேதா கோவில் பணிகள்
குறிப்புச் சொற்கள்