பண்பாடுள்ள மனிதர்கள், நன்னெறி வழி சென்று குற்றங்களைத் தவிர்க்க இயன்றவரை முயல்வர். அறநெறிகளைக் கற்று, நன்னடத்தை உள்ளவர்களுடன் பழகி அவர்கள் தங்களது எண்ணங்களைத் தொடர்ந்து உயர் தரத்தில் வைத்துக்கொள்ள முயல்வர்.
சில நேரங்களில் நாம் கவனக்குறைவாலும் குழப்பத்தாலும் தவறு செய்யக்கூடும். அல்லது, பிறர் நமக்குத் தவறு இழைத்திருக்கலாம். பிறரை மன்னிப்பது, பிறரிடம் மன்னிப்புக் கேட்பது, நம்மிடம் நாமே மன்னிப்புக் கேட்பது ஆகியவை முக்கியம் என்று ‘தி கம்பேஷன் கிரானிக்கல்ஸ்’ எனும் மனோவியல் ஆய்வுத்தொகுப்பு குறிப்பிடுகிறது.
“தவறு செய்த பின் ஏற்படும் குற்ற உணர்வு நமக்கு வலித்தாலும் நமது சிந்தனைத் தரத்தை உயர்த்துவதற்கு அந்த வலியே உதவுகிறது. ஆனால் அந்தக் குற்றவுணர்வு மட்டுமீறி, அவமான உணர்வாக உருமாறினால் நாம் மீள்வதற்குப் பதிலாக வீழ்கிறோம்,” என்று அந்த ஆய்வுத்தொகுப்பின் எழுத்தாளர்களில் ஒருவரான திருவாட்டி பெவர்லி கூறியுள்ளார்.
நமது குற்றம் குறைகளைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டு பயனில்லாமல் வருந்துவது, சுய பராமரிப்பையும் மேம்பாட்டையும் கைவிடுவது, நமக்கு நல்லவற்றை அனுபவிப்பதற்கான தகுதி இல்லை என நினைப்பது ஆகியவை கட்டுப்பாடற்ற, சுய மதிப்பின்மையால் ஏற்படுகின்றன.
இவ்வாறு, சுய மதிப்பை இழந்தவர்கள் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் துன்புறுத்துகின்றனர்.
ஆரோக்கியமற்ற உணவு, மதுபானம், புகைப்பிடித்தலுக்கு அடிமையாவது, காரணமின்றி கோபம் அடைந்து, பிறரிடம் எரிந்து விழுவது, குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றவற்றை அவர்கள் செய்கின்றனர்.
நம்மை நாமே மன்னித்தால் தெளிவு பெறுவோம்
“நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்,” என்கிறது ஒரு பாடல்.
நம் மனதில் குற்ற உணர்வும் தாழ்வுணர்வும் தொடர்ந்து தாண்டவமாடும்வரை நமது நிறைகளும் குறைகளும் உண்மையாக நமக்குப் புலப்படாது. நமது நிறைகளை நாம் அங்கீகரிக்காமல் இருந்தோமானால் அவையும் நம்மைவிட்டு தேயக்கூடும். ஏனென்றால் நாம் காப்பாற்றும் நற்குணங்கள், அபாய காலங்களிலும் குழப்பமான சூழ்நிலைகளிலும் நமக்கான எல்லைக்கோடுகளாக செயல்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தாழ்வு மனப்பான்மையால் முடங்கிப்போனால் நாம் திருத்திக்கொள்ளவேண்டிய குறைகளும் நமக்குத் தெரியாமல் போகலாம். பிறர் அவற்றைச் சுட்டிக்காட்டினாலும் அது நம் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாகத் தெரியலாம்.
எப்படி நாம் தவறு செய்ய நேர்ந்தது என்பதை முதலில் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது கடந்தகால வேதனைகளால் நமக்குள் ஆழமான வடுக்கள் ஏற்பட்டிருக்கலாம். நாம் ஏங்கிய அன்பையும் பாராட்டையும் பெறத் தவறியிருக்கலாம். குறுகிய நேர இன்பத்திற்காக நெடுநாள் துன்பத்தைத் தரக்கூடிய காரியங்களைச் செய்திருக்கலாம்.
போனது போகட்டும். இனியாவது உள்ளத்தைத் தூய்மையுடன் வைத்திருக்க முடிவு எடுங்கள்.
அறியாமல் தவறு செய்வது மனித இயல்பு என்பதை அங்கீகரிப்பது மனிதத்தன்மைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு என்று டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் மனித மேம்பாட்டுத் துறையின் இணைப் பேராசிரியர் கிர்ஸ்டின் நெஃப், ‘சுய-பரிவு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் உங்களை மன்னித்துக்கொள்வதால் உங்கள் செயல்களுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு அகன்றுவிடாது. ஆனால், உங்களை நிதானப்படுத்தி, உங்கள் தவற்றை முழுமையாக உணரப் பாருங்கள்,” என்கிறார் பேராசிரியர் கிர்ஸ்டின்.
தவற்றை உணரும்போது உங்கள் மனத்தில் சில படிப்பினைகள் உதிக்கும். அந்தப் படிப்பினைகளை உணர்ந்து, உங்கள் அறிவுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். எல்லை கடந்த வருத்தம், இறங்குமுகமான மனப்போக்கைத் தரும் என்பது அந்த நூலின் சாராம்சமாக உள்ளது.