தஞ்சோங் காத்தோங் சவுத் சாலையில் ஜூலை 26ஆம் தேதியன்று திடீரென ஏற்பட்ட புதைகுழியில் கார் ஒன்று விழுந்தது, சிங்கப்பூரில் மிகவும் அசாதாரணமான நிகழ்வு.
சம்பவத்தின்போது, அருகில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநரைக் காப்பாற்றியதை அடுத்து அந்தப் பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கு முன்னதாக சாலைப் புதைகுழிகள் ஏற்பட்ட சம்பவங்கள் சிங்கப்பூரில் நடந்துள்ளன.
நவம்பர் 2022ல் ஃபெரர் ரோட்டிலுள்ள துணைச்சாலை (slip road) ஒன்றில் புதைகுழி ஏற்பட்டது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ‘டிடிஎஸ்எஸ்’ எனப்படும் ஆழ்சுரங்க கழிவுப்பொருள் கட்டமைப்பின் இரண்டாவது கட்டத்திற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அப்புதைகுழி தோன்றியது.
ஆழ்துளை இயந்திரம் ஒன்றின் பழுதுபார்ப்பின்போது தரைப்பகுதி நிலைகுலைந்ததாகத் தகவல் வெளிவந்தது. அந்தச் சம்பவத்தால் எவரும் பாதிக்கப்படவில்லை. மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்டன.
2014ல் அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட் சாலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நேர்ந்தது.
டவுண்டவுன் எம்ஆர்டி ரயில்பாதைக்கான கட்டுமானத்தளத்திற்கு 50 மீட்டருக்கு அருகிலுள்ள சாலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பிளவில் சரக்கு லாரி ஒன்று மூழ்கியது.
தொடர்புடைய செய்திகள்
லாரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.
2013ல் சிங்கப்பூரில் சில சம்பவங்கள் நடந்தன.
கெப்பல் ரோட்டில் பழைய நீர்க்குழாய் வெடித்ததில் சாலைப் புதைகுழி உண்டானது. அது, பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
அதே ஆண்டு கிளமெண்டியில் மற்றொரு புதைகுழி ஏற்பட்டபோது அதனைத் தவிர்க்க முயன்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.
உட்லண்ட்ஸ் ரோட்டின் ஒரு பகுதியிலும் இதே போல புதைகுழி ஏற்பட்டது. டவுண்டவுன் எம்ஆர்டி ரயில்பாதைக்கான கட்டுமானப் பணிகளின்போது நீர்க்குழாய் தவறுதலாக வெடித்ததால் புதைகுழி ஏற்பட்டது.
2008ல் வட்ட ரயில் பாதைக்காக மேற்கொள்ளப்பட்ட சுரங்கப் பணிகளால் ஹாலந்து ரோட்டுக்கு அருகிலுள்ள கார்ன்வோல் கார்டன்ஸ் சாலையில் மூன்று மீட்டர் ஆழமான புதைகுழி தோன்றியது.
எவரும் காயமடையவில்லை. ஆனால் நான்கு வீடுகளுக்குத் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. சாலைப் பழுதுபார்ப்புப் பணிகள் நான்கு வாரங்கள் நீடித்தன.
நீர்க்குழாய் சீர்கேடு, மண்ணரிப்பு, கட்டுமானம் தொடர்பிலான காரணங்களால் நிலத்தடியில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை, இந்தச் சம்பவங்களுக்கு வித்திட்டன.
சம்பவம் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருந்தபோதும் அவை அனைத்திற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; தீவிரமான ஆய்வுகள் செய்யப்பட்டன.
அண்மையில் நடந்த சம்பவத்தின் தொடர்பில் கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் தன்னிச்சையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.
சிக்கல்மிகு அந்தச் சம்பவத்திற்குரிய விசாரணை முடிவைப் பெறுவதற்குச் சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஆணையம் ஜூலை 28ஆம் தேதி தெரிவித்தது.
பொறியியல் அணுகுமுறைகள் மேம்பட்டு வர, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மாறவேண்டும்.
சிங்கப்பூர் தொடர்ந்து மேம்பட்டு புதுமைகளைக் காணும் நேரத்தில் அவ்வப்போது நம் கட்டமைப்புக்கு இடர் வரலாம்.
அவை எந்த அளவுக்குத் துரிதமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கையாளப்படுகின்றன என்பது முக்கியம்.