சிங்கப்பூருக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் புத்தாண்டுக் குதூகலம்

3 mins read
முகங்களில் பூரிப்பு. இசைமழையில் நனைந்த உற்சாகம். திசையெங்கும் ஒலிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். வானை மிளிரச் செய்யும் வாணவேடிக்கைகள். 2025க்குக் களைகட்டும் வரவேற்பு.
006a164b-0e25-4fb0-b02e-8dfce0fec0ab
கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சுவையான பிரியாணி உண்டு மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ரவி சிங்காரம்

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் புதிய கனவுகள் இருக்கும்.

அவ்வகையில், சிங்கப்பூருக்குப் பல லட்சியங்களுடன் வந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அவை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் புத்தாண்டைக் கோலாகலமாக வரவேற்றனர்.

தீவு முழுவதும் வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களில் புத்தாண்டை வரவேற்க பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

என்டியுசியும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து தொடங்கிய வெளிநாட்டு ஊழியர் நிலையம், தான் இயக்கும் நான்கு பொழுதுபோக்கு நிலையங்களில் (சூன் லீ, பெஞ்சுரு, துவாஸ் சவுத், தெருசான்) முதன்முறையாகப் பெரிய அளவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள், பங்காளிகள், சமூகத்தினர் இணைந்து சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் இன்றியமையாத பங்கைக் கொண்டாடினர்.

ஆகஸ்ட் 2024 முதல் மூன்று ஆண்டுகளுக்குத் துவாஸ் சவுத், தெருசான், பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையங்களை இயக்கும் பொறுப்பை என்டியுசி ஏற்றுக்கொண்டது. அதுவரை, சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தை மட்டுமே அது இயக்கிவந்திருந்தது.

கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, என்டியுசியின் வெளிநாட்டு ஊழியர் பிரிவுக்கும் (வெளிநாட்டு ஊழியர் நிலையம், இல்லப் பணியாளர் நிலையம்) ஆல்ஸ்வெல் டிரேடிங் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது.

இந்த ஈராண்டு ஒப்பந்தம்வழி ஆல்ஸ்வெல் டிரேடிங், அதன் சுகாதார, ஊக்க பானங்களைப் பல்வேறு வெளிநாட்டு ஊழியர் நிலைய, இல்லப் பணியாளர் நிலைய நிகழ்ச்சிகளுக்கும் வழங்கி ஆதரவு அளிக்கும். இதன்வழி, வெளிநாட்டு ஊழியர்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அந்த பானங்களை அருந்தலாம்.

மற்ற பொழுதுபோக்கு நிலையங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் விரிவான அளவில் நடைபெற்றன.

கிராஞ்சியிலும் செம்பவாங்கிலும் மொனீர் கான், துவாஸ் சவுத்தில் வினைதா சிவகுமார், கிராஞ்சியில் அருள்பிரகாசம் மற்றும் செளந்தர்யா, செம்பவாங்கில் மூக்குத்தி முருகன், தெருசானில் வி‌ஷ்ணுபிரியா, ரே‌ஷ்மா ‌‌‌ஷாம் என பல அனைத்துலகப் பாடகர்களும் மக்களைப் பரவசப்படுத்தினர். மலேசிய நடனக்குழுவும் மேடையை அதிரவைத்தது.

பிரியாணி, பர்கர் என அறுசுவை உணவும், அதிர்‌ஷ்டக் குலுக்கல்களும் நிகழ்ச்சிக்குச் சுவையூட்டின.

கிராஞ்சி, பெஞ்சுருவில் வாணவேடிக்கைகளும் இடம்பெற்றதால் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது.

“நான் தற்போது வாகன ஓட்டுநராக இருக்கிறேன். என் சம்பளம் மாதம் 3,000 வெள்ளிக்கு உயரும் அளவிற்கு நன்கு வேலைசெய்யவேண்டும் என்பதே என் புத்தாண்டு இலக்கு. என் குடும்பத்தையும் முன்னேற்ற விரும்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக என்னை ஊக்கப்படுத்திய சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் நன்றிகூறிக்கொள்கிறேன்,” என்றார் கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையக் கொண்டாட்டத்தில் பங்குபெற்ற இளங்கோவன் சுப்பையா, 39.

“2025ல் நமக்கு இருக்கும் தனித்திறமைகளை வெளிப்படுத்தலாம். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் அவற்றை நன்கு பயன்படுத்தி மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன்,” என்றார் நடிகர்கள்போல் பல குரலில் பேசக்கூடிய வெளிநாட்டு ஊழியர் சுப்பையன் பழனியப்பன், 35. அவர் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுவிலும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்திலும், கோவில்களின் ‘சிங்கை ஃபிரெண்ட்ஸ்’ குழுவிலும் தொண்டூழியம் புரிந்துவருகிறார்.

வெளிநாட்டு ஊழியர்களின் முகங்களில் தென்பட்ட சிரிப்பும் உற்சாகமும், தங்களது எல்லாக் கனவுகளும் நனவாகி, புத்தாண்டு வளமிக்க, இன்பமானதாக அமையும் என்ற அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்