உரையாடலை ஊக்குவிக்கும் பாரம்பரிய விளையாட்டுக் கண்காட்சி

2 mins read
5366792d-30a0-47b1-b1e0-6ee77804e3f1
இந்திய மரபு சார்ந்த பரமபத விளையாட்டுப் பலகை புதிய கண்காட்சியில் ஒரு கலைப்பொருளாக இடம்பெற்றுள்ளது. - படம்: ஆசிய நாகரிக அரும்பொருளகம்

அறிவுத்திறன், சமூகப் பிணைப்பு, படைப்பாற்றல், நற்சிந்தனைகள் ஆகியவற்றை வளர்க்கும் விதமாக அமைந்த பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

‘விளையாடுவோம்! ஆசிய விளையாட்டுகளின் கலை, வடிவமைப்பு’ (Let’s Play! The Art and Design of Asian Games) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சியை 2025 செப்டம்பர் 5 முதல் 2026 ஜூன் 7 வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இந்திய மரபு சார்ந்த பரமபதம், தாயக்கட்டம் தொடங்கி முகலாயர் ஆட்சிக் காலத்தில் உருவான ‘கஞ்சிஃபா’ எனும் விளையாட்டுவரை பயன்பாட்டில் உள்ள, அருகிவரும், அழிந்துவிட்ட விளையாட்டுகள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமன்றி மலேசிய, சீன, ஜப்பானிய, இந்தோனீசிய பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 150 கலைப்பொருள்கள் கொண்ட இக்கண்காட்சியில், பார்வையாளர்கள் பங்கேற்று விளையாடும் அனுபவத்தை வழங்கும் சில நிறுவல்களும் இடம்பெற்றுள்ளன.

எல்லாப் பண்பாடுகளிலும் அவற்றின் வாழ்வியலுடன் பலகை சார்ந்த விளையாட்டுகளுக்குத் தொடர்புண்டு. இது அவர்களது சிந்தனை, உரையாடல்கள் எனப் பலவற்றையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருக்கும். அவை குறித்துப் பேசுவது சமூக ஒன்றிணைவைச் சுட்டுவதுடன் பண்பாட்டுப் பரிமாற்றங்களுக்கும் வழிவகுக்கும் என்று ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் இயக்குநர் கிளமென்ட் ஆன் கூறினார்.

விளையாட்டுகள், அக்காலகட்டத்தில் இருந்த சமூக, பண்பாட்டு விழுமியங்கள், நம்பிக்கைகளின் வெளிப்பாடாகவும் இருப்பதை இக்கண்காட்சி புலப்படுத்துகிறது. சில கதைகளும், சொற்களும் வெகுதொலைவு பயணித்திருப்பதையும் கண்காட்சி உணர்த்துவதாகக் குறிப்பிட்டார் அதன் வடிவமைப்பில் பங்காற்றிய மாளவிகா அகர்வால்.

“எடுத்துக்காட்டாக, ‘சதுரங்கம்’ எனும் பெயரில் ஆறாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் இந்தியாவில் உருவான போர்த்திறன்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு, உலக அளவில் பல்வேறு இடங்களுக்கும் சென்று, பல்வேறு மாற்றங்களுடன் இன்றளவும் விளையாடப்பட்டு வருகிறது. இது நிச்சயமாக வியப்பளிக்கும் ஒன்று,” என்றும் சொன்னார் மாளவிகா.

இது வெறும் கண்காட்சி என்பதைத் தாண்டி, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தோர்க்கு இடையிலான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு வட்டாரத்திலும் பல்வேறு காலகட்டங்களில் நுணுக்கமான கலைநயத்துடன், அரிய பொருள்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருள்களை இக்கண்காட்சியில் பார்க்க முடியும்.

கடந்த காலம் மட்டுமன்றி, விளையாட்டுகளின் எதிர்காலத்தையும் காட்டும் வண்ணம், மனிதருடன் சதுரங்கம் விளையாடும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ‘சென்ஸ் ரோபோவும்’ இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், அண்மைக் காலமாகப் புகழ்பெற்றுவரும் பலகை, அட்டை விளையாட்டுகளை விளையாடும் வகையில் சிறு ‘விளையாட்டுக் கூடமும்’ அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்