பண்டிகைக் காலத்தில் உணவு வீணாகுவதைத் தடுக்க வழிகள்

அளந்து சமைப்பதும் பகிர்ந்து கொடுப்பதும்

3 mins read
6e79250a-445d-4bd7-8fb9-59c39c5023cc
பண்டிகைக் காலத்தில் உணவு விரயத்தை தடுக்க பல வழிகள் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீபாவளி காலத்தில் திருவாட்டி செல்வரசி சிவா, 60, உணவை அளந்துதான் சமைப்பார்.

உணவை வீணாக்கக்கூடாது என்ற கொள்கையைப் பல காலமாகப் பின்பற்றி வரும் அவர், விருந்தினர்கள் பலர் வந்தாலும் குறைவான அளவில் சமைப்பது, மீதமிருக்கும் உணவை விருந்தினர்களுக்குக் கட்டிக் கொடுத்துவிடுவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்.

உடல்நலத்தில் அக்கறை கொண்டிருப்பதால் எப்போதுமே வீட்டில் குறைந்த அளவில் சமைக்கும் அவர் முடிந்தளவில் உணவு விரயம் ஆவதைத் தடுக்க முயற்சி எடுக்கிறார்.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் கொண்டாட்டம் என்பதால் வகை வகையான பலகாரங்கள், மணமான பிரியாணி, கோழி சம்பால், இறைச்சிப் பிரட்டல் போன்ற உணவுகளுடன் அறுசுவையான விருந்தைப் படைக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம்.

விருந்தில் பல வகையான உணவு வகைகள் இருப்பதால் அனைத்திலும் சிறிதளவு எடுத்து சாப்பிடும்போது உணவு வகைகள் மீதமாக வாய்ப்புகள் அதிகமாகின்றன.

விருந்தினர்கள் வயிறார உண்ண வேண்டும் என்பதற்காகத் தேவைக்கு அதிகமான அளவில் உணவு வகைகளை வீட்டில் தயார் செய்வதும் அல்லது ஆர்டர் செய்வதும் இயல்பு. ஆனால் உணவு மீதமாகும் போது அவற்றைக் குப்பையில் கொட்ட நேரிடுகிறது.

கடைகளில் தீபாவளி விற்பனைக்குப் பிறகு விற்காமல் இருக்கும் பலகாரங்களைச் சேகரித்து வெளிநாட்டு ஊழியர்களிடம் தருகிறார் திருவாட்டி செல்வரசி.

விருந்தினர் எண்ணிக்கையை முன்கூட்டியே உறுதிப்படுத்துவது

அஞ்சனா மனோகரனின், 29, நிச்சயதார்த்தத்திற்கு 1,000 பேருக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டது. எனினும், 900 பேரே வந்திருந்தனர். உணவு மீதமாகி குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனால் தீபாவளிப் பண்டிகையின் போது வீட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்வதாக அஞ்சனா கூறினார்.

குறைந்த அளவில் சமைத்து மீதமுள்ள உணவை அண்டை வீட்டாருக்குத் தருவதாகவும் அவர் சொன்னார். தீபாவளி அன்று உணவு மீதமாகும்போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதும் உண்டு.

அளந்து சமைப்பது

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ‘ஸ்பைசி கிச்சன்’ எனும் வீட்டு அடிப்படையிலான உணவுத் தொழிலை நடத்தி வரும் கீதா, 46. அளவுக்கு அதிகமாக ஆர்டர்களை எடுப்பதில்லை.

அதிகபட்சம் 150 ஆர்டர்கள்தான் எடுப்பார். அளந்து சமைக்கும் அவர், மீதமாகும் உணவை வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக வழங்குகிறார்.

இதனால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற கீதா கடைசி நேரத்தில் சில வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ரத்து செய்யும்போது அந்த உணவை இல்லங்களுக்கும், வசதி குறைந்த குடும்பங்களுக்கும் தந்து விடுவதாகக் கூறினார்.

விரயத்தைத் தவிர்க்க வழிகள்

‘அம்மணி கேட்டரிங்’ நிறுவனத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பண்டிகை ஆர்டர்கள் எடுக்கப்படுவதில்லை.

இதனால் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடிவதாக அம்மணி கேட்டரிங் நிறுவனத்தில் மனிதவள பிரிவின் வித்தியா நாயக்கர், 42, சொன்னார்.

வாடிக்கையாளர்களும் உணவு விரயத்தை கருத்தில் வைத்துக்கொள்வதாக சொன்ன வித்தியா, தேவைக்குக் குறைவான அளவில்தான் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வதாகத் தெரிவித்தார்.

உணவு விரயத்தைக் குறைக்க தேசிய சுற்றுப்புற வாரியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் இணையத்தளத்தில் பல எளிய வழிகள் இடம்பெற்றுள்ளன.

உணவுக் கழிவுகளை நிர்வகிக்கும் சிறந்த வழி, முதலிலேயே அதைத் தவிர்ப்பது. மீதமுள்ள உணவை மறுபகிர்வு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்