பல்வகை விளையாட்டுத் திட்டத்துக்கு $500,000 நன்கொடை

பல்வகை விளையாட்டுத் திட்டத்துக்கு $500,000 நன்கொடை

2 mins read
பயனாளிகளில் சிறுவர்களும், சவால்மிக்கப் பின்னணிகள் அல்லது சிறப்புத் தேவைகள் கொண்ட இளையர்களும் அடங்குவர்.
15a40251-2058-45f8-beb2-ed524d143216
‘ஸ்போர்ட்கேர்ஸ்-லீ அறக்கட்டளை’ பல்வகை விளையாட்டுத் திட்டத்துக்காக ‘விஷன் 2030’ நிதிக்கு 500,000 வெள்ளி வழங்கியது லீ அறக்கட்டளை. இதற்கு முன், அது அந்நிதிக்கு 2019லிருந்து மொத்தம் 111,000 வெள்ளி வழங்கியிருந்தது. - படம்: ஸ்போர்ட் எஸ்ஜி
multi-img1 of 4
Google News Preferred Icon

தொடக்கநிலை 6ல் பயின்றபோது நூர் ஆய்ஷாவுக்கு ‘ஸ்கோலியோசிஸ்’ எனும் நெளிமுதுகுப் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. முதுகுக்கு அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது என மருத்துவர் அவரிடம் கூறினார்.

காவல்துறையில் சேரும் அவரது சிறுவயதுக் கனவுக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற கவலையால் கலங்கினார் ஆய்ஷா, 16.

முதுகை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதன் பின்பு மூன்று மாதங்கள் மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் அலைந்த ஆய்ஷா, படிப்படியாக விளையாட்டுகளுக்குத் திரும்பினார்.

அவரது விளையாட்டுப் பயணத்திற்கு உதவி வருகிறது, ஸ்போர்ட்கேர்ஸ்-லீ அறக்கட்டளை பல்வகை விளையாட்டுத் திட்டம்.

சவால்மிக்கப் பின்னணிகளைச் சார்ந்த இளையர்களுக்கு விளையாட்டுகளில் வாய்ப்பளிக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது.

இதில் பங்குபெறுவோருக்கு ஆண்டு முழுவதும் ஓட்டம், நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவற்றில் வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்படுவதுடன், வருடாந்திரப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

அவ்வகையில் புதன்கிழமை (ஜூன் 12) ‘லீ அறக்கட்டளை ‘-டூயத்லான்’ எனும் வருடாந்திர இருவகைப் போட்டிகளில் மூன்றாம் ஆண்டாகப் பங்குபெற்றார் ஆய்ஷா. அதில் ஓடுவது, மிதிவண்டி ஓட்டுவது என இரு அங்கங்கள் இருந்தன.

‘100பிளஸ் புரொமனாட்’டில் நடந்த அப்போட்டியில் ‘எம்ஐஜே’ மையத்தின் சிறப்புத் தேவையுடைய இளையர்களும் நார்த்லைட் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

“இதன்மூலம் முயற்சியைக் கைவிடாமல் இருப்பதன் அவசியத்தை உணர்கிறேன். என்னைப் போன்று சவாலை எதிர்கொள்பவர்களுக்குத் தொடர்ந்து உதவ விரும்புகிறேன்,” என்றார் நார்த்லைட் பள்ளியில் பயிலும் ஆய்ஷா.

$500,000 நன்கொடை வழங்கும் திரு லயனல் லீ (நடுவில்), பளு தூக்குதலில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ள அவருடைய மகன் லியோ (வலது), நார்த்லைட் பள்ளி மாணவி நூர் ஆய்ஷா (இடது).
$500,000 நன்கொடை வழங்கும் திரு லயனல் லீ (நடுவில்), பளு தூக்குதலில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ள அவருடைய மகன் லியோ (வலது), நார்த்லைட் பள்ளி மாணவி நூர் ஆய்ஷா (இடது). - படம்: ரவி சிங்காரம்

கூடுதல் நிதியாதரவு

ஸ்போர்ட்கேர்ஸ்-லீ அறக்கட்டளை பல்வகை விளையாட்டுத் திட்டத்துக்காக, லீ அறக்கட்டளை இதுவரை கொடுத்துள்ள ஆகப் பெரிய தொகையாக $500,000ஐ நிகழ்ச்சியில் வழங்கியது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இது பயன்படும்.

‘ஓர் அணி சிங்கப்பூர்’ நிதியும் இதற்கு நிகராக வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையில் நன்கொடையளிக்கும்.

2019ல் தொடங்கியபோது இருந்த 64 இளையர்களிலிருந்து, இன்று 500க்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டம் விரிவடைந்துள்ளது. இன்று தொடக்கநிலை மாணவர்களையும் சிறப்புத் தேவையுடைய இளையர்களையும் இத்திட்டம் உள்ளடக்குகிறது.

லீ அறக்கட்டளையின் நிறுவனர் லயனல் லீ, கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுதும் 90க்கும் மேற்பட்ட நெடுந்தொலைவு ஓட்டங்களை முடித்துள்ளார். 2013ல் சிங்கப்பூருக்கு வந்த அவர், “ஒரு புதிய சிங்கப்பூரராக நம் சமூகத்திற்குப் பங்காற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” எனக் கூறினார்.

முதன்முறையாக மூவகைப் போட்டி

புதிய நிதியாதரவை முன்னிட்டு, ஜூன் 12ஆம் தேதி 100பிளஸ் புரொமனாட், ஓசிபிசி நீச்சல் மையத்தில் ஸ்போர்ட்கேர்ஸ்-லீ அறக்கட்டளை சார்பில் மூவகைப் போட்டிகள் முதன்முறையாக நடைபெற்றன. ஓட்டம், மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல் என மூன்று அங்கங்களை அது கொண்டிருந்தது. 7ஓக்ஸ் மாணவர் பராமரிப்பு நிலைய சிறுவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

இருவகைப் போட்டி, மூவகைப் போட்டி எனும் இரண்டிலும் கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

முதன்முறையாக நடைபெற்ற ‘ஸ்போர்ட்கேர்ஸ் - லீ அறக்கட்டளை’ மூவகைப் போட்டி. 
முதன்முறையாக நடைபெற்ற ‘ஸ்போர்ட்கேர்ஸ் - லீ அறக்கட்டளை’ மூவகைப் போட்டி.  - படங்கள்: ஸ்போர்ட் எஸ்ஜி, ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்
விளையாட்டுமிதிவண்டிநீச்சல்நன்கொடை