மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கையைப் பதிவுசெய்யக் கூடியது, அவர் எங்கு சென்றாலும் அலைபோன்ற கரவொலியை எழுப்பும் ‘உடன்பிறப்பே’ எனும் ஒற்றைச் சொல்.
வயது, பால் பேதமில்லாத அச்சொல்லை கலைஞரின் அடையாள முகப்பாக பாவித்தார், கலைஞரின் நினைவலைகள் அலைமோதிய அவரின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் கனிமொழி கருணாநிதி.
இளையருக்கு அவரின் சகாப்தம் கடத்தப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், எத்தனை தோல்விகள் நேரிட்டாலும் துவண்டுவிடாத கலைஞரின் மனவுறுதி இன்றைய இளையருக்கான முக்கியச் செய்தியாக சுட்டிக்காட்டியது கரவொலி எழுப்பியது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கலைஞர், 1999ல் சிங்கப்பூருக்கு மூன்று நாள்கள் வருகைபுரிந்தார். அப்பயணத்தைச் சார்ந்த பல தகவல்களைத் திரட்டி தொகுத்து ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளார் செம்மொழி இதழ் ஆசிரியர் எம்.இலியாஸ்.
செப்டம்பர் 1ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறிய இந்நூலின் வெளியீட்டில் ஏறத்தாழ 300 பேர் கலந்துகொண்டனர்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் கலைஞரின் மகளுமான கவிஞர் கனிமொழி தந்தையின் பண்புகளைப் பறைசாற்றும் அனுபவங்களைப் பகிர்ந்தது நிகழ்வுக்கு சுவையூட்டியது.
தொண்டர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் நினைவில்கொள்ளும் தன்மை கலைஞரை மக்கள் மனதில் நிலைநாட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விமர்சனங்கள் குறித்த அவரின் திறந்த மனப்பான்மையே தனிப்பட்ட அளவில் தமது மிக முக்கியப் படிப்பினை என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“கலைஞர் சந்திக்காத எதிர்ப்புகள் இல்லை. தனி ஆளாக நின்று போராடும் தைரியம் படைத்தவர் அவர். தமது 80களில் கைது செய்யப்பட்டு இரவு முழுக்க அலைக்கழிக்கப்பட்டபோதும் அவர் சோர்ந்துவிடவில்லை,” என்று கனிமொழி கூறியது மக்களின் வரவேற்பைப் பெற்றது.
தமிழர் அடையாளம் வேரூன்றும் நோக்கில் வாழ்நாளை அர்ப்பணித்து செயல்பட்ட தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் வரிசையில் சிங்கப்பூரில் அத்தமிழுணர்வின் வித்துகளை தம் பயணத்தின்மூலம் கலைஞர் கருணாநிதி இட்டுள்ளார்.
அவ்வித்துகள் துளிர்த்து வளர்ந்ததற்கான அடையாளமாக ஆகஸ்ட் இறுதியில் அரங்கேறிய ‘ஆனந்த கொண்டாட்டம்’ நிகழ்வை கனிமொழி குறிப்பிட்டார்.
கலைஞரின் பயணத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது, அவர் சிங்கப்பூர் உள்ளரங்கில் நிகழ்த்திய இலக்கியச் சொற்பொழிவு. அதில் பல இலக்கியச் சான்றுகளை மேற்கோள்காட்டி தமிழ்ப்பற்றைக் கூட்டிய அவர், தமது உள்ளூர் நேர்காணல்களிலும் தமிழர் தாய்மொழிக்குக் கொண்டுள்ள கடமையை வலியுறுத்தினார். அவரின் அத்தகைய தமிழ்க் கலையியல் ஈடுபாட்டைப் போற்றி பாடிய உள்ளூர்க் கவிஞர்களின் படைப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
கலைஞரின் சிங்கப்பூர் பயணத்தின் ஒரு முக்கிய நோக்கமானது, சிங்கப்பூர்-தமிழ்நாடு இடையே கலாசாரத் தொடர்பை வலுப்படுத்துவதாக இருந்தது. அதற்கான அடிப்படை முதலீடு, இங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் உருவாக்கிக்கொள்ளும் உணர்வுபூர்வமான, ஆழமான தொடர்பே என்று தமது நூல் ஆய்வு உரையில் குறிப்பிட்டார் தேசிய பல்கலைக்கழக மாணவி ஆ.விஷ்ணு வர்தினி.
“அச்சொற்பொழிவு நெடுக பலவகையான தகவல்களை வெவ்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள்காட்டியும் அவற்றை நவீன சூழலுக்கேற்ப விளக்கியும் தமிழ்மொழியின் நயத்தைப் புலப்படுத்திச் சென்றார் கலைஞர்,” என்றார் அவர்.
“இந்நூல் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறிய பகுதியைக் காட்டினாலும், மிகத் தெளிவாக கலைஞரின் குணாதிசயங்களையும் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள துணைபுரிகிறது,” என்றார் அவர்.
கலைஞர் சிங்கப்பூர் உள்ளரங்கில் நிகழ்த்திய உரையின் ஒலிப்பதிவு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. வந்திருப்போருக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில் கலைஞரின் குரல் ஒலிக்க, நிழற்படக் காட்சிகள் நெகிழவைத்தன.
கலைஞரின் பயணத்தின்போது அவரைப் பேட்டி கண்ட திருவாட்டி சித்திரா துரைசாமியின் எதார்த்தமான, நகைச்சுவையான அனுபவப் பகிர்வு பார்வையாளர்களை மகிழ்வித்தது.
தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாமிக்கண்ணு, கவிமாலையின் காப்பாளர் மா.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினர். சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் அடையாளப் பற்றைக் கூட்டவும் இந்நூல் கூடுதலான மாணவர்களைச் சென்றடைய அவர்கள் வேண்டிக்கொண்டனர்.
இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ஆர்.ராஜாராமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிஸால், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் கே.தனலட்சுமி ஆகியோரும் பல தமிழ், சமூக அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
நூலின் விற்பனைத் தொகை கலைஞரின் நூற்றாண்டு நினைவாக சமூக, அறநிதிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் நூலாசிரியர் அறிவித்தார். நிகழ்வின் முழுக்காணொளிப் பதிவைக் காண யூடியூப் தளத்தை நாடலாம்.