வாழ்க்கை வழிகாட்டியாக ‘எம்பிடிஐ’ ஆளுமை சோதனை

வாழ்க்கை வழிகாட்டியாக ‘எம்பிடிஐ’ ஆளுமை சோதனை

படம்: பிக்சாபே

14 Dec 2024 - 6:00 am

2 mins read

மையர்ஸ் - பிரிக்ஸ் ஆளுமை சோதனை (Myers Briggs Type Indicator - எம்பிடிஐ) பற்றி பெரும்பாலான இளையர்கள் அறிந்திருக்கக்கூடும். இன்று வேலையிடத்திலும் பள்ளிகளிலும்கூட அச்சோதனையின் முடிவுகள், ஒருவரைப் பற்றி புரிந்துகொள்ளவும் ஒற்றுமையை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

‘ஃபார்ச்சுன் 500’ நிறுவனங்களில் 80 விழுக்காட்டினர் வேலையிடத்தில் ஊழியர்களைப் புரிந்துகொள்ள ‘எம்பிடிஐ’ வகையைப் பயன்படுத்தி வருகின்றன.

தனிப்பட்ட முறையில் இச்சோதனை, பல முக்கியத் தொழில், வாழ்க்கை முடிவுகளுக்குக் கைகொடுக்க வல்லது. 

ஒருவரின் விருப்பு வெறுப்புகள், குணநலன்கள், சிக்கல்களைக் கையாளும் விதம் முதலியவை குறித்த கேள்விகள் இச்சோதனையில் இடம்பெறும்.

அக்கேள்விகளுக்குத் தரப்படும் விடைகளைக் கொண்டு, ஒருவர் எத்தகைய பண்புகளைக் கொண்ட ஆளுமை வகை என அது காட்டும். 

ஐவகை பண்புகள் ‘எம்பிடிஐ’ தேர்வில் சோதிக்கப்படும்.

ஒருவர் குழு நடவடிக்கைகளை விரும்புபவரா அல்லது தனிப்பட்ட செயல்பாடுகளை விரும்புபவரா; நடைமுறை சார்ந்தவரா அல்லது உள்ளுணர்வை முன்னிலைப்படுத்துபவரா; உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்துபவரா அல்லது அதிகம் சிந்திப்பவரா; இலக்குகளை அடைய திட்டமிட்டுக் கடைப்பிடிப்பவரா அல்லது எதிர்பாரா வாய்ப்புகளைத் தன்வசப்படுத்திக்கொள்பவரா; தன்னைப் பற்றி உறுதியாக இருப்பவரா அல்லது மன உளைச்சலால் எளிதில் பாதிக்கப்படுபவரா என ஐந்து கூறுகளையும் ஆராயும் கேள்விகளை இச்சோதனை உள்ளடக்குகிறது. 

இவற்றிலிருந்து மொத்தம் 16 வகை ஆளுமைகள் எழுகின்றன.

எந்த ஆளுமை ஒருவரின் குணநலன்களுக்கு மிகப் பொருத்தமானதாக உள்ளது என்பதனை ‘எம்பிடிஐ’ தேர்வு முடிவுகள் சுட்டிக்காட்டும்.

ஒவ்வோர் ஆளுமை வகைக்குமான பலம், பலவீனம், நடத்தை எனப் பலவற்றை ‘எம்பிடிஐ’ இணையத்தளம் உள்ளடக்குகிறது. இதனை முடிவெடுப்பதற்கான வழிகாட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஒவ்வோர் ஆளுமை வகைக்கும் மிகப் பொருத்தமான, ஏதுவான வாழ்க்கைத்தொழில்களையும் திறன்களையும் இச்சோதனை அறிவியல் ஆய்வுசார்ந்து பரிந்துரைக்கிறது.

கலைஞர்கள், அரசு அதிகாரிகள், தொழில்முனைவர்கள் முதலியோரைக் குறிப்பிட்ட ஆளுமை வகைகளுக்கு இச்சோதனை பொருந்தியுள்ளதைக் கொண்டு மக்கள் தங்களின் வாழ்க்கைத்தொழிலை நிர்ணயிப்பதை மீளாய்வு செய்துகொள்ளலாம். 

உலகெங்கிலும் உள்ள முக்கியப் பிரபலங்களின் ஆளுமை வகைகளையும் இத்தளம் ஆவணப்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவரும் தங்களின் ஆளுமை வகை கொண்ட பிரபலங்களை வாழ்க்கைத்தொழிலுக்கோ வாழ்க்கைக்கோ வழிகாட்டியாகப் பயன்படுத்திக்கொள்ள இது வாய்ப்பளிக்கிறது. 

ஒருவரின் குணாதிசயங்கள் குறித்த முழுமையான புரிதலை அளிக்க ‘எம்பிடிஐ’ சோதனை வல்லதல்ல எனும் கருத்து ஒருபுறம் இருந்தாலும், மேலோட்டமான அளவில் முக்கியப் பலம், பலவீனத்தைக் கண்டறிய அது பக்கபலமாக இருக்கக்கூடும்.

முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நமது ஆளுமை வகையைக் கொண்டோர் குறிப்பிட்ட சவால்களை எவ்வாறு எதிர்நோக்குவர், எப்படிச் செயல்படுவர் எனும் இயல்புகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அது துணை நிற்கக்கூடும். 

குறிப்புச் சொற்கள்