தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஒன்றிணைவைக் கொண்டாடும் ஒளித் திருவிழா

2 mins read
e78461ca-d0e4-4e8c-bf82-628defd9c7e0
சிங்கப்பூரின் வேர்களைக் கொண்டாட, அவற்றின் எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராயும் அவசியத்தைப் பிரதிபலிக்கும் ‘கிராஃபிட்டி’ நிறுவல். - படம்: சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம்

சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு, அடையாளம் குறித்து ஆராயவும் அதன்மூலம் சுயதன்மை, பன்முகத்தன்மை குறித்த புதிய கண்ணோட்டங்களை உருவாக்கும் நோக்கத்தில் பல்வேறு ஒளி வடிவமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

‘டூ யூ சீ மீ?’ எனும் கருப்பொருளில் அமைந்துள்ள இவ்வாண்டின் சிங்கப்பூர் ‘லைட் டு நைட்’ திருவிழாவில் உள்ளூர் வெளிநாட்டுக் கலைஞர்களின் கைவண்ணத்தில் அமைந்த ஏறத்தாழ 70 ஒளி வடிவமைப்புகள், நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ஜனவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கலைத் திருவிழாவில் சிங்கப்பூரின் 60வது ஆண்டையும் கொண்டாடும் வகையில் ஒன்றிணைந்த சமூக அடையாளம், ஒன்றிணைவைப் பிரதிபலிக்கும் என்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

2000களின் மலரும் நினைவுகளைக் கண்முன் நிறுத்தும் கலைப்படைப்பு.
2000களின் மலரும் நினைவுகளைக் கண்முன் நிறுத்தும் கலைப்படைப்பு. - படம்: சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம்

சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம், பாடாங், ஆசிய நாகரிக அரும்பொருளகம், தி ஆர்ட்ஸ் ஹவுஸ், விக்டோரியா அரங்கம் உள்ளிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இக்கலை வடிவமைப்புகளைக் காணலாம்.

கலைத்துறையில் முன்னோடிகளான ‘அச்சு வடிவமைப்பாளர்’ செங் சியோக் தின், பல்லூடக வரைகலை வல்லுநர் கோ பெங் குவான், ‘பாத்திக்’ வடிவமைப்பாளர் ஜாஃபர் லத்திஃப் உள்ளிட்டோரைக் கொண்டாடும் நிறுவல்கள் இடம்பெற்றுள்ளன.

பார்வைக் குறைபாடுள்ளோர்க்கான ஒன்றிணைந்த சமூகத்தின் தேவை உள்ளிட்டவற்றை உணர்த்தும் கலைப்படைப்பு.
பார்வைக் குறைபாடுள்ளோர்க்கான ஒன்றிணைந்த சமூகத்தின் தேவை உள்ளிட்டவற்றை உணர்த்தும் கலைப்படைப்பு. - படம்: லாவண்யா வீரராகவன்.

உள்ளூர் இளம் வடிவமைப்பாளர்கள், சிங்கப்பூர்க் கலைப்பள்ளி (சோட்டா) மாணவர்கள் இவ்வாண்டு வடிவமைப்புகளை உருவாக்குவதில் பங்கெடுத்துள்ளனர்.

பார்வைக் குறைபாடுள்ள கிளேர் டியோ வடிவமைப்பில் உள்ளடக்கிய சமூகத்தைப் பிரதிபலிக்கும் நிறுவல், ஆசிய ‘பகோடா’ கட்டடங்களின் அழகைப் பறைசாற்றும் ‘ஆர்ட்டர்லி அப்சஸ்டு’, ஐந்நூறாயிரம் ஒளிபொருந்திய மணிகளின் உதவியுடன் சமூகப் பிணைப்பை வலுவாக்கும் நோக்கில் அமைந்த ‘எ லிட்டில் பீட் ஆஃப் வொர்க்’ உள்ளிட்டவை இவ்வாண்டு பார்வையாளர்களின் கவனத்தைக் கவர உள்ளன.

வியட்னாம் நாட்டின் மிளகுத் தோட்டங்கள், விவசாயக் கூலிக் கட்டமைப்புகள், வாழ்வியல் உள்ளிட்டவற்றைப் பிரதிபலிக்கும் பல தள நிறுவல்.
வியட்னாம் நாட்டின் மிளகுத் தோட்டங்கள், விவசாயக் கூலிக் கட்டமைப்புகள், வாழ்வியல் உள்ளிட்டவற்றைப் பிரதிபலிக்கும் பல தள நிறுவல். - படம்: லாவண்யா வீரராகவன்

கடந்த ஆண்டு மனிதவள அமைச்சின் ஆதரவுடன் நடந்த அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தின புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.

“சிங்கப்பூரின் 60வது ஆண்டுடன், சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டும் இணைத்துக் கொண்டாடப்படுவதால், இவ்வாண்டு நிகழ்ச்சிகள் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளன. இது பார்வையாளர்களையும் கலை ஆர்வலர்களையும் ரசிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் வைகேஸ் மோகன்.

கலையையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் ‘ஆர்ட் எக்ஸ் சோ‌ஷியல்’ (Art X Social) திருவிழா தொடர்ந்து மூன்று வார இறுதியிலும் நடத்தப்படும் என்றும், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை ரசித்தபடி, பல்வேறு புதிய உணவு வகைகளையும் சுவைக்கலாம் என்றும் சொன்னார் அவர்.

குறிப்புச் சொற்கள்