சமூகம், கூட்டுமுயற்சி, கூட்டுப் படைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும், மக்கள் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் ஒன்றிணைவதை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு ஒளி, கலை வடிவமைப்புகள் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ளன.
‘நம்முள் இருக்கும் ஆற்றல்’ எனும் கருப்பொருளில் அமைந்துள்ள இவ்வாண்டின் சிங்கப்பூர் ‘லைட் டு நைட்’ கலைவிழா, தனது 10வது பதிப்பைக் குறிக்கும் வகையில் புத்துணர்ச்சியுடன் மீண்டும் வந்துவிட்டது.
ஜனவரி 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை நடைபெறும் இந்தக் கலைவிழா, சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் குடிமை வட்டாரத்தையும் (Civic District) அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஒளிரச் செய்கிறது.
இதுவே இக்கலைவிழாவின் மிக நீண்ட காலப் பதிப்பாகும். முதன்முறையாக நான்கு வார இறுதிகளில் நடைபெறும் இவ்விழாவில் பார்வையாளர்கள் கலைப்படைப்புகளைத் தூரத்திலிருந்து ரசிப்பதோடு மட்டுமின்றி, அவற்றுடன் நேரடியாக தொடர்புகொண்டு படைப்புகளின் ஓர் அங்கமாகவே மாறமுடியும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விழாவின் முக்கியச் சிறப்பம்சங்களில் ஒன்றாக ‘சான்டாய்’ (Santai) எனும் புதிய ஊடாடும் கலைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘ஓய்வெடுத்தல்’ எனப் பொருள்படும் ‘சான்டாய்’ என்ற மலாய்ச் சொல்லைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்தொகுப்பு, பாடாங், எம்ப்ரெஸ் லான், எஸ்பிளனேட் பூங்கா உள்ளிட்ட ஐந்து முக்கிய இடங்களில் பரந்து விரிந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடிச் சிந்திக்கவும் உரையாடவும் ஏற்ற சூழலை இது உருவாக்குகிறது.
விழாவின் கருப்பொருளானது ஓர் எளிய, ஆனால் வலிமையான சிந்தனையிலிருந்து உருவானது என்றார் விழாவின் தலைமைத் திட்ட அமைப்பாளர் வைகேஸ் மோகன், 33.
“நாம் அனைவரும் ஒன்றிணையும்போது நமக்குள் புத்தாற்றல் பிறக்கிறது. இந்தக் கருப்பொருளைக் கலைஞர்களுடனும் கூட்டாளர்களுடனும் பகிர்ந்துகொண்டோம்.
“அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவங்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் அடிப்படையில் தங்கள் கலைப்படைப்புகளையும் நிகழ்ச்சிகளையும் வடிவமைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தேசியக் கலைக்கூடத்தின் சிங்கப்பூர் முற்றத்தில் (Singapore Courtyard) அமைக்கப்பட்டுள்ள தைவானியக் கலைஞர் மைக்கேல் லினின் ‘அன்டைட்டில்டு கேதரிங்’ (Untitled Gathering) விழாவின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகும்.
சிங்கப்பூர்க் கலை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இதில், பாத்திக் (Batik) கலையம்சத்துடன் கூடிய மேசையும் நாற்காலிகளும் இடம்பெற்றுள்ளன.
“இந்தப் படைப்பு வெறும் மேசை, நாற்காலிகள் பற்றியதன்று. மக்கள் இந்தக் கலைப்படைப்போடு எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள், வெவ்வேறு விதங்களில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்பதே இதன் நோக்கம்,” என்று திருவாட்டி வைகேஸ் குறிப்பிட்டார்.
பாடாங் ஏட்ரியத்தில் (Padang Atrium) நிறுவப்பட்டுள்ள அனைத்துலக புகழ்பெற்ற தாய்லாந்து கலைஞர் நவீன் ரவன்சாய்குலின் ‘சிங்கப்பூராமா’ (SINGAPORAMA) கலைப்படைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய சினிமா விளம்பரப் பலகை பாணியில் அமைந்துள்ள இந்த ஓவியப்படைப்பு, சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களுடனான கலைஞரின் அனுபவங்களை எடுத்துக்காட்டுகிறது. “வெளிநாட்டு ஊழியர்கள், கலைஞர்கள் எனச் சிங்கப்பூரின் பலதரப்பட்ட மக்களையும் இதில் கண்டு ரசிக்கலாம்,” என்றார் திருவாட்டி வைகேஸ்.
கலைப்படைப்புகள் மட்டுமின்றி, பல்வேறு சமூகக் குழுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. குறிப்பாக, ஜனவரி 25ஆம் தேதியன்று, திரு நவீனின் படைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தைச் சேர்ந்த சிலர் ஒயிலாட்டம் ஆடவுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் (inclusivity) இவ்விழாவின் முக்கியப் பண்பு இதன்வழி எடுத்துக்காட்டப்படுகிறது.
“பத்தாவது ஆண்டுநிறைவை கொண்டாடும் ‘லைட் டு நைட்’ கலைவிழா முன்பைவிட மிகப்பெரிய இலக்கைக் கொண்டுள்ளது. குடிமை வட்டாரம் முழுவதுமே ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்,” என்று திருவாட்டி வைகேஸ் கூறினார்.
இவ்விழாவிற்கு அனுமதி இலவசம். நுழைவுச்சீட்டு தேவைப்படும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு http://lighttonight.sg என்ற இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களையும் இத்தளத்திலேயே அறிந்துகொள்ளலாம்.

