எட்டு மாத மழலையும் பொய் பேசும்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

எட்டு மாத மழலையும் பொய் பேசும்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

2 mins read
c8ff0282-a470-41e9-b487-a3991019ee76
குழந்தைகளின் குறும்புத்தனமான பொய்களைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை. அது அறிவாற்றல் வளர்ச்சியின் அடையாளம் என்கிறது ஆய்வு. - படம்: செயற்கை நுண்ணறிவு

“சாக்லெட் சாப்பிட்டியா செல்லம்?” என்று கேட்டால், உதடெல்லாம் சாக்லெட் ஒட்டியிருந்தாலும், ஒன்றுமே தெரியாததுபோல குழந்தைகள் தலையை ஆட்டுவதைப் பெற்றோர் பலரும் பார்த்திருப்பார்கள். 

அல்லது, கையில் வைத்திருக்கும் பொருளை “தொடாதே” என்று பெற்றோர் சொன்னதும், அதை மேசைக்கு அல்லது மெத்தைக்கு அடியில் ஒளித்து வைக்கும் குறும்புத்தனத்தையும் ரசித்திருப்பார்கள்.

பார்க்கும்போது இவை வெறும் வேடிக்கையான செயல்களாகத் தோன்றினாலும், குழந்தைகள் நன்கு பேசத் தொடங்குவதற்கு முன்பே பொய் சொல்ல அல்லது ஏமாற்றும் நடத்தையை வெளிப்படுத்தத் தொடங்கிவிடுகிறார்களாம்.

மழலையர் மிகவும் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது.

பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய புதிய அனைத்துலக ஆய்வில், குழந்தைகள் தங்களின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் முன்பே பொய் பேசக் கற்றுக்கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி கலந்த சுவாரசியமான தகவலை அம்பலப்படுத்தியுள்ளது.

‘காக்னிட்டிவ் டிவெலப்மென்ட்’ என்ற அனைத்துலக அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 10 முதல் 47 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் நடத்தைகள் ஆராயப்பட்டன.

அதில், குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே, தகவல்களை மறைப்பது, பெற்றோரின் கவனத்தைத் திசைதிருப்புவது போன்ற ஏறத்தாழ 16 வகையான ஏமாற்று நடத்தைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மிகக் குறைந்த வயதாக எட்டு மாதமேயான ஒரு குழந்தையிடம்கூட இத்தகைய நடத்தை வெளிப்படுவதே. 

புள்ளிவிவரங்களின்படி, 10 மாதமானதும் 25 விழுக்காட்டுக் குழந்தைகளும் 16 மாதங்களில் 50 விழுக்காட்டுக் குழந்தைகளும் 24 மாதங்களை எட்டும்போது 75 விழுக்காட்டுக் குழந்தைகளும் ஏதேனும் ஒரு வகையில் இத்தகைய குறும்புத்தனமான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் ‘பொய்’ எப்படி இருக்கும்?

குழந்தைகள் உட்கார்ந்து சதித்திட்டம் தீட்டி, பிரமாண்டமாகப் பொய்களை உருவாக்குவது கிடையாது. மாறாக, பொருளை மறைத்து வைப்பது, பெற்றோர் கூப்பிடும்போது கேட்காததுபோல் நடிப்பது, மூத்தோரின் கவனத்தை வேறு பக்கம் திருப்புவது போன்ற வடிவங்களிலேயே இது தொடங்குகிறது. 

உண்மையில், பொய் சொல்வது என்பது ஒரு குழந்தையின் மூளை வளர்வதைக் காட்டும் ஒரு ஆக்ககரமான அடையாளம் என்று ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் எலினா ஹாய்கா, அக்குழந்தைகளை ‘சாமர்த்தியமான சின்னஞ்சிறு பொய்யர்கள்’ என்று வர்ணிக்கிறார்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான அவர், “மேசைக்கு அடியில் ஒளிந்துகொண்டு மிட்டாய் சாப்பிடுவது குழந்தைகளின் தந்திரம்,” என்று கூறுகிறார்.

ஆயினும், பெற்றோர் இதை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. குழந்தைகள் ஏதேனும் ஒரு பலனை அடைய அல்லது தண்டனையிலிருந்து தப்பிக்கவே இத்தகையச் செயல்களில் ஈடுபடுகின்றனராம்.

குழந்தைகள் 16 வகையான ஏமாற்றும் முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஆய்வு கூறும் உண்மை.
குழந்தைகள் 16 வகையான ஏமாற்றும் முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஆய்வு கூறும் உண்மை. - படம்: செயற்கை நுண்ணறிவு

ஆய்வின்படி, குழந்தைகள் தகவல்களை மறைப்பது, மிகைப்படுத்துவது, சாக்குப்போக்கு சொல்வது என 16 வகையான ஏமாற்றும் முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

குழந்தைத்தனமான தந்திரமாகத் தோன்றினாலும், அடிப்படையில் ஒரு குழந்தை உலகத்தையும் மனிதர்களையும் புரிந்துகொள்ளும் கற்றல் முறைதான் இது என்கிறார் மருத்துவர் சனம் ஹஃபீஸ்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் தவற்றை மறைக்கும்போது அவர்களை ‘பொய்யன்’ என்று முத்திரை குத்தக் கூடாது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பெரியவர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பார்த்தே உண்மையின் மதிப்பைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர் மறக்கக் கூடாது என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
குழந்தைஆய்வுசிறுவர்மூளைவளர்ச்சிஉடல்நலம்