தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொண்டூழியத்தில் ‘லிட்டில் டீம் நிலா’

2 mins read
f214e357-6bc8-4d45-8cb7-d41f8cb79d96
உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் வீரர்களை ஊக்குவித்த லிட்டில் டீம் நிலா தொண்டூழியர்கள். - படம்: டீம் நிலா/அறிவழகன் அன்புமணி
multi-img1 of 3

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை ஒருமாத காலத்திற்கு நடைபெற்ற உலக நீர் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பாலர்கள் தொண்டூழியர்களாகச் செயல்பட்டு ஆதரவளித்தனர்.

ஐந்து முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட மாணவர்களிடம் விளையாட்டுத் தொண்டூழியம் குறித்து நாட்டத்தை ஏற்படுத்த இவ்வாண்டு மார்ச் மாதம், ‘டீம் நிலா’வின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழாவில் அறிமுகமானது ‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பின் ‘லிட்டில் டீம் நிலா’ திட்டம்.

அத்திட்டத்தின் முதல் நடவடிக்கையே உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் ஆதரவளிப்பதாகும்.

ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை, 26 பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,600 பாலர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோர் உலக நீர் விளையாட்டுப் போட்டிகளை நேரில் கண்டு ஆதரவு தெரிவித்தனர்.

நீர்ப்பந்தாட்டம், நீருக்குள் குதித்தல், கலைமயமான நீச்சல், போன்ற பிரிவுகளில் 20 போட்டிகளில் ‘லிட்டில் டீம் நிலா’ தொண்டூழியரணியைக் காணமுடிந்தது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி டபிள்யூசிஎச் அரீனாவில் நடந்த நீச்சல் போட்டிகளைக் காணவந்தார் நான்கு வயது வெண்பா திருநாவுக்கரசு முரளிதரன். அவர் புக்கிட் தீமா புளோக் 305 பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பள்ளியில் படிக்கிறார்.

ஏற்கெனவே தந்தையிடமிருந்து நீச்சல் கற்கத் தொடங்கியுள்ளார் இச்சிறுமி.

“நீச்சல் வீரர்களை நேரில் கண்டு ஆதரவளிப்பது எனக்குப் பிடித்திருந்தது. மீண்டும் வர விரும்புகிறேன்,” என்றார் வெண்பா.

குரோவே‌ஷியா நீச்சல் வீரர்களுடன் ‘லிட்டில் டீம் நிலா’ பாலர்கள்.
குரோவே‌ஷியா நீச்சல் வீரர்களுடன் ‘லிட்டில் டீம் நிலா’ பாலர்கள். - படம்: ரவி சிங்காரம்

“சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இது நல்ல பிணைப்பை உருவாக்கியது. பெற்றோரும் வர விரும்பினர். சிறுவர்களைச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது முக்கியம்,” என்றார் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் சுமித்ரா திவாரி.

தாயார் முகிலரசியுடன் சேர்ந்து நீச்சல் வீரர்களை ஊக்குவித்த வெண்பா (வலது), சக லிட்டில் டீம் நிலா தொண்டூழியர்கள்.
தாயார் முகிலரசியுடன் சேர்ந்து நீச்சல் வீரர்களை ஊக்குவித்த வெண்பா (வலது), சக லிட்டில் டீம் நிலா தொண்டூழியர்கள். - படம்: ரவி சிங்காரம்

இதையடுத்து, முதன்முறையாக ஆசியாவில் நடைபெறவுள்ள உடற்குறையுள்ளோருக்கான நீச்சல் போட்டிகளிலும் ‘லிட்டில் டீம் நிலா’ பங்காற்றுவர்.

‘ஏஎஃப்சி’ ஆசியக் காற்பந்துக் கிண்ணம், ‘மர்க்சஸ் நே‌‌ஷன்ஸ்’ கிண்ணம் போன்றவற்றிலும் ‘லிட்டில் டீம் நிலா’ குழுவினரைக் காணலாம். மொத்தமாக 2025ல் 5,000க்கும் மேற்பட்ட ‘லிட்டில் டீம் நிலா’ தொண்டூழியர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்களிப்பர்.

மேல்விவரங்களுக்கு http://go.gov.sg/ltn இணையத்தளத்தை நாடலாம்.

வரும் மாதங்களில் ‘லிட்டில் டீம் நிலா’ கூடுதலான பாலர்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவடையும்.

கெட்ஆக்டிவ்! சிங்கப்பூர் ‘டான்ஸ் ஆஃப் தி நே‌‌ஷன்’ நடனத்தில் பாலர்கள்.
கெட்ஆக்டிவ்! சிங்கப்பூர் ‘டான்ஸ் ஆஃப் தி நே‌‌ஷன்’ நடனத்தில் பாலர்கள். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்