உலக அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் உள்ளூர்க் கலைஞர்

2 mins read
24ddcd55-b327-436f-a18d-c21cb11267b7
பல்லின கலாசார இசைக் கலைஞர்களுடன் புல்லாங்குழல் வாசிக்கும் நிரஞ்சன் (இடது). - படம்: நிரஞ்சன் பாண்டியன்

கலாசாரப் பிணைப்புகளை மையமாகக் கொண்ட ‘சி ஆசியான் கான்சோனன்ட்’ (C asean Consonant) எனும் இசைக்குழுவின் ஓர் அங்கமாக ‘உலகக் கண்காட்சியில்’ (World Expo) நிகழ்ச்சி படைக்கவுள்ளார் உள்ளூர் இசைக்கலைஞர் நிரஞ்சன் பாண்டியன், 32.

உலக அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ள இவர் ஒரு புல்லாங்குழல் கலைஞர்.

இந்தியக் கர்நாடக இசை, நாட்டுப்புற இசையுடன் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளைச் சேர்ந்த இசையையும் இணைத்து இவரது இசைக்குழு படைக்கவுள்ளது.

இசையின் வழியே, நட்பு, கலாசாரப் புரிதல், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதையும, ஆசியானின் வளமான கலாசார அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் இவ்விசைக்குழு 2015ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

ஆசியான் நாடுகளிலிருந்து பத்து தலைசிறந்த இசைக்கலைஞர்களை இணைத்து நிகழ்ச்சிகள் படைத்து வருகிறது.

ஜப்பானின் ஒசாகா நகரில், ஆகஸ்ட் 8ஆம் தேதி, உலக அரங்கின் முன்னிலையில் இந்நிகழ்ச்சியைப் படைப்பதற்கு முன், பேங்காக் நகரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நிகழ்ச்சி படைக்கவுள்ளனர் இக்குழுவினர்.

“இசை தான் எமது அடையாளம். சிங்கப்பூரின் பெருமைமிகு அம்சமான பல்லின காலாசாரப் புரிதலை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இசைக்கோப்பை உலக அரங்கில் பிரதிநிதிப்பது பெருமையானது,” என்றார் நிரஞ்சன்.

“அதிலும் குறிப்பாக, ஓர் இந்தியராக சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பது கூடுதலான பெருமை. இந்திய இசையின் அடிப்படையில் அமைந்த உள்ளூர் இசையைப் படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும்பேறு,” என்றும் குறிப்பிட்டார்.

தனித்தனி அரங்குகளில் இசை விருந்து படைப்பதுடன், முதன்மை மேடையில் நிகழ்ச்சி படைக்கும் முதற்குழுவாக அமைந்தது சிறப்பான தருணமென்றும் அவர் கூறினார்.

கல்யாணி, அரிக்காம்போதி, மோகனம் என மனதை வருடும் ராகங்களுடன் அமைந்த இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் என நம்புவதாகவும், அனைவரது முன்னிலையில் வாசிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னார் நிரஞ்சன்.

தமது பத்து வயதிலிருந்து புல்லாங்குழல் வாசித்து வரும் இவர் கடந்த பத்தாண்டுகளாக இதனையே முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருகிறார்.

“நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த தெளிவான பார்வையும், திட்டமும், முனைப்பும் இருந்தால், துறை பேதமின்றி வெற்றி பெறலாம். அதற்கு நானே சான்று,” என்றும் நம்பிக்கையுடன் சொன்னார் அவர்.

குறிப்புச் சொற்கள்