திருவாட்டி வள்ளியம்மை சத்தியப்பனுக்கு சமைப்பதில் பெரும் ஆர்வம். அவர் சமைக்கும் சுவையான சமையலை விரும்பாதவர் இல்லை. 12 வயதிலிருந்து பாட்டியிடம் சமையல் கற்றுக்கொண்ட அவருக்குச் சமையலே தொழில், வாழ்க்கை.
சமைத்து மற்றவர்களுக்கு வழங்குவது அவருக்கு மகிழ்ச்சி தருவது. தன் சமையலைப் பிறர் விரும்பிச் சாப்பிடுவது அவருக்கு மனநிறைவு அளிக்கிறது.
நோய் வாட்டியபோதும், விரலை இழந்த பின்னரும் பிறருக்குச் சுவையான உணவு சமைத்துக் கொடுக்கிறார் 66 வயது திருவாட்டி வள்ளியம்மை.
வள்ளியம்மையின் மாமாவும் உறவினர்கள் சிலரும் உணவகம் நடத்தி உள்ளனர். அவரும் அவருடன் உடன்பிறந்த நால்வரும் சமையலில் ஆர்வம் உள்ளவர்கள்.
ராணுவ முகாமின் சமையல் கூடத்தில் 2004ல் சேர்ந்த அவர் அங்கு ஐந்தாண்டுகள் பணிபுரிந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் வேலையைத் தொடரமுடியாமல் போனது.
நீரிழிவு நோயால் 2014ல் ஒரு காலை இழந்ததும், உணவைச் சமைத்து விநியோகிக்கும் தொழிலைச் செய்து வந்த தம்பியுடன் இணைந்து சமையல் பணியைத் தொடர்ந்தார்.
ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் தம்பி உயிரிழக்கவே சமையல் தொழிலை நிறுத்திவிட்டார்.
எனினும், அவ்வப்போது அண்டைவீட்டார், உறவினர்களுக்குச் சமைத்துக்கொடுத்து வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஈராண்டுகளுக்கு முன்னர் மற்றொரு காலையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. என்றாலும் சக்கரநாற்காலியில் அமர்ந்தபடியே சமையலில் ஈடுபடுவார்.
இரு மாதங்களுக்கு முன்பு தன் வலது கையின் நடு விரலையும் இழந்தபோது அவருக்குச் சமையல் சிரமமானது.
ஆனாலும் அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை.
கத்தியைப் பிடித்துக் காய்கறிகளை நறுக்குவது சிரமமானது. சிறு பணியைச் செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்தது.
அவர் தொடர்ந்து பயிற்சி செய்து, தற்போது நான்கு விரல்களைக் கொண்டே சமைக்கிறார், மற்ற வேலைகளையும் செய்கிறார்.
“அவ்வப்போது உதவிக்கு என் அண்டைவீட்டாரும் தெரிந்தவர் ஒருவரும் காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பார்கள். நான் சுவையான உணவு சமைத்துத் தருவேன். மற்ற நேரங்களில் நானே மெதுவாகச் சமைப்பேன்,” என்றார் திருவாட்டி வள்ளியம்மை.
தனித்து வாழும் திருவாட்டி வள்ளியம்மை தமக்கு மட்டும் சமைப்பதில்லை. அக்கம்பக்கத்தார், தெரிந்தவர்கள், கேட்பவர்கள் எல்லாருக்கும் இன்றும் சமைத்துத் தருகிறார்.
மே 24ஆம் தேதியன்று லெங் கீ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த அன்னையர் தினக் கொண்டாட்டத்துக்காக அறுசுவை உணவுகளைச் சமைக்க அவர் முன்வந்தார். புட்டு, காய்கறி கீமா, கேசரி, மீ கோரெங், சப்பாத்தி என அவர் சமைத்த பலவித உணவு வகைகளையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் ருசித்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் லெங் கீ இந்தியர் நற்பணிச் செயற்குழுவைச் சேர்ந்த சந்தியா - ராமா பிரசாத் தம்பதியினர் சமையல் பயிலரங்கு நடத்தினர். பாயசம், சேமியா ஆகிய உணவு வகைகளைச் சமைக்க அவர்கள் சொல்லிக் கொடுத்தனர்.
“இந்திய சமையலை மற்ற இனக் குடியிருப்பாளர்களுக்கும் கொண்டுசேர்க்க விரும்பினோம். உடன், அன்னையர் தினத்தையும் கொண்டாட விரும்பினோம்,” என்றார் செயற்குழுவின் தலைவர் திரு ஜலாலுதீன் பீர் முஹம்மது.
பாட்டுக்குப் பாட்டு, அதிர்ஷ்டக் குலுக்கு, கேக் வெட்டுதல் ஆகிய அங்கங்களும் இடம்பெற்றன.
லெங் கீ இந்தியர் நற்பணிச் செயற்குழு 15 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
“தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் விழா, யோகாப் பயிலரங்குகள் என பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்கிறோம்,” என்றார் திரு ஜலாலுதீன்.

