மகா சிவராத்திரி நாளான புதன்கிழமை (பிப்ரவரி 26), தீவெங்குமுள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 30 இந்து ஆலயங்களில், பெரும்பாலானவற்றில் சிவபெருமானுக்குச் சந்நிதி உண்டு.
அவற்றில், குறிப்பாக சிவபெருமான் மூலவராக வணங்கப்படும் ஆலயங்களில் மாலையிலிருந்து இரவு முழுவதும் வழிபாடுகள் நடைபெற்றன.
பக்தர்கள் ஆலயத்தை வலம்வந்து, இறைவனின் அருவுருவத் திருமேனியான லிங்கத்திற்கு, பால், தேன் பன்னீர், இளநீர், சந்தனத்துடன் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளைக் கண்டனர்.
பூமாலைகள் மட்டுமன்றி, மறைமொழிகளுடன் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் எனப் பஞ்சபுராணப் பாமாலைகளையும் பக்தர்கள் ஆங்காங்கு ஓதிக்கொண்டிருந்தனர். மகா சிவராத்திரி நாளில் சிலர், நான்கு கால பூசைகளை ஒரே ஆலயத்தில் அமர்ந்தபடி காண்பர். வேறு சிலர், வெவ்வேறு ஆலயங்களுக்குச் சென்று இறை தரிசனம் செய்வர். இத்தகைய பக்தர்களுக்கு வசதி அளிப்பதற்குப் பேருந்துச் சுற்றுலாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்தகைய சுற்றுலாவுக்கு காலாங் நற்பணிச் செயற்குழு, புதன்கிழமை (பிப்ரவரி 26) ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோயில், ஸ்ரீ சிவ கிருஷ்ணா கோயில், ஸ்ரீ முருகன் திருக்குன்றம் கோயில் ஆகியவற்றுக்குச் சென்ற பேருந்தில் ஏறத்தாழ 40 பேர் இருந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தச் சுற்றுலாவை காலாங் நற்பணிச் செயற்குழு செய்துவருவதாக ஏற்பாட்டாளர் சொர்ணம், 71, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“முழுத் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் சென்றோம். இந்த ஏற்பாட்டுக்கான ஆதரவு ஆண்டுக்காண்டு பெருகிவருகிறது. இதற்காகவே பலர் ஆர்வத்துடன் கேட்டுப் பதிவு செய்துகொள்வர்,” என்று திருவாட்டி சொர்ணம் மகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மனைவி ஊக்கப்படுத்தியதால் கலந்துகொண்டதாகக் கூறிய வெங்கட்,“வீட்டிலிருந்து தொலைவில் உள்ள கோயில்களுக்குச் சென்றதில்லை. இந்தச் சுற்றுலா மூலம் சிங்கப்பூரில் நான் சென்றிராத கோயில்களுக்கும் சென்றேன்,” என்று கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேருந்துச் சுற்றுலாவில் பங்குபெறும் 60 வயது கண்ணன், பிற பக்தர்களுடன் கூடி வெவ்வேறு கோயில்களுக்குச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்திலுள்ள முருகன் திருக்குன்றம் கோயிலில் சிவராத்திரிக்காகக் கண்விழித்திருந்த 43 வயது அனு, ஒரே கோயிலில் எல்லா கால பூஜைகளையும் காண விரும்புவதாகக் கூறினார்.
“சிங்கப்பூரில் பலர் ஆலயங்களுக்கு ஆர்வத்துடன் செல்வதைக் காணும்போது மலைப்பாக இருந்தது. சிவபுராணம் பாடி வழிபாடு செய்தேன்,” என்றார் அவர்.
முதன்முறையாக சிவராத்திரி நாளில் ஆலயம் சென்ற ஷேரன் ரெஜினா, பொத்தோங் பாசிர் சிவதுர்கா ஆலயத்தில் வழிபாடு செய்தது நிம்மதி அளித்ததாகக் கூறினார்.
ஜூன் 8ஆம் தேதி இடம்பெறவிருக்கும் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலின் திருக்குடமுழுக்கிற்கான புதுப்பிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் சிவராத்திரிக்கான ஏற்பாடுகளின் அளவு சிறிதாக்கப்பட்டது. இருந்தபோதும், அங்கு ஏறத்தாழ 15,000 பக்தர்கள் திரண்டதாக ஆலய நிர்வாகம் தமிழ் முரசிடம் தெரிவித்தது.
அவர்களில் ஒருவரான தாதி ஜனனி, 38, வழக்கமான பொலிவுமிக்க சிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கு மாறாக இந்த ஆண்டு சற்று அமைதியாகக் கொண்டாடப்பட்டாலும் வழிபாடுகளில் கலந்துகொண்டது நிறைவைத் தருவதாகக் கூறினார்.
“இளம் பிள்ளைகள் இருவருடன் வந்துள்ளேன். வரிசை நீளமாக இருந்தபோதும் அதிக நேரம் காத்திருக்கவில்லை,” என்றார் அவர்.


