இன்றைய உலகில் மகாபாரதமா? மகாபாரதம் நவீனத் தொழில்நுட்பத்துடன் இடம்பெற்றால் எப்படி இருந்திருக்கும்?
கணினியிலும் இணைய விளையாட்டுகளிலும் மூழ்கியுள்ள இளையர்கள் போர்க் கதையில் இணைந்தால் விளைவு என்ன?
இவ்வாறு அனைவரும் அறிந்த புராணத்தை, யாரும் அறியாத திருப்பத்துடன் கற்பனைப்படுத்துகிறது, ‘டிரையாங்கிள் எஜுகேஷன் கன்சல்டன்சி’ வழங்கும் ‘பாலபாரதம் 2’ நாடகம்.
ஆளில்லா வானூர்தி, பார்வையாளர்களை நாடகத்தினுள் இட்டுச் செல்லும் தொழில்நுட்ப அங்கங்கள் எனக் கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்தாக நாடகம் அமையும்.
சென்ற ஆண்டு அந்நிறுவனம் முதன்முறையாகப் படைத்த ‘பாலபாரதம்’ நாடகம், பாஞ்சாலி சபதத்துடன் முடிவுற்றது.
இம்முறை, பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசத்தையடுத்து ஓராண்டுகால தலைமறைவு வாழ்க்கையில் மத்சய நாட்டு மன்னர் விராடனின் அரண்மனையில் வாழும் விராடபருவம் காட்டப்படும்.
அறநெறிகள் புதைந்த மகாபாரதத்துக்கு இக்காலத்திற்கேற்ப மறுமலர்ச்சியளிப்பதால், அதன் கதையும் கருத்துகளும், இன்றைய பார்வையாளர்களையும், குறிப்பாக இளையர்களையும் சென்றடையும் என்பதே நாடகத்தின் நோக்கம்.
இன்று இளையர்கள் கணினியிலேயே விளையாடுவது அவர்களையும் பெற்றோரையும் எப்படிப் பாதிக்கின்றது என்பதையும் நாடகம் மூலம் உணர முடியும்.
மொழி, பண்பாட்டு வரையறையற்ற மகாபாரதம்
சென்ற ஆண்டு நாடகம் முழுவதும் தமிழ் வசனங்களுடன் நடிகர்கள் அனைவரும் தமிழர்களாக இருந்தனர்.
ஆனால், இவ்வாண்டு நாடகத்தில் ஆங்கில வசனங்களும் இடம்பெற்றுள்ளன. சீனர்கள் இருவரும் நடிக்கின்றனர். அவர்களில் ஒருவரான டேமி, தமிழ் வசனங்களையும் பேசவுள்ளார்.
ஆங்கில ஆசிரியரான டேமி, “நான் சீனராக இருந்து, இவ்வளவு தமிழை எதிர்கொள்வது மிகவும் சுவாரசியமான அனுபவமாக உள்ளது,” என்றார்.
மற்றொரு சீன நடிகரான ஜஸ்டினியன், முழுநேர நடிகராவார். அவர் விராட மன்னனாக நடிக்கிறார்.
நடிப்புக்குப் புதிதான தனுஷ் செல்வராஜ், ‘சிபிச் சக்கரவர்த்தி’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரது தேசிய சேவைக் காலத்தில், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காகப் பாடகி சித்ரா உட்பட 2,000 பேர் முன்னிலையில் எஸ்பிளனேடில் நடனமாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது தொடங்கியதே அவரது கலைப்பயணம்.
“இதற்குமுன் நான் மலையாள நாடகம் ஒன்றின் சண்டைக் காட்சியில்தான் நடித்திருந்தேன்; வசனங்கள் இல்லை. ஆனால், நடிப்பு அனுபவம் ஒருபுறம் இருந்தாலும் ஆர்வமும் முக்கியம். மேலும், இங்குள்ள நாடகக் குழு நல்ல நடிகராகச் செதுக்க நிறைய பயிற்சி வழங்குகின்றனர்,” என்றார் தனுஷ்.
“ஆர்வம் உண்டு, ஆனால் மேடைக்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கியுள்ளோம்,” என்றார் நாடகத்தின் இயக்குநர் தரன் கோபால்.
நாடகத்தைக் கண்டு மகிழ...
குட்மேன் ஆர்ட்ஸ் நிலைய பிளாக் பாக்சில் நவம்பர் 14, 15 தேதிகளில் இரவு 7.30 முதல் 9 மணிவரை நாடகம் நடைபெறும்.
இதற்கான நுழைவுச்சீட்டுகளை https://sg.bookmyshow.com/en/events/BALA2025 இணையப்பக்கம் வழியாக வாங்கலாம்.
சிங்கப்பூர்க் கலாசாரச் சிறப்புத்தொகையைக் கொண்டு https://cp.bookmyshow.sg/en/events/balabharatham-2-virada-paruvam/BALA2025 எனும் இணையப்பக்கம் வழியாக நுழைவுச்சீட்டை வாங்கலாம்.

