தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்மையைக் கொண்டாடிய சிறைக் கைதிகளுக்கான ஒப்பனைப் பயிலரங்கு

3 mins read
cb207c71-b50c-4bbb-b667-10bb3e2730e8
மஞ்சள் நாடா திட்டமும் ‘பெனிஃபிட் காஸ்மெடிக்ஸ்’ நிறுவனமும் பெண் கைதிகளுக்காக ஒரு தனித்துவமான அழகுப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன. - படம்: சிங்கப்பூர்ச் சிறைத்துறை
multi-img1 of 2

மஞ்சள் நாடா திட்டமும் ‘பெனிஃபிட் காஸ்மெடிக்ஸ்’ தென்கிழக்காசியா நிறுவனமும் அன்னையர் தினத்தையொட்டி ஏ4 சாங்கி சிறைச்சாலையிலிருக்கும் (Institution A4) பெண் கைதிகளுக்காக ஒரு தனித்துவமான அழகுப் பயிலரங்கை நடத்தின.

திங்கட்கிழமை (மே 5) நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் தோல் பராமரிப்பு, ஒப்பனை சார்ந்த உதவிக்குறிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், இது கைதிகளுக்கும் அவர்களின் தாய்மார்கள் அல்லது மகள்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது.

‘பெனிஃபிட்’ நிறுவனத்தின் அனுபவமிக்க பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில், இந்தப் பயிலரங்கில் தோல் பராமரிப்பின் அடிப்படைகளும் ஒப்பனை முறைகளும் பெண் கைதிகளுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் கற்பிக்கப்பட்டன.

இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களை சிறப்பாக பராமரித்துக் கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொண்டனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அன்புக்குரியவர்களுடன் ஓர் அமைதியான சூழலில் நேரடியாக மனம்விட்டு கலந்துரையாடும் வாய்ப்பைப் பங்கேற்பாளர்களில் பலருக்கு இந்நிகழ்ச்சி வழங்கியது.

இந்தப் பயிலரங்கு, குடும்பங்களை மையமாகக் கொண்டு மறுவாழ்வை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் சிறைத்துறை, மஞ்சள் நாடா திட்டம், இரண்டின் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக அமைந்ததாகவும், பங்கேற்பாளர்கள் அதிக உற்சாகத்துடன் நடவடிக்கைகளில் கலந்துகொண்டதாகவும் மஞ்சள் நாடா திட்டத்தின் உதவி இயக்குநர் சரஸ்வதி குணசேகரன் தெரிவித்தார்.

மஞ்சள் நாடா திட்டத்தின் உதவி இயக்குநர் சரஸ்வதி குணசேகரன்.
மஞ்சள் நாடா திட்டத்தின் உதவி இயக்குநர் சரஸ்வதி குணசேகரன். - படம்: சிங்கப்பூர்ச் சிறைத்துறை

“இந்தப் பயிலரங்கு அவர்களுக்கு எளிமையான ஒப்பனை முறைகளை அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில் பகிரப்பட்ட அனுபவங்கள் வழியாக அன்புக்குரியவர்களுடன் உள்ள உறவுகளை இது வலுப்படுத்தியதோடு மீண்டும் சமூகத்தில் இணைய கைதிகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டியது,” என்று அவர் கூறினார்.

பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து, புதிதாகக் கற்றுக்கொண்ட நுட்பங்களைப் பயிற்சிசெய்து மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கியதாக செல்வி சரஸ்வதி கூறினார்.

“கைதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் அர்த்தமுள்ள வழியில் இணைத்து, பரஸ்பர அக்கறையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் ஒரு வசதியான சூழலாக இது அமைந்தது,” என்றார் அவர்.

“வெற்றிகரமான மறுவாழ்வுக்கும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைவதற்கும் குடும்பமும் சமூகமும் வழங்கும் ஆதரவு முக்கியமானது. இத்தகைய ஆதரவு, நேர்மறையான சமூக அடையாளத்தை உருவாக்கும் வாய்ப்பையும் வழங்கி, கைதிகள் மீண்டும் குற்றம் செய்வதைத் தவிர்க்க உதவுகிறது,” என்று அவர் சொன்னார்.

48 வயது ஏன்னி (உண்மைப் பெயரன்று) போன்ற பங்கேற்பாளர்களுக்கு இந்த அனுபவம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.

தற்போது ஐந்தாவது முறையாக சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் அவர், “என் தாயார் மனம் நெகிழ்ந்து, மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார். இந்த அனுபவத்தின்மூலம், குடும்பத்துடன் செலவிடும் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அறிந்தேன்,” என்று பகிர்ந்துகொண்டார்.

மற்றொரு பங்கேற்பாளரான சாராவுக்கு (உண்மைப் பெயரன்று) இந்தப் பயிலரங்கு தனது தாயுடனான அவரின் முறிந்த உறவை மீண்டும் சரிசெய்வதற்கான ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கைதிகளுக்கும் அவர்களின் தாய்மார்கள் அல்லது மகள்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த இந்த நிகழ்ச்சி வாய்ப்பளித்தது.
கைதிகளுக்கும் அவர்களின் தாய்மார்கள் அல்லது மகள்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த இந்த நிகழ்ச்சி வாய்ப்பளித்தது. - படம்: சிங்கப்பூர்ச் சிறைத்துறை

“இந்த அனுபவம்வழி, என் தாயுடனான உறவு பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வலுவாகியுள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு என் கடந்தகால தவறுகளுக்கு அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

தாய்மையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவிய இந்நிகழ்ச்சி, தனது தாயாரை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ள உதவியதாகவும் அவர் கூறினார்.

“இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சிங்கப்பூர் சிறைத்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்