தன்முனைப்புப் பேச்சாளரும் ஊழியரணித் திறன் மேம்பாட்டுப் பயிற்றுவிப்பாளருமான டேவிட் கிங் துரைராஜன், 43, இவ்வாண்டிற்கான மக்கள் கவிஞர் மன்றத்தின் உழைப்பாளர் விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.
மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மே 1ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
திரு டேவிட் தமது பள்ளிப் பருவத்திலேயே குண்டர் கும்பலில் சேர்ந்தவர். தமது 19வது வயதில் நடந்த கும்பல் சண்டையில் உயிர் நண்பரை இழந்த திரு டேவிட், தொடர்ந்து பல பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டார். அதனால் அவர் எட்டு ஆண்டுகளைச் சிறையில் கழிக்க நேரிட்டது.
அப்போது கல்வியிலும் இறைவனிடத்திலும் தஞ்சம் புகுந்த அவர், சிறையிலிருந்து வெளியேறியதும் உபகாரச் சம்பளம் பெற்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் பட்டப்படிப்பு மேற்கொண்டார்; இங்கிலாந்தில் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்; பின்னர் அமெரிக்காவிலும் மேற்கல்வி பயின்றார்.
திரு டேவிட் இன்று இளையர்களுக்கு நல்ல வழிகாட்டியாக, தவறான பாதையில் செல்லாமலிருக்க ஊக்குவித்து வருகிறார். ‘மினிஸ்ட்ரி ஆஃப் எம்பவர்மன்ட்’ எனும் நிறுவனத்தையும் தொடங்கி, பிறரின் முன்னேற்றத்திற்கு அவர் உதவுகிறார். தமது சமூகப் பணிகளுக்காக அவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
“நான் பிறக்கும்போது கெட்டவனாக இல்லை. யார் கெட்டவர்களாகப் பிறக்கிறார்கள்? என் தாயார் ஒருபோதும் என்னைக் கைவிடவில்லை. சிறையிலிருந்தவாறே நான் ‘என்’ நிலை, ‘ஓ’ நிலை, ‘ஏ’ நிலைகளில் கல்வி பயின்றேன். சிறையிலிருந்து வெளியேறியதும் நான் மீண்டும் படிக்கச் சிரமப்பட்டேன்.
“ஆனால், என் சிறை ஆலோசகர் ‘ஒருபோதும் முயற்சிடைக் கைவிடாதே!’ என்று என்னிடம் கூறினார்; என் வாழ்வில் நோக்கம் தேவை என்றார். நம்பிக்கையில்லாத இளையர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே ஊக்குவித்துக்கொண்டேன்,” என்றார் திரு டேவிட்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மைக் திருமன் அவருக்கு அவ்விருதை வழங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
பட்டுக்கோட்டையாரைப் பற்றித் தாம் படித்தவற்றைப் பகிர்ந்துகொண்ட திரு மைக் திருமன், மக்கள் கவிஞர் மன்றத்தின் செயல்பாடுகளையும் பாராட்டினார். மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக வருகையளித்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும் திரைப்படக் கலைஞருமான ரோகினி, ‘மாறிவரும் இளையர் உலகில் கற்றலின் தேவை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.