தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மங்கல இசைக்கலைஞர்களைச் சிறப்பித்த பெண் நாதஸ்வரக் கலைஞர்

4 mins read
4813df70-25bb-41c5-9600-3045e28b4d8c
மலேசியத் தமிழ்நெறிக் கழக மாணவர் பண்பாளர் விழாவில் இசைவிருந்து படைத்த மலேசிய நாதஸ்வரக் கலைஞர் குமாரி அஞ்சலி - படம்: அஞ்சலி கதிரவன்

பெரும்பாலும் வயலின், பியானோ, கித்தார் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் பெண்களுக்கு மத்தியில் நாதஸ்வரக் கலைஞர் என்ற தனித்துவமிக்க பாதையைத் தேர்ந்தெடுத்தார் குமாரி அஞ்சலி கதிரவன், 31. 

பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்கலையில் பெண்கள் அரிதாகவே காணப்படுகின்றனர்.

ஆனால், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த குமாரி அஞ்சலிக்கு அது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. 

சொல்லப்போனால், அதுவே தம்மை நாதஸ்வரம் கற்றுக்கொள்ளத் தூண்டியதாகக் கூறினார் குமாரி அஞ்சலி.

இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், கேள்வி ஞானத்தில் ஏழு வயதிலிருந்தே ஒரு பாடகியாக வலம் வந்துள்ளார்.

பல்லூடகப் படைப்பாற்றல் கல்வியில் பட்டயம் பெற்ற குமாரி அஞ்சலிக்கு எப்போதும் இசைமீது தனி நாட்டம் இருந்துவந்துள்ளது. அதன் வெளிப்பாடாக அகரம் இசைப்பள்ளியையும் அவர் நிறுவினார்.

தமது 20வது வயதில் தமிழ்நாட்டின் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசையை முறைப்படி, இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.

மனிதக் குரலின் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் நாதஸ்வரம் ஒரு கடுமையான ஆசான் எனலாம். அது, ஒரு பாடகருக்கு குரலை வலிமையுடனும் துல்லியத்துடனும் வெளிப்படுத்தக் கற்றுக்கொடுக்கும்

எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல அதே பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டுடன் நாதஸ்வரத்தையும் கற்றுக்கொள்ள குமாரி அஞ்சலி முடிவுசெய்தார்.

“குடும்பத்தினர் முதலில் தயங்கினாலும் என் விருப்பத்திற்கு இணங்க என்மீது நம்பிக்கை வைத்து இந்தியாவுக்கு வழியனுப்பினர்,” என்ற குமாரி அஞ்சலி, தம் பெற்றோரின் ஊக்குவிப்பால் முதன்முறையாக இந்தியாவிற்குச் சென்றார். 

தம் தந்தையார் கே.எஸ். கதிரவனுடன் குமாரி அஞ்சலி.
தம் தந்தையார் கே.எஸ். கதிரவனுடன் குமாரி அஞ்சலி. - படம்: இன்ஸ்டகிராம்

“நாதஸ்வரம் கற்கப்போகிறேன் என அஞ்சலி என்னிடம் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அங்கு பல இடர்ப்பாடுகளையும் சவால்களையும் அவர் சந்தித்தார். பலமுறை மனந்தளர்ந்து மலேசியாவுக்கே திரும்பவும் அவர் எண்ணினார். ஆனால், அப்படி நிறுத்திவிட்டால் பெற்றோரிடமும் ‘உன்னால் சாதிக்க முடியாது’ என வசைபாடியோரிடமும் என்ன சொல்வது என்ற எண்ணம் அவரை அந்த இசைக்கருவியை தொடர்ந்து கற்றுக்கொள்ள செய்தது,” என்றார் குமாரி அஞ்சலியின் தந்தையார் கே.எஸ். கதிரவன், 60.

அங்கு ஐந்தரை ஆண்டுகள் செலவிட்டு திருக்களர் துரை பாரதிதாசன் போன்ற அனுபவம் வாய்ந்த குருமார்களிடம் குமாரி அஞ்சலி நாதஸ்வரம் கற்றுக்கொண்டார். 

“பெண்கள் இந்த இசைக் கருவிகளைத்தான் வாசிக்க வேண்டும் என்ற ஒரு முத்திரை இருந்தது. நான் ஏன் வித்தியாசமான ஒன்றை கற்றுக்கொள்ளக்கூடாது எனத் துணிந்து நாதஸ்வரத்தை தேர்ந்தெடுத்தேன்,” என்றார் குமாரி அஞ்சலி. 

திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்களின்றி ஒலிப்பதிவை பயன்படுத்தும் போக்கைக் கவனித்த குமாரி அஞ்சலி, இதனால் மலேசியாவில் மங்கல இசையை மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் நாதஸ்வரக் கலைஞராக உருவெடுத்தார்.

நாதஸ்வரம் எளிதான இசைக்கருவி அன்று. அதற்கேற்ப தொடக்கத்தில் நிறைய சவால்களைச் சந்தித்தார் குமாரி அஞ்சலி.

தலைச்சுற்றல், மூச்சுச்திணறல், கை வலி, வீக்கம், சீவாளிக்கு அழுத்தம் கொடுப்பதால் கீழ் உதடு கிழிந்து இரத்தம் வருவது போன்ற பல சிரமங்களை எதிர்கொண்டதாகப் புன்முறுவலுடன் பகிர்ந்துக்கொண்டார். 

தவறான முடிவை எடுத்துவிட்டோமா என்ற தயக்கமும் எழுந்ததாகக் கூறிய அவர், எவ்வளவு கடினமாக இருந்தாலும் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும் கொண்டார். 

தமது வளர்ச்சிக்கு சமூக ஊடகம் பெரும்பங்கு வகித்ததாகக் கூறினார் குமாரி அஞ்சலி.

“தொழில்சார்ந்த வளர்ச்சி எங்கே கிடைக்குமோ அங்கே (சமூக ஊடகத்தில்) நான் நாதஸ்வரம் வாசிக்கும் காணொளிகளைப் பதிவுசெய்தேன். அதனால், நிறைய வாய்ப்புகளும் வந்தன,” என்றார் குமாரி அஞ்சலி. 

அதே நேரத்தில் சிலரின் குறைகூறலுக்கும் ஆளானார்.

“நாதஸ்வரத்தை ஏன் அவமானப்படுத்துகிறார்? நீயெல்லாம் ஏன் நாதஸ்வரம் வாசிக்கிறாய்? போன்ற பல எதிர்மறை கருத்துகள் வந்தன,” என்றார் குமாரி அஞ்சலி.

“என்ன செய்தாலும் குறைசொல்ல ஒரு கூட்டம் இருக்கும். எப்படி நாம் ஆதரவளிப்போரை ஏற்கிறோமோ, அதே மாதிரி குறைசொல்பவர்களையும் நாம் ஏற்க வேண்டும்,” என்கிறார் இவர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் நடந்தேறிய சரணம் (சரண்டர்) இசை நிகழ்ச்சி உட்பட திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளில் தமது நாதஸ்வரத்தால் பலரைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். 

மதுரையைச் சேர்ந்த மறைந்த உலகின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் கலைமாமணி எம்.எஸ்.பொன்னுத்தாயைத் தமது முன்மாதிரியாகக் கருதும் குமாரி அஞ்சலி, இனிவரும் தலைமுறையினர் இவ்விசைக்கருவியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்த விரும்புகிறார்.

தவில்-நாதஸ்வரக் கலைஞர்களுக்கு ஒரு சமர்ப்பணம்

மங்கல இசை தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று.

நூற்றாண்டுகளாக மங்கல இசையை எழுப்பும் நாதஸ்வர-தவில் இசைக்கருவிகள் மங்கல நிகழ்ச்சிகளில் ஒலித்து வருகின்றன.

அவ்விசையின்றி எந்த மங்கல நிகழ்ச்சியும் முழுமை பெறாது என்பதே உண்மை.

அகரம் இசைப்பள்ளியின் ஏற்பாட்டில் மலேசியா நாதஸ்வர-தவில் கலைஞர்களை கௌரவிக்கும் மங்கலப் பேரிசை 2025.
அகரம் இசைப்பள்ளியின் ஏற்பாட்டில் மலேசியா நாதஸ்வர-தவில் கலைஞர்களை கௌரவிக்கும் மங்கலப் பேரிசை 2025. - படம்: அஞ்சலி கதிரவன்

அப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்த தமிழ் மரபிசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களைச் சிறப்பிக்க மங்கலப் பேரிசை என்ற இசை விருது விழாவுக்கு ஏற்பாடு செய்தார் குமாரி அஞ்சலி. 

அகரம் இசைப்பள்ளியின் ஏற்பாட்டில் இவ்வாண்டு ஜூன் மாதம் நடந்தேறிய நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாதஸ்வர-தவில் இசைக் கலைஞர்கள் சிறப்பிக்கப்பட்டனர். 

அவர்களில் ஒருவர் 31 ஆண்டுகளாகக் கலைத்துறையில் ஈடுபட்டுவரும் தவிலிசைக் கலைஞர் யுகராஜன் செல்வராஜா, 45.

தவிலிசை கலைஞர் யுகராஜன் செல்வராஜா.
தவிலிசை கலைஞர் யுகராஜன் செல்வராஜா. - படம்: இன்ஸ்டகிராம்
நாதஸ்வரக் கலைஞர் அஞ்சலி கதிரவனுடன் (இடது) தவிலிசைக் கலைஞர் யுகராஜன் செல்வராஜா.
நாதஸ்வரக் கலைஞர் அஞ்சலி கதிரவனுடன் (இடது) தவிலிசைக் கலைஞர் யுகராஜன் செல்வராஜா. - படம்: இன்ஸ்டகிராம்

“நாதஸ்வர, தவிலிசைக் கலைஞர்களை மதித்துச் சரிசமமாக அங்கீகாரமும் விருதும் வழங்கிய இத்தகைய நிகழ்வை நான் கண்டது இதுவே முதல்முறை. பல கலைஞர்களில் ஒருவராக எனக்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. கலைஞர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மக்கள் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. நிறைய நிகழ்ச்சிகளில் வாசிப்பதற்கும் வாய்ப்புகள் வந்தன. கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக இந்த மங்கலப் பேரிசை நிகழ்ச்சி அமைந்தது. மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தித் தந்த அகரம் இசைப்பள்ளிக்கும் அஞ்சலிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் திரு யுகராஜன்.

“இந்த விருது விழா மலேசியாவில் மட்டுமின்றி உலகத்தில் இருக்கும் அனைத்து நாதஸ்வர-தவில் கலைஞர்களுக்கும் ஒரு சமர்ப்பணம்,” என்றார் குமாரி அஞ்சலி. 

இன்றளவில் நாதஸ்வர-தவில் கலைஞர்களின் மதிப்பு குறைந்து காணப்படுவதாக உணர்ந்த குமாரி அஞ்சலி, அவர்களிடம் பேரம் பேசுவது, அவமதிப்பது போன்ற போக்கைச் சுட்டினார்.

அவர்களது கடும் உழைப்பு மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கான உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இவ்விசை விருது விழாவின் நோக்கமாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்