தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிவோம்

3 mins read
0952ad86-93b6-467b-a11f-e21cc5136fce
ஆண்களும் பெண்களும் பாலினம் தொடர்பாக வெவ்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டும் என்று சமுதாயம் சிறு வயதிலிருந்தே வலியுறுத்துவதைக் காண முடிகிறது.  - படம்: இணையம் 

சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  

ஆணாதிக்க உணர்வு

“உடல்ரீதியான வன்முறையைக் கையாளும் ஒருவர் தமது அதிகாரத்தைக் காட்ட விரும்புகிறார்,” என்றார் மனநல மருத்துவர் கோபால் மஹே. 

பொதுவாக, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆண்களின் கொடுமையான எண்ணங்களின் பிரதிபலிப்பாகும்.

இதற்கு ஆங்கிலத்தில் ‘டாக்சிக் மெஸ்குலினிட்டி’ (Toxic masculinity) என்று பெயர். தீங்கு விளைவிக்கும் நம்பிக்கைகள், பொதுவாகப் பெண்களைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதில் உடல்ரீதியான வன்முறையும் ஒரு பகுதியாகும். 

“ஆண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சிலரது சிந்தனை இந்த தீய நடத்தைக்கு வழிவகுக்கிறது. மேலும், நம் சமுதாயத்தில் ஆண்கள் இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை முதியவர்கள் சிலரும் எதிர்பாராதவிதமாக வலியுறுத்துகின்றனர்,” என்றார் திரு கோபால்.

மௌனம் சம்மதமா? 

தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாவோர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணலாம். அவர்களின் தன்னம்பிக்கையும் சரிந்துவிடலாம். உடல் ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட பத்தில் அறுவர் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர் என்று அதே ஆய்வில் கண்டறியப்பட்டது.  

ஒருவர் தாம் அனுபவிக்கும் கொடுமையைப் பற்றி மௌனம் காத்து இதுபோன்ற உறவைத் தொடர்கின்றனர்.

இதற்கு அச்ச உணர்வு, தொடர்பில் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுதல், வன்முறை நடவடிக்கைகளை மன்னித்தல், ஒன்றும் செய்ய இயலாத சோர்வு நிலை ஆகிய நான்கு காரணங்கள் உள்ளன என்று தெரிவித்தது மாதர் செயலாய்வுச் சங்கம் (AWARE). 

இதனால், உடல்ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட பத்தில் ஆறு பெண்கள் மீண்டும் மீண்டும் வன்முறைச் செயல்களுக்கு ஆளாகின்றனர்.  

ஆண் ஆதிக்க நச்சுத்தன்மை

ஆண்களிடையே ஏற்படும் ஒருவித ஆணாதிக்க நச்சுத்தன்மை நடத்தை சிறுவயதிலிருந்தே தலைமுறை தலைமுறையாக வந்திருக்கக்கூடும் என்றார் மூத்த சமூக சேவகரும் சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான திருமதி பாரதி மனோகரன். 

“உதாரணத்துக்கு ஆண்கள் அழக்கூடாது, வன்முறைக்கு ஆளானாலும் பெண்கள் தொடர்ந்து குடும்பத்துக்காக அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகள் இன்றும் நம்மிடையே உள்ளன. இதனால், பல குடும்பங்களில் வன்முறை நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வராமலே போகின்றன. குறிப்பாக இது நம் சமூகத்தில், சமுதாயத்தில் இயல்பாகிவிட்டது,” என்றார் அவர்.

மனநலப் பாதிப்பு

ஆண்களும் பெண்களும் வெவ்வேறு பாலியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டும் என்று சமுதாயம் சிறு வயதிலிருந்தே வலியுறுத்தலாம்.

இதுபோன்ற எதிர்பார்ப்புகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களிடையேயும் நாளடைவில் பெரும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார் ‘மெண்டல் ஆக்ட்’ லாப நோக்கமற்ற அமைப்பின் நிர்வாக இயக்குனரும் சமூக ஊழியருமான திரு தேவானந்தன் தமிழ்செல்வி (தேவன்).

“ஆண் குழந்தையை அழவிடாமல் தடுத்தால் பிற்காலத்தில் அவர் வளர்ந்து தமது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொள்ள நினைப்பார். இது மனரீதியாக மிகவும் ஆபத்தானது. அது சில நேரங்களில் வன்முறை நடத்தையையும் ஏற்படுத்தலாம்,” என்றார் தேவன். 

திரைப்படத் தாக்கம்

ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன என்று பலருக்கும் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால் இவ்வாறு வரையறுப்பது ஆபத்தான ஒன்று என்று கருதுகிறார் திருமதி பாரதி. 

மேலும், இந்த வகை நடத்தை வீட்டில் தொடங்கினாலும், மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஊடகங்கள் வழியாகவும் இது ஆதிக்கம் பெறுகிறது.  

“சில திரைப்படங்களில் நாயகன் நாயகியைப் பின்தொடர்தல், அன்பை வெல்ல ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற காட்சிகளைப் பார்த்திருப்போம். ஆனால், அன்பு, காதல் எனும் கருப்பொருளை இக்காட்சிகள் தவறாகச் சித்திரிக்கின்றன,” என்று கருத்துரைத்தார் உள்ளூர் திரைப்பட இயக்குநர் கெவின் வில்லியம். 

பல தலைமுறைகளாகத் தொடரும் இந்த ‘ஆணாதிக்க நச்சுத்தன்மை’ சிந்தனையைக் களைவது எளிதல்ல.  

“தவறான போக்குகளைத் துணிந்து தட்டிக் கேட்க பெண்கள் முற்பட வேண்டும். அதேசமயம், ஆண்கள் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தாமல் அதைப் பற்றிப் பேசப் பழகவேண்டும். மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் தயங்காமல் முன்வந்து உதவி கேட்க வேண்டும்,” என்றார் திருமதி பாரதி. “ஆனால், மாற்றம் என்பது வீட்டில் தொடங்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார் அவர். 

குறிப்புச் சொற்கள்