தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியவர்

3 mins read
உயிர்வாழ ஐந்து விழுக்காடு வாய்ப்பே இருந்த நிலையில், மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்தவர். குடும்பம் அமைத்து தன்னை மேம்படுத்தி, சமூகத்துக்கும் உதவிகள் செய்து வருபவரின் வெற்றிப் பயணம்.
55100c4c-0138-4d83-9d84-bd9bdb9456fc
பக்கவாதத்திலிருந்து மீண்டு கல்வி, வேலைப் பயணத்தில் வெற்றிகளைக் குவித்துவரும் நோவெல் பீட்டர் சேவியர், 51, தன் நூல் மூலம் அனைத்துலக மக்களைச் சென்றடைய விரும்புகிறார். - படம்: ரவி சிங்காரம்

மே 13, 2013. அன்னையர் தினத்துக்கு அடுத்த நாள். தாயாருடன் உணவுண்ண வீட்டிற்கு விரைந்த நோவெல், திடீரெனத் தலையில் தாங்கமுடியாத வலியை உணர்ந்தார்.

சாதாரண தலைவலி என்றுதான் நினைத்தார். ஆனால் இடது கையும் நடுங்கியது. உடலின் இடப்பக்கத்தில் உணர்வே இல்லை. வாந்தி எடுத்தார். பின்னர் மயங்கிவிட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூளையில் ‘கோல்ஃப்’ பந்து அளவிலான ரத்தக் கட்டு இருந்தது தெரியவந்தது. அதை நீக்க அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உயிர் பிழைப்பது கடினம். பிழைத்தாலும் சாதாரணமாக நடக்கவோ, பேசவோ முடியாது என்றனர் மருத்துவர்கள்.

தற்போது 51 வயதாகும் நோவெல் பீட்டர் சேவியர், சிரித்து சரளமாகப் பேசுகிறார். சிரமப்பட்டாலும் அவரால் நடக்க முடிகிறது. மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் பணியாற்றுகிறார்.

‘ஒன்றுமில்லாதவர் என்ற நிலையிலிருந்து நாயகர் வரை’ (Zero to Hero) எனும் அவரது நூல் இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியானது. இதன் விற்பனையில் கிடைக்கும் நிதி மூலம் அவர் பிலிப்பீன்சிலுள்ள சாலையோரக் குடும்பங்களுக்கு உணவு வழங்குகிறார்.

நோவெல் வெளியிட்டுள்ள நூல் (Zero to Hero).
நோவெல் வெளியிட்டுள்ள நூல் (Zero to Hero). - படம்: நோவெல் பீட்டர் சேவியர்
தன் வாழ்க்கைக் கதை மூலம் அனைத்துலக அளவில் மக்களைச் சென்றடையவேண்டும் என விரும்பி, ஒரு நாள் பின்னிரவு 2.30 மணிக்குத் தன் நூலை எழுதத் தொடங்கினார் நோவெல்.
தன் வாழ்க்கைக் கதை மூலம் அனைத்துலக அளவில் மக்களைச் சென்றடையவேண்டும் என விரும்பி, ஒரு நாள் பின்னிரவு 2.30 மணிக்குத் தன் நூலை எழுதத் தொடங்கினார் நோவெல். - படம்: ரவி சிங்காரம்
நோவெலின் மனைவி பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்பதால், அவர்மீதுள்ள அன்பின் எதிரொலியாக அங்குள்ள சாலையோரச் சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உணவு வழங்குகிறார் நோவெல்.
நோவெலின் மனைவி பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்பதால், அவர்மீதுள்ள அன்பின் எதிரொலியாக அங்குள்ள சாலையோரச் சிறுவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உணவு வழங்குகிறார் நோவெல். - படம்: நோவெல் பீட்டர் சேவியர்

ஆகாயப் படை வீரர்

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையில் 20 வயதில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் முழு நேர வீரராகச் சேவையாற்றியவர் நோவெல். தொடக்கத்தில் வான் போக்குவரத்து அதிகாரியாகவும் பின்பு ‘சூப்பர் பூமா’ ஹெலிகாப்டர் சிமுலேட்டர் (simulator) பயிற்றுவிப்பாளராகவும் அவர் பணியாற்றினார்.

பின்னர் புதிய அனுபவங்களை நாடி, விடுதித் தொழிலாளர், பாதுகாப்பு அதிகாரி, கூலி, குடிநுழைவு அதிகாரி, கூட்டுரிமை வீட்டு மேலாளர் என பல்வேறு வேலைகளில் அவர் பணிபுரிந்தார். வாழ்க்கை சுமுகமாகத் தொடர்ந்துகொண்டிருந்தபோது பக்கவாதத்தினால் எல்லாம் தலைகீழாக மாறியது.

பக்கவாதம் வாழ்வை முடக்கிவிடாது

அறுவை சிகிச்சைக்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்றவேண்டியிருந்தது. 65 நாள்கள் நினைவற்ற நிலையில் இருந்தார். அப்போது நம்பிக்கை ஒளி மங்கியது. உறவினர் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைக்கூடத் தொடங்கிவிட்டார்.

நீக்கப்பட்ட மண்டை ஓட்டுப் பகுதியை மூட, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு டைட்டானியத்தாலான ஓடு பொருத்தப்பட்டது. அதனால், மனத்தளவிலும் உடலளவிலும் நோவெல் தன்னை ‘இரும்பு மனிதர்’ எனக் கருதுகிறார்.
நீக்கப்பட்ட மண்டை ஓட்டுப் பகுதியை மூட, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு டைட்டானியத்தாலான ஓடு பொருத்தப்பட்டது. அதனால், மனத்தளவிலும் உடலளவிலும் நோவெல் தன்னை ‘இரும்பு மனிதர்’ எனக் கருதுகிறார். - படம்: நோவெல் பீட்டர் சேவியர்

“எப்படியோ, இறைவனின் அருளால் நான் உயிர் தப்பினேன்,” என்றார் நோவெல்.

நினைவு திரும்பியும், இடது கை, இடது காலை முன்புபோல் இயக்கமுடியவில்லை. பல வி‌‌ஷயங்கள் மறந்துவிட்டன. கழிவறையை உபயோகிப்பது, எழுத்துக்கூட்டிப் படிப்பது, நடப்பது என அனைத்தையும் தொடக்கத்திலிருந்து மீண்டும் கற்கவேண்டியிருந்தது. அந்த மனஉளைச்சலில் அவர் ஒருமுறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். நோவெலின் பராமரிப்பாளர்தான் அவரைத் தடுத்தார்.

காதல், கல்வி, வேலை

சீராகப் பேச முடியாவிட்டாலும் தன் மனங்கவர்ந்த தாதியிடம் நோவெல் பேச்சுக் கொடுத்தார். இருவருக்குமிடையே காதல் பூத்து, திருமணம் நடந்தது. அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு மதியிறுக்க நோய் (Autism) இருப்பது தெரியவந்தது. “என் மகனுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க உறுதிபூண்டேன். நாங்கள் வெற்றியடையவேண்டும் என முடிவெடுத்தேன்,” என்றார் நோவெல்.

நோவெலுக்குப் படிப்பில் அளவற்ற நாட்டம் இருந்தது. ‘எஸ்ஜி இனேபல்’ ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்வி விருதைப் பெற்று, எண்ணங்களை ஆக்ககரமாக மாற்றியமைப்பதன் மூலம் விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, தொடர்புத்திறன்களை வளர்க்கும் படிப்பில் (Neuro-linguistics programming) தேர்ந்தார். “கைத்தடியோடு வகுப்புகளுக்கு ரயிலில் செல்லும்போது நான் அடிக்கடி விழுந்திருக்கிறேன். ஆனால், படித்து முடிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தேன்,” என்றார் நோவெல். பின்னர் அவர் உளவியலும் கற்றார்.

‘எஸ்பிடி’ அறநிறுவன வேலைவாய்ப்பு ஆலோசகரின் உதவியுடன் வேலை தேடிய நோவெல், கடுமையான தேர்வுச் சுற்றுகளுக்குப் பிறகு மரினா பே சேண்ட்சில் வேலையில் சேர்ந்தார்.

“வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், உடற்குறையுள்ளோர் சாதாரண மனிதர்களைவிடக் கூடுதல் முயற்சி செய்து நிறுவனங்களுக்கு வலுச்சேர்ப்பார்கள்,” என்றார் நோவெல்.

சாதாரண மனிதரால் செய்யமுடியாத பலவற்றையும் செய்துள்ள நோவெல், திடமான மனம் இருந்தால் பக்கவாதம் ஒரு தடையன்று என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
சாதாரண மனிதரால் செய்யமுடியாத பலவற்றையும் செய்துள்ள நோவெல், திடமான மனம் இருந்தால் பக்கவாதம் ஒரு தடையன்று என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. - படம்: ரவி சிங்காரம்
வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், உடற்குறையுள்ளோர் சாதாரண மனிதர்களைவிடக் கூடுதல் முயற்சி செய்து நிறுவனங்களுக்கு வலுச்சேர்ப்பார்கள்.
நோவெல் பீட்டர் சேவியர்
அப்போதைய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், ‘எஸ்ஜி இனேபல்’ ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்வி விருதை நோவெலுக்கு வழங்கினார்.
அப்போதைய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், ‘எஸ்ஜி இனேபல்’ ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்வி விருதை நோவெலுக்கு வழங்கினார். - படம்: நோவெல் பீட்டர் சேவியர்

அன்பில் தொடரும் பயணம்

வாழ்க்கை அனுபவம் நோவெலின் மனதை உருக்கியது. அண்டைவீட்டாருக்குப் பக்கவாதம் ஏற்பட்டபோது அவருக்கு உணவு வாங்கி, காப்பீட்டுத் தொகையைப் பெற அவர் உதவினார். லோவர் டெல்டா சாலையில் குடும்ப சேவை நிலையத்தில் தொண்டூழியராகவும் சேவையாற்றினார் நோவெல்.

“வாழ்வில் துன்பங்களை எதிர்நோக்கினாலும் போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்பதை என் வாழ்க்கை மூலம் உணர்த்த விரும்புகிறேன்,” என்றார் நோவெல்.

நோவெலை noel.peterxavier72@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியின் வழியாகத் தொடர்புகொள்ளலாம்.

இன்று சூதாட்டக்கூடப் பணியாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், நூலாசிரியர், சமூக சேவையாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளார் நோவெல்.
இன்று சூதாட்டக்கூடப் பணியாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், நூலாசிரியர், சமூக சேவையாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளார் நோவெல். - படம்: நோவெல் பீட்டர் சேவியர்
குறிப்புச் சொற்கள்