ஒப்பனை செய்ததே தெரியாதது போன்ற தோற்றம், மென்மையான பளபளப்பு தரும் ஒப்பனை முறை எனப் பெண்கள் பல ஆண்டுகள் பின்பற்றி வந்த ஒப்பனைப் போக்கு மாறி, இந்த ஆண்டு, ஒப்பனை உலகில் புதிய போக்கு அறிமுகமாகியுள்ளது.
கண் இமைகளுக்குமேல் பூசப்படும் கவர்ச்சிகரமான மை, உதடுகளில் மின்னும் உதட்டுச்சாயம், கன்னங்களில் பளபளக்கும் ‘ப்ளஷ்’ என மிகையாக ஒப்பனை செய்துகொள்ளும் போக்கு வலம்வரத் தொடங்கியுள்ளது.
‘ஜென் ஸி’ வயதினர் தங்களை வெளிப்படுத்தப் பின்பற்றும் பாணியும், டிக்டாக்கில் அதிகமாகப் பார்க்கப்படும் அத்தகைய ஒப்பனைக் காணொளிகளும் இந்தப் போக்கிற்கு வழியமைத்துள்ளன.
ஒளிரும் வண்ணங்களும் அதிகப்படியான அலங்காரங்களும் இந்த மிகை ஒப்பனைப் போக்கில் அங்கம் வகிக்கின்றன. 2010களில் அணியப்பட்ட ஒப்பனை முறை மலையேறி இப்போது விளையாட்டுத்தனமாக ஒப்பனை அணியும் மோகம் வந்துள்ளது.
“எப்போதும் அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பதைவிட, ஒருவர் தன்னை ஒப்பனை மூலம் வெளிக்காட்டும் போக்கு இப்போது பிரபலமாக உள்ளது,” என்றார் லாஸ் ஏஞ்சலிசில் உள்ள ஒப்பனைக் கலைஞர் செரீனா லீ.
இதற்குச் சமூக ஊடகமும் காரணம் என்று சொல்லலாம். பல வண்ணங்கள் கலந்த கண் மைகள், பார்த்தவுடன் வாய்பிளக்க வைக்கும் புருவங்கள், வண்ணக் கண் இமைகள் போன்றவை அதிகமான பார்வைகளைப் பெறுகின்றன.
ஒப்பனை சார்ந்த காணொளிகளைப் பதிவிடும் சமூக ஊடகக் கலைஞர்களும் இத்தகைய போக்குகளை ஆதரிக்கும் வகையில் வித்தியாசமான காணொளிகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
எடுத்துக்காட்டிற்கு அழகுக் கற்கள் பதிந்த உதட்டுச்சாயம், பளபளப்பான உதட்டுச்சாயம் போன்றவை அவற்றில் அடங்கும். ஒப்பனைப் பொருள்களைத் தயாரிக்கும் புகழ்பெற்ற வணிக முத்திரை நிறுவனங்களும் இதற்கு இணங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மேக், பேட் மெக்கிரேத் போன்றவை இந்தப் போக்கை ஆதரிக்கும் வகையில் உயர் நிறமி கொண்ட ஒப்பனைப் பொருள்களை அறிமுகம் செய்துள்ளன.
மிகை ஒப்பனைப் போக்கு, கலாசார மாற்றத்தை வெளிப்படுத்துவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், மக்கள் அவரவர்க்குப் பிடித்தவாறு ஒப்பனை முறையில் தனித்துவத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

