தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களைப் பரவசப்படுத்திய பொங்கல் கொண்டாட்டம்

2 mins read
24c03af1-a1e5-4f76-a988-4526f1e45c72
வெளிநாட்டு ஊழியர்கள் கரும்பை உடைக்கும் விளையாட்டில் பங்கேற்று மகிழ்ந்தனர். - படம்: பே.கார்த்திகேயன்

ஜல்லிக்கட்டு மாடுகள், அறுவடையில் கிடைத்த புத்தரிசி, குடும்பத்தோடு வீட்டுவாசலில் பொங்கல், பொது விடுமுறை.

இவை அனைத்தையும் தங்களின் சொந்த ஊரில் கொண்டாட முடியாமல் வழக்கம்போல் பொங்கல் தினத்தன்று வேலைக்குச் சென்றனர் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.

குடும்பச் சூழல், பணத் தேவை என்பதால் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தாலும் தம் ஊர்ப் பொங்கலுக்காக ஏங்குவதாக வெளிநாட்டு ஊழியர் சீனிவாசன், 25, கூறினார்.

சீனிவாசன் போன்ற வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பொங்கல் உணர்வைக் கொண்டுவர சிங்கப்பூரில் சென்ற வார இறுதியில் பல இடங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

வெளிநாட்டு ஊழியர் நிலையப் பொழுதுபோக்கு நிலையத்தில் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 முதல் 10 மணி வரை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் ஏறக்குறைய 1,500 வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.

மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை நடனங்களும் உறுமி மேள இசையும் வெளிநாட்டு ஊழியர்களைப் பரவசப்படுத்தின. தமிழிலும் பெங்கோலியிலும் குத்துப் பாடல்கள் வெளிநாட்டு ஊழியர்களைத் தாளம் போட வைத்தன. நெருப்பைக் கொண்ட சாகசங்களும் இடம்பெற்றன.

முதன்முறையாக வெளிநாட்டு ஊழியர் நிலையப் பொழுதுபோக்கு நிலையத்தில் பொங்கலுக்காகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடைபெற்றது.
முதன்முறையாக வெளிநாட்டு ஊழியர் நிலையப் பொழுதுபோக்கு நிலையத்தில் பொங்கலுக்காகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடைபெற்றது. - படம்: பே.கார்த்திகேயன்

பங்ளாதே‌ஷிய வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கரகாட்டம் புதிதாக அமைந்தாலும் அவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

அதிர்‌ஷ்டக் குலுக்கலில் $1000 முதல் $50 வரை ரொக்கமாகப் பத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

“முதன்முறையாக ஊழியர்களுக்கு இவ்வாண்டு கரும்பு வழங்கியுள்ளோம். பொய்க்கால் குதிரை ஆட்டமும் முதன்முறையாக நடைபெறுகிறது,” என்றார் வெளிநாட்டு ஊழியர் நிலைய உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சேவியர் ஜோசஃப்.

கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்.
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: பே.கார்த்திகேயன்

“தமிழ்நாட்டில் பொங்கலுக்காக நடத்தப்படும் போட்டிகளை சிங்கப்பூரிலும் வெளிநாட்டு ஊழியர் நிலையம் நடத்துவதைப் பார்க்கும்போது ஊரில் கிடைக்கும் இன்பம் இங்கும் கிடைக்கிறது,” என்றார் புதுக்கோட்டை அண்டக்குளத்தைச் சேர்ந்த தங்கராஜு மனோகரன், 30.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்தாலும், தங்கராஜு மனோகரன், தம் சொந்த ஊரில் வைத்திருக்கும் மூன்று மாடுகளுக்கான செலவுக்கே மாதம் 30,000 ரூபாய் அனுப்பிவருவதாகக் கூறினார். பலரும் தங்கள் சம்பளத்தில் பாதிக்கு மேலாக ஜல்லிக்கட்டு மாட்டை வளர்ப்பதற்கே கொடுத்துவிடுவதாகவும் அவர் கூறினார்.

“மாடு ஜல்லிக்கட்டுக்குச் செல்லும்போது ‘அது இன்னாரின் மாடு’ என அறிவிப்பார்கள். அந்த பெருமைக்காகவே ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்கிறோம்,” என அவருடன் வந்திருந்த நண்பர் செந்தில்குமார் கார்த்திகேயன், 26, கூறினார். தங்குமிடத்தில் பொங்கல் வைக்க முடியாவிட்டாலும், இரவில் கோவிலுக்குச் சென்றதாக அவர் கூறினார்.

ஆந்திராவைச் சேர்ந்த திரு ஆனந்தம் வேலு, பொங்கலை ‘மகர சங்கராந்தி’யாகக் கொண்டாடுபவர். சிங்கப்பூரில் இருந்தாலும் அவர் அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து, கேசரி, சுண்டல், பலகாரங்கள், முறுக்கு போன்றவற்றைத் தயார்செய்து, தம் நிறுவனத்தில் 80 பேருக்குப் பொங்கல் வைத்தார். பின்பு, தங்குமிடத்திலும் 20 நண்பர்களுடன் பொங்கல் வைத்தார்.

தமிழ்நாட்டில் பொங்கலுக்காகப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அத்தகைய போட்டிகளை சிங்கப்பூரிலும் பார்க்கும்போது ஊரில் கிடைக்கும் இன்பம் இங்கும் கிடைக்கிறது. 
தங்கராஜு மனோகரன், 30

“பிள்ளையார் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய மூன்று பண்டிகைகளையும் முதலாளியின் உதவியோடு எங்கள் நிறுவனத்திலேயே கொண்டாடுவோம்,” என்றார் திரு ஆனந்தம்.

குறிப்புச் சொற்கள்