மிகை மெய், மெய்நிகர் தொழில்நுட்ப வல்லுநர்களை இணைத்த மாநாடு

2 mins read
ac0f8ab2-4752-45de-ae75-754bcc698a25
‘மெட்டா ஹொரைசன் டெவலப்பர்’ மாநாட்டில் பங்கேற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள். - படம்: குணசேகரன்

மின்னிலக்க உலகில் தமிழ் மொழிப் பயன்பாட்டைப் புகுத்தும் நோக்கில் அமைந்த கருப்பொருள் ஆய்வைச் (Concept Paper) சமர்ப்பித்து, அனைத்துலக மாநாட்டில் பங்குபெற்றுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்பப் பயிற்சியாளர் குணசேகரன்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகை மெய் (augmented reality), மெய்நிகர் (virtual reality) தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ‘மெட்டா ஹொரைசன் டெவலப்பர்’ மாநாடு நவம்பர் மாதம், தென்கொரியத் தலைநகர் சோலில் நடைபெற்றது.

அதில் உலகெங்கிலுமிருந்து நூற்றுக்கணக்கான மின்னிலக்க வடிவமைப்பாளர்கள், நிரலாக்க வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்றன.

தமிழ் இலக்கியத்தில் பாண்டியர்களின் பங்களிப்பை அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ளும் விதமாக அதனை இணைய விளையாட்டாக வடிவமைக்கும் கருப்பொருளில் அமைந்த தனது சிந்தனையைக் கட்டுரையாகப் படைத்துள்ளார் குணசேகரன்.

“கல்வி-பொழுபோக்கு இணைந்த முறையில் தமிழ் மொழியில் உள்ளடக்கங்கள் அரிதாகவே உள்ளன,” என்று கூறிய குணசேகரன், தனது இந்தக் கட்டுரை அங்கீகரிக்கப்பட்டது பெருமையான தருணமென்றார்.

நவம்பர் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொழியையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கத் தனது புத்தாக்க இந்தியக் கலையகம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்னெடுப்புகளைக் குறித்துப் பகிர்ந்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களை உலகத் தரத்தில் தொழில்நுட்பத் திறன் கொண்ட படைப்பாளர்களாக உருவாக்கும் பயணத்தில் ஈடுபடுவதாகக் கூறிய அவர், இந்நிகழ்ச்சியில் தொழில்நுட்பங்களின் புதிய முன்னேற்றங்கள், மேம்பாடுகள், புதிய கருவிகள் குறித்து அறிந்துகொண்டதாகச் சொன்னார். ‘மேக்கர்ஸ்பேஸ்’ எனும் படைப்பு மையம் குறித்த அனுபவங்களையும் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

“இது உலக நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களைச் சந்திக்கவும் வாய்ப்பாக அமைந்தது,” என்றார் குணசேகரன்.

‘பெரிய மொழி மாதிரித்’ தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியை இணைக்கும் திட்டத்தில் ஈட்டுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புகழ்பெற்று வரும் மெய்நிகர் கண்ணாடித் தொழில்நுட்பத்திலும் தமிழ் மொழி உள்ளடக்கங்களைப் புகுத்துவது குறித்த புரிதலை இப்பயிற்சி மூலம் பெற்றதாகச் சொன்னார்.

கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்குமான தொடர்புகள் குறித்து அறிந்துகொண்டதாகச் சொன்ன அவர், மொழியின் எதிர்கால வளர்ச்சி தொழில்நுட்பம் சார்ந்தே இருப்பதாகக் கூறினார். மொழியை மின்னிலக்க உலகிலும் அனைத்துலக அளவிலும் கொண்டு செல்வது கடினமான செயல் என்றாலும், அதற்குத் தன்னால் இயன்றதைத் தொடர்ந்து செய்வதே தனது இலக்கு என்றார்.

தனது தொழில்நுட்பப் படைப்பாற்றலையும் சமூகப் பங்களிப்பையும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறிய அவர், எதிர்காலத்தில் இளையர்களைத் தேர்ந்தெடுத்துப் புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்