நோன்புப் பெருநாளன்று குடும்பத்துடன் பள்ளிவாசலுக்குச் சென்று உற்றார் உறவினருடன் நாளை இனிதாகச் செலவிடுவது பங்ளாதேஷைச் சேர்ந்த 37 வயது அமீர் ஹுசைனின் வழக்கம்.
சில மாதங்களுக்கு முன்புதான் விடுமுறைக்காகப் பங்ளாதேஷுக்கு சென்ற அவர், இவ்வாண்டு நோன்புப் பெருநாளை சிங்கப்பூரில் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் அமீருக்கு சிறப்பாகவே அமைந்தது.
காலையில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் கலந்துகொண்ட அவர் பிறகு நண்பர்களுக்காக அறுசுவை உணவு சமைத்தார்.
“இந்த நோன்புப் பெருநாளில் குடும்பத்தாருடன் இருக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது,” என்ற அமீர், குடும்பத்துக்கும் உறவினர், அண்டைவீட்டாருக்கும் ‘சலாமி’ எனும் ரொக்க அன்பளிப்பு அனுப்பிவைத்ததாகக் கூறினார்.
அமீர்போல நோன்புப் பெருநாளைச் சிங்கப்பூரில் கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர் பலருக்குக் கிராஞ்சி, செம்பவாங், சூன் லீ பொழுதுபோக்கு நிலையங்களில் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுவும் சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தின் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் அவற்றுக்கு ஏற்பாடு செய்தன.
நிகழ்ச்சிகளில் உள்ளூர், வெளியூர் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதிர்ஷ்டக் குலுக்கலும் இடம்பெற்றது.
‘விஜய்’ தொலைக்காட்சியின் குரேஷியுடன் 2015ஆம் ஆண்டின் வசந்தம் ஸ்டார் வெற்றியாளர் சுபாஷினியும் மலாய்ப் பாரம்பரியக் கலைஞர்களும் கிராஞ்சியில் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கள் படைப்புகளால் மகிழ்வித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“குரேஷியின் நகைச்சுவை என்னைக் கவர்ந்தது. அடுத்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் இன்னும் பெரிதாக, விளையாட்டுக் கூடங்களுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்றார் கிராஞ்சி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சரவணன், 38.
செம்பவாங்கில் தமிழ்நாட்டுப் பாடகர் ஆதித்யா ஆர்.கே., பங்ளாதேஷைச் சேர்ந்த பாடகி ஆசியா இஸ்லாம் டோலா இருவரும் கொண்டாட்டங்களுக்குச் சிறப்பு சேர்த்தனர். சூன் லீயில் பங்ளாதேஷைச் சேர்ந்த பாடகி ஃபர்சானா ரீத்து தாய்நாட்டு நினைவுகளை ஊழியர்களுக்குக் கொண்டுவந்தார்.
“நோன்புப் பெருநாள் கொண்டாட்டமும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியும் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் உதின் மொஹின், 38, என்ற ஊழியர்.
கிராஞ்சி, செம்பவாங் பொழுதுபோக்கு நிலையங்களில் மொத்தம் 3,000 இலவச பிரியாணிப் பொட்டலங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. சூன் லீயில் இரு நாள்களுக்கு முன்பு இரவு உணவு விநியோகிக்கப்பட்டது.
சூன் லீயில் விளையாட்டுக் கேளிக்கைவிழாவும் 2025 முதல் காலாண்டின் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளும் நோன்புப் பெருநாளன்று பிற்பகலில் நடைபெற்றன. அன்றே பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.