தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்கள் கண்டுகளித்த சிங்கே அணிவகுப்பு

3 mins read
eb1894b8-a282-445c-8f06-75c6d661a258
சிங்கே அணிவகுப்பில் நண்பருடன் வெளிநாட்டு ஊழியர் இராமன் சரவணன் (வலம்). - படம்: இராமன் சரவணன்

பல்லினங்களையும் சார்ந்த 60 தோலிசைக் கலைஞர்களின் இசை சங்கமிக்க, சிங்க நடனத்தினர் களமிறங்க, எஃப்1 பிட் கட்டடமே உயிர்த்தெழுந்தது.

அந்தக் கண்கொள்ளாக் காட்சியை ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு சிங்கே அணிவகுப்பின் தேசியக் கல்விக் காட்சிக்கு வந்திருந்த 530 வெளிநாட்டு ஊழியர்கள், 3,500க்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கண்டு மகிழ்ந்தனர்.

பிப்ரவரி 7, 8ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிங்கே அணிவகுப்புக்குமுன் இத்தகைய தேசியக் கல்விக் காட்சி நடைபெறுவது வழக்கம்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றியுள்ள உன்னதப் பங்கைப் பாராட்டும் வகையில், முதன்முறையாக மனிதவள அமைச்சும் மக்கள் கழகமும் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களை சிங்கே அணிவகுப்புக்கு வரவேற்றன.

இதன்மூலம், ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’, இரட்சணிய சேனை, வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகிய அமைப்புகளிலிருந்தும் வெளிநாட்டு ஊழியர்கள் வந்திருந்தனர்.

2003ல் சிங்கப்பூருக்கு வந்த ப.செல்லத்துரை, 35, சிங்கே அணிவகுப்பைச் சமூக ஊடகங்களில் பார்த்திருக்கிறாரே தவிர, சிங்கப்பூரில் இருந்த 18 ஆண்டுகளில் ஒரு முறைகூட அணிவகுப்புக்கு நேரடியாகச் சென்றதில்லை.

சிங்கேவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பற்றித் தெரிந்ததும் உடனே பங்ளாதே‌ஷிலிருந்து வந்த தம் 20 வயது தோழர் முகமது ‌‌ஷகிலைத் தொடர்புகொண்டார். இருவரும் மனிதவள அமைச்சின் ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ஏஸ்’ குழுவில் தொண்டூழியர்களாக இருக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‌‌ஷகில் தம் நிறுவனத்தில் சேர்ந்தபோது இருவருக்குமிடையே நட்பு மலர்ந்தது.

வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தாலும் மொழித் தடைகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பண்பாட்டைப் பரிமாறிக்கொள்ள விரும்பியதால் நெருங்கிய நண்பர்களாகினர்.

“அவர் என்னை நோன்புப் பெருநாளுக்குப் பள்ளிவாசலுக்கு அழைப்பார். நான் அவரைப் பதிலுக்குத் தீபாவளிக்குக் கோவிலுக்கு அழைப்பேன்,” என்றார் செல்லத்துரை.

மற்ற பண்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் இதே ஆர்வம்தான் சிங்கே அணிவகுப்புக்கும் அவர்களை அழைத்துவந்துள்ளது.

“இங்கு சிங்கப்பூரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பலவகையான மிதவைகளையும் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம்,” என்றார் செல்லத்துரை.

அவரைப் போல், முதன்முறையாக சிங்கேவுக்கு வந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூரில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள சுப்பையன் பழனியப்பன், 36.

முதன்முறையாக சிங்கேவுக்கு வந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூரில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள சுப்பையன் பழனியப்பன், 36.
முதன்முறையாக சிங்கேவுக்கு வந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூரில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள சுப்பையன் பழனியப்பன், 36. - படம்: சுப்பையன் பழனியப்பன்

“எனக்கு ‘நாசி லெமாக்’, ‘சிக்கன் ஃப்ரைட் ரைஸ்’ போன்ற உள்ளூர் உணவுவகைகள் மிகவும் பிடிக்கும். அதனால், சிங்கேயில் உள்ளூர் உணவுகள் அடிப்படையிலான பல மிதவைகள் இருக்கும் எனத் தெரிந்ததும் நான் ஆவலுடன் வந்திருக்கிறேன்,” என்றார் பழனியப்பன்.

“நம் ஊரில் தேர் ஊர்வலம்போல் இங்கு மிதவைகள் ஊர்வலம் வந்தன. பிள்ளைகளின் நடனம், வாணவேடிக்கைகள், ஒளிக்காட்சிகள் அனைத்தும் அருமையாக இருந்தன. நான் என் குடும்பத்தினரிடம் காட்டப் பல காணொளிகள் எடுத்துள்ளேன்,” என அவர் கூறினார்.

சிங்கப்பூரிலேயே மெக்சிகன், ஜப்பானியக் கலைக்குழுக்கள் இருப்பது தம்மை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறினார்.

“நான் சிங்கேயை நேரில் பார்க்க முடியும் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை,” என்றார் 2005லிருந்து சிங்கப்பூரில் பணியாற்றி வரும் மற்றொரு வெளிநாட்டு ஊழியர் இராமன் சரவணன், 43.

‘கேஎஃப்சி சிக்கன்’, ‘மெக்சிகன் பர்கர்’ எனப் பலவித உணவுவகைகளும் அவரை ஈர்த்தன.

“சிங்கப்பூரில் நான்கு இனங்கள்தான் இருக்கின்றன என நான் நினைத்திருந்தேன். ஆனால் அதையும் தாண்டி பல இனத்தாரும் உள்ளனர் என நாங்கள் அறிந்துகொண்டோம்.

“நான் காணொளி அழைப்புமூலம் நடந்தவற்றை இந்தியாவிலிருக்கும் என் குடும்பத்திடம் காண்பித்தேன். வயலின் இசை, தோலிசைக் கருவிகள், ஆளில்லா வானூர்திவழி படப்பிடிப்பு போன்றவை சிறப்பாக இருந்தன,” என்றார் அவர்.

சிங்கே அணிவகுப்பில் அமைந்துள்ள பே‌‌ஷன் ஆர்ட்ஸ் கண்காட்சியில் இராமன் சரவணன்.
சிங்கே அணிவகுப்பில் அமைந்துள்ள பே‌‌ஷன் ஆர்ட்ஸ் கண்காட்சியில் இராமன் சரவணன். - படம்: இராமன் சரவணன்.

பல்லினங்களைச் சார்ந்த 60 தோலிசைக் கலைஞர்கள் ஒன்றாக வாசித்தல்

முதன்முறையாக சிங்கேயில் பல்லினங்களைச் சார்ந்த 60 தோலிசைக் கலைஞர்கள் ஒன்றாக வாசிக்கவுள்ளனர். இவ்வாண்டு சிங்கேயைத் துவங்கிவைக்கும் படைப்பாக, ‘ஒன்’ (One) எனும் கருவில் மூன்று நிமிட இசைப்படைப்பு ஒன்றை வழங்கவுள்ளனர்.

தமிழர்களின் சார்பாக ‘டமரு’, மலாய்க் குழு ‘நாடி சிங்கப்பூரா’, சீனக் குழு ‘டிரம்ஃபங்’, ஐரோப்பாசியக் குழு ‘ஆர்எஸ்’ ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 15 கலைஞர்கள் வாசிக்கின்றனர். ‘டமரு’ குழுவின் தோற்றுநர் அக்‌‌ஷரா திரு தமிழ் முரசிடம் இந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

“இந்த இசையில் சீன, மலாய், தமிழ், ஐரோப்பிய-ஆசிய என எந்த இனமும் தனித்துத் தெரியக்கூடாது; மொத்தத்தில் இது சிங்கப்பூரின் இசை என மக்களுக்குக் கேட்கவேண்டும் என்ற கருத்தில்தான் நாங்கள் ‘ஒன்’ என்ற கருவைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் திரு.

“டமருவிலிருக்கும் எங்கள் இளம் வாசிப்பாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். பெரும்பாலும் 10 முதல் 18 வயது வாசிப்பாளர்களையே நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். பத்து வயது சிறுவர்தான் எங்கள் 60 பேரில் ஆக இளையவர்,” என அவர் பெருமையோடு கூறினார்.

குறிப்புச் சொற்கள்