தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிறிஸ்துமஸ் குதூகலத்தில் இணைந்த வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
6ff0cedc-e7a7-4c45-98c4-148e386c9ff3
துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். - படம்: லைஃப் சென்டர் தேவாலயம்

கிறிஸ்துமஸ் குதூகலத்தை வெளிநாட்டு ஊழியர்களிடமும் கொண்டுசெல்லும் நோக்கில் லைஃப் சென்டர் தேவாலயமும் ‘ஏஜிடபுள்யுஓ’ எனும் வெளிநாட்டு ஊழியர் உதவிக் கூட்டணியும் இணைந்து டிசம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

லைஃப் சென்டர் தேவாலய உறுப்பினர்கள் உட்பட ஏறக்குறைய 100 வெளிநாட்டு ஊழியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

அனைவரையும் சென்றடையும் வண்ணம் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் அவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி, விளையாட்டுகள் விளையாடினர்.

ஆதரவாளர்களின் உதவியால் ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் 120 வெள்ளி மதிப்பில் சிறப்புப் பரிசுகளாக ஒரு சமையல் பாத்திரமும் சட்டையும் வழங்கப்பட்டன. அனைவரும் அறுசுவை இறைச்சி பிரியாணியும் ‘சிக்கன் 65’உம் உண்டுகளித்தனர்.

“நம் வெளிநாட்டு ஊழியர் சகோதரர்கள் தம் குடும்பத்தைவிட்டு சிங்கப்பூரில் பணியாற்ற வந்துள்ளனர். அவர்கள்தான் சிங்கப்பூரைக் கட்டியமைப்பவர்கள். இந்த கிறிஸ்துமஸ்சின்போது அவர்களது பணிக்கு நன்றிகூறவும் பண்டிகையுணர்வை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறோம்.

“இதன்மூலம் அவர்களுக்கு சிங்கப்பூரிலும் பெரிய குடும்பம் இருப்பதை உணர்த்த விரும்புகிறோம்,” என்றார் லைஃப் சென்டர்@துவாசைச் சார்ந்த போதகர் யோவேல் தானியேல் ஸ்டீஃபன்.

கொண்டாட்டத்தில் இயேசு பற்றிய நாடகமும் அரங்கேற்றப்பட்டது. வளரும் பருவம் முதல் தமது பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்காமல் ஏங்கும் பெண்மணி, காதல்வழி அன்பைப் பெற முயன்று அதிலும் தோல்வியுறுகிறார். அவர் இறைவனை நேசிக்கத் தொடங்கியதும் அவரது மனச்சுமை எவ்வாறு குறைந்தது என்பதே நாடகத்தின் கரு.

நாடகத்திற்காக மூன்று வாரங்கள் பயிற்சிசெய்ததாகக் கூறினார் இயேசு கதாபாத்திரத்தில் நடித்த வெளிநாட்டு ஊழியர் இம்மானுவேல் ஜெயசீலன், 26.

இயேசுவை மையமாகக் கொண்ட கிறிஸ்துமஸ் நாடகம்.
இயேசுவை மையமாகக் கொண்ட கிறிஸ்துமஸ் நாடகம். - படம்: லைஃப் சென்டர் தேவாலயம்

“துவாசிலுள்ள எங்கள் தங்குமிடத்திற்கு அருகேயே வழிபாடு நடப்பதால் வாரந்தோறும் வருவதற்கு வசதியாக இருக்கிறது,” என்றார் இம்மானுவேல்.

கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிய வெளிநாட்டு ஊழியர் ஞானபிரகா‌ஷ், 27, “புதிதாக வந்தவர்களுக்கு வழிகாட்டினோம். பல புதிய முகங்களைக் கண்டு உரையாடியது சுவாரசியமாக இருந்தது,” என்றார்.

வெளிநாட்டு ஊழியர்கள் அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்தனர். - படம்: லைஃப் சென்டர் தேவாலயம்
பிரியாணி, சிக்கன் 65, ரொட்டி அல்வா, பானம் அடங்கிய உணவுத்தொகுப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
பிரியாணி, சிக்கன் 65, ரொட்டி அல்வா, பானம் அடங்கிய உணவுத்தொகுப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. - படம்: லைஃப் சென்டர் தேவாலயம்

அதே நாளில் லைஃப் சென்டர் தேவாலயமும் ‘ஏஜிடபுள்யுஓ’வும் 160 வெளிநாட்டு ஊழியர்களைக் கரையோரப் பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றன.

கரையோரப் பூந்தோட்டங்களில் வெளிநாட்டு ஊழியர்கள்.
கரையோரப் பூந்தோட்டங்களில் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: லைஃப் சென்டர் தேவாலயம்

இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் ‘ஏஜிடபுள்யுஓ’வும் லைஃப் சென்டர் தேவாலயமும் தம் பங்காளிகளுடன் இணைந்து கிராஞ்சி, துவாஸ், செம்பவாங்கிலிருந்து 1,200 வெளிநாட்டு ஊழியர்களைக் கரையோரப் பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன.

“ஹோப் இனி‌ஷியேட்டிவ் கற்றல் மையம், ‘சாய் கார்னர்’ போன்ற தளங்களில் இணையும் வெளிநாட்டு ஊழியர்களையும் சிங்கப்பூர்க் கபடிக் கூட்டணி முதலானவை நடத்தும் போட்டிகளில் வெல்வோரையும் ஊக்குவிக்க இதைச் செய்கிறோம்,” என்றார் ஏஜிடபுள்யுஓ நிறுவனர் ரெவ்ரண்ட் சாமுவேல் கிஃப்ட் ஸ்டீஃபன்.

குறிப்புச் சொற்கள்