தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பெண்களின் நிகரற்ற பங்களிப்பால் குடும்பமும் சமூகமும் ஒருசேர உயர்கின்றன

பிள்ளையிடம் காட்டிய அன்பைச் சமூகத்திற்கும் விரிவுபடுத்திய தாய்

3 mins read
ஆட்டிசம் கொண்ட மகனை வளர்க்கும் தாயார் பலருடைய வாழ்விலும் மாற்றம் ஏற்படுத்துகிறார்.
0d736097-05a8-4f4f-ab4e-9f8934d4d769
டிபிஎஸ் வங்கியின் ‘குறிக்கோளுடன் வாழ்வோர்’ திட்டம்வழித் தொண்டாற்றிவரும் கவிதா, வார இறுதி நாள்களில் முதியோருக்கு இணையக் கட்டணச் சேவைகள் (E-payments), மோசடி எதிர்ப்பு உத்திகள் பற்றித் தகவல் பரிமாறுகிறார். - படம்: டிபிஎஸ்

வாடகை வீட்டில் வசிக்கும் முதிய பெண்மணிக்கு வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க உதவியபோது, அவர் தன்னைக் கட்டிப்பிடித்து நன்றிகூறியதை என்றும் மறக்கமுடியாது என்கிறார் கவிதா சிவதாஸ், 50.

ஏதும் எதிர்பாராமல் தொண்டூழியம் புரியும் கவிதாவுக்கு, அன்று எதிர்பாரா மனநிறைவு கிடைத்தது.

வார இறுதி நாள்களில், ‘டிபிஎஸ்’ வங்கி மூலம் சமூக சேவையில் ஈடுபடுகிறார், அவ்வங்கியின் தொழில்நுட்பப் பிரிவில் கணினிப் பயன்பாட்டு மேலாளராகப் (Applications Manager) பணியாற்றும் கவிதா.

‘டிபிஎஸ் குறிக்கோளுடன் வாழ்வோர்’ (DBS People of Purpose) திட்டத்தில் பிப்ரவரி 2023ல் சேர்ந்த அவர், அதன்வழி ஆண்டுக்கு 100 மணி நேரத்துக்குமேல் தொண்டாற்றிவருகிறார். அதற்காக அவர் இருமுறை வங்கியின் நட்சத்திர வெள்ளி விருதையும் பெற்றுள்ளார்.

‘ஆட்டிசம்’ எனும் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்கும் கவிதா அந்த அனுபவம் தந்த அன்புள்ளமும் பொறுமையுமே தொண்டூழியத்தில் ஈடுபட உந்துதலாக விளங்குவதாகக் கூறினார்.

டிபிஎஸ் வங்கியின் சமூக ‘பாப்-அப்’ சந்தையில், குறைந்த வருமான மூத்தோருக்கும் குடும்பங்களுக்கும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க உதவும் கவிதா.
டிபிஎஸ் வங்கியின் சமூக ‘பாப்-அப்’ சந்தையில், குறைந்த வருமான மூத்தோருக்கும் குடும்பங்களுக்கும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க உதவும் கவிதா. - படம்: டிபிஎஸ்

சவால்களே வாழ்வின் மிகப் பெரிய படிப்பினைகள்

கவிதாவின் மகன் அக்‌‌ஷய்க்கு மூன்று வயதில் மதியிறுக்கமும் கவனக்குறைவு, மிகையியக்கக் குறைபாடும் (ADHD) கண்டறியப்பட்டன.

மகன் அக்‌‌ஷயுடன் பெற்றோர் கவிதா, சுந்தரராமன்.
மகன் அக்‌‌ஷயுடன் பெற்றோர் கவிதா, சுந்தரராமன். - படம்: கவிதா சிவதாஸ்

“நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நாங்கள் குமுறவில்லை. அக்‌‌ஷய் மற்ற பிள்ளைகளிடமிருந்து மாறுபட்டு இருப்பார் என்பதை ஏற்றுக்கொண்டோம்,” என நினைவுகூர்ந்தார் கவிதா.

இன்றுவரை அக்‌ஷயைப் பேச்சு சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர் கவிதாவும் அவர் கணவர் சுந்தரராமனும்.

“அக்‌‌ஷயால் தன் அடிப்படைத் தேவைகளையே ஓரிரு வார்த்தைகளில்தான் சொல்லமுடியும். உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது,” என்றார் கவிதா.

அதனால் பதின்ம வயதை எட்டியதும் சிரமப்பட்ட அக்‌‌ஷய், தன் ஆதங்கத்தைத் தாயார்மீது காட்டத் தொடங்கினார். ஒருமுறை மகன் தள்ளிவிட்டதால் கவிதாவுக்குக் காயம்கூட ஏற்பட்டது.

எப்படியோ குடும்பம், பள்ளி, சிகிச்சை நிலையங்களின் துணையோடு அதைக் கடந்துவந்ததாகக் கூறினார் கவிதா.

மகனின் பள்ளி, சிகிச்சைகள் அனைத்துக்கும் அதிக செலவானதால் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது.

நான்கு சுவர்களைத் தாண்டிய அன்பு

மாறுபட்ட சுற்றுச்சூழல் மகனுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் 2022ஆம் ஆண்டு அக்‌ஷயைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார் கவிதாவின் கணவர்.

“அதுவரை வேலை, மகன் இரண்டும்தான் என் வாழ்வாக இருந்தது. திடீரென நிறைய நேரம் இருந்ததுபோல் உணர்ந்தேன். அதனால், ‘டிபிஎஸ்’வழி தொண்டூழியப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன்,” என்றார் கவிதா.

சிறப்புத் தேவையுள்ளோருக்கு அடிப்படை நிதி அறிவையும் மூத்தோருக்கு மோசடித் தடுப்பு உத்திகளையும் கற்பித்தல், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வீட்டுப் பொருள்களை விநியோகித்தல் என அவர் மாதத்துக்கு இரண்டு, மூன்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

‘டிபிஎஸ்’ வங்கி ஆண்டுக்கு இருமுறை வழங்கும் தொண்டூழிய வேலை விடுப்பும் (volunteer leave) அவருக்குக் கைகொடுக்கிறது.

“வாழ்க்கையில் வேலை, படிப்பு தவிர எவ்வளவோ உள்ளது என்பதை என் மகனுக்குக் காட்டி, அவருக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்,” என்றார் கவிதா.

தாமான் ஜூரோங்கில் நடந்த டிபிஎஸ் சமூகச் சந்தை. ஆசியாவில் வசதி குறைந்தோருக்கு உதவ அடுத்த பத்து ஆண்டுகளில் 1 பில்லியன் வெள்ளியையும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்  தொண்டூழிய மணி நேரத்தையும் டிபிஎஸ் ஒதுக்கவுள்ளதாக 2024ல் அறிவித்தது.
தாமான் ஜூரோங்கில் நடந்த டிபிஎஸ் சமூகச் சந்தை. ஆசியாவில் வசதி குறைந்தோருக்கு உதவ அடுத்த பத்து ஆண்டுகளில் 1 பில்லியன் வெள்ளியையும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர் தொண்டூழிய மணி நேரத்தையும் டிபிஎஸ் ஒதுக்கவுள்ளதாக 2024ல் அறிவித்தது. - படம்: டிபிஎஸ்

ஒரு தாயின் வெற்றி

தான் தன் மகன்களை வளர்த்த விதம் சரியானது என்பதைக் கவிதாவுக்கு ஒரு சம்பவம் உணர்த்தியது.

அண்மையில், பெருவிரைவு ரயிலில் சிறப்புத் தேவைகள் கொண்ட சிறுவன் சத்தமிட்டபடி தரையில் படுத்திருந்ததை இளையர்கள் சிலர் காணொளி எடுத்ததைக் கவிதாவின் மூத்த மகன் சச்சின், 21, கண்டார்.

அந்த இளையர்களை அணுகி, பரிவுடன் நடந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

“என் மகன் அச்சம்பவத்தைப் பற்றி என்னிடம் கூறியபோது நான் மனமுருகிப் போனேன். யாரும் சொல்லாமல் அவருக்கே தோன்றி அவர் செயல்பட்டுள்ளார்.

“என் மகன் மற்றொரு சிறுவனுக்காகப் பரிந்து பேசிய அன்றே நான் ஒரு தாயாக வெற்றியடைந்தேன்,” என்றார் கவிதா.

(இடமிருந்து) கவிதா, அக்‌‌ஷய் (18), சச்சின் (21), சுந்தரராமன்.
(இடமிருந்து) கவிதா, அக்‌‌ஷய் (18), சச்சின் (21), சுந்தரராமன். - படம்: கவிதா சிவதாஸ்
என்று என் மகன் மற்றொரு சிறுவனுக்காகப் பரிந்து பேசினானோ அன்றே ஒரு தாயாக வெற்றியடைந்தேன்.
கவிதா சிவதாஸ்
குறிப்புச் சொற்கள்