தேசிய தின வார இறுதியையொட்டி பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 17 விழுக்காடு அதிகரிப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
ஆகஸ்ட் 7 முதல் 11ஆம் தேதிவரை சிங்கப்பூரிலிருந்து வெளியே செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அண்டை நாடுகளான மலேசியா, தாய்லாந்து நாடுகளைக் காட்டிலும் அதிகம் என்று அந்த ஆய்வு சுட்டியது.
‘ட்ரிப் டாட் காம்’ எனும் பயண முன்பதிவுத் தளம் மேற்கொண்ட அந்த ஆய்வில், கோலாலம்பூர், பேங்காக், ஷாங்ஹாய் ஆகியவை அதிக பயணம் மேற்கொள்ளப்பட்ட நகரங்கள் எனவும் தெரிய வந்தது.
சிங்கப்பூரர்கள் எப்போதும் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகளை விரும்புபவர்கள் என்றும், 60வது தேசிய தினத்தையொட்டிய விடுமுறையை சிறு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப் பயன்படுத்திக்கொள்வதாகவும் சொன்னார் ‘ட்ரிப் டாட் காம்’ நிறுவனப் பொது மேலாளர் எட்மண்ட் ஓங்.
“எங்கிருந்தாலும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ஒன்றுகூடுவது ஒற்றுமை உணர்வை மேம்படுத்தி, எதிர்காலத்தில் அசைபோடக்கூடிய மறக்கமுடியாத தருணங்களையும் உருவாக்கும்,” என்றும் அவர் சொன்னார்.
பொதுவாக சிங்கப்பூரர்கள் இவ்வகை வாரயிறுதி விடுமுறைகளுக்கு மலேசியா, தாய்லாந்து, சீனா, இந்தோனீசியா, வியட்னாம், தென்கொரியா உள்ளிட்ட குறுகிய, மத்திய தூரப் பயணங்களை மேற்கொள்ள விரும்புவதாக ஆய்வு கூறியது.
சிங்கப்பூரர்களிடையே தென்கொரியாவின் சோல், வியட்னாமின் ஹோ சி மின், சீனாவின் குவாங்சோ ஆகிய நகரங்கள் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றுக்குப் பயணம் மேற்கொள்வோரின் விகிதம் ஆண்டு அடிப்படையில் 90 விழுக்காடுவரை அதிகரிக்கிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் பயண முன்பதிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், ‘மில்லெனியல்’ தலைமுறையினரும், ‘ஜென்-ஸி’ தலைமுறையினரும் செய்யும் வெளிநாட்டு முன்பதிவுகள் முறையே 19 விழுக்காடு, 31 விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாகப் பெண் பயணிகளின் முன்பதிவுகளும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வு சுட்டியது.