மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி தம்மைக் கத்தியால் குத்த வந்தபோது பரிந்துபேசி, நோயாளியின் மனத்தை மாற்றினார் மூத்த தாதி (Senior Enrolled Nurse) கோ. மோகன் ராஜ், 58.
“சில நோயாளிகள் ஆத்திரத்தில் என்மீது எச்சில்கூட துப்பியுள்ளனர்; ஒருமுறை ஒருவர் என் சட்டையைப் பிடித்து முகத்தில் குத்த வந்தார்,” என நினைவுகூர்ந்தார் 35 ஆண்டுகள் தாதியாகப் பணிபுரிந்துவரும் திரு மோகன்.
எனினும், திரு மோகன் கோபப்பட்டதில்லை. “நாம் அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தாதிக்கு அதிகம் தேவைப்படுவது நிதானம்தான்,” என்றார் திரு மோகன்.
தற்போது அவர் சாங்கி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுகிறார்.
மருத்துவமனையில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மூச்சற்ற நிலையில் இருந்தபோது தாதி ரமேஷ் பட்பனாவன், 49, உடனே ‘சிபிஆர்’ செய்து அவரை உயிர்ப்பித்தபோது அடைந்த மனநிறைவை இன்றும் நினைவில் வைத்துள்ளார் 2004 முதல் தாதியாகப் பணியாற்றிவரும் ரமேஷ்.
திரு ரமேஷ், திரு மோகன் இருவரும் தம் தாயார்களுக்காகவே தாதிமைத் துறையில் சேர்ந்தனர்.
“நான் அரசாங்கத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது என் தாயாரின் நெடுங்கால ஆசை. பிறர் தங்கள் உடல்நலத்தை எப்படிக் கட்டிக்காக்க முடியும் என்பதைக் கற்பிப்பதிலும் எனக்கு நாட்டம் இருந்தது. அதனால், தாதிமைப் படிப்பை மேற்கொண்டேன்,” என்றார் திரு மோகன்.
திரு ரமேஷ் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையில் மூத்த தொழில்நுட்பராக ஆறு ஆண்டுகள் முழுநேர வீரராகப் பணியாற்றியவர்.
தொடர்புடைய செய்திகள்
“அப்போதுதான் என் தாயாருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இரத்தக் கொழுப்பு இருந்ததாகத் தெரியவந்தது. அவரை நன்கு பார்த்துக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் தாதி ஆக முடிவெடுத்தேன்,” என்றார் திரு ரமேஷ். அப்போது தன் தாயார் அடைந்த மகிழ்ச்சியை அவர் இன்றும் மறக்கவில்லை.
ஈராண்டுகள் விரைவுபடுத்தப்பட்ட தாதிமைப் பட்டயக் கல்வியை மேற்கொண்டு டான் டோக் செங் மருத்துவமனையில் தாதியாகச் சேர்ந்தார் திரு ரமேஷ். சேர்ந்த ஓராண்டிலேயே சிறப்பான சேவைக்காக விருதும் பெற்றார்.
தாதியின் பணி மருத்துவமனையோடு நின்றுவிடுவதில்லை. 2006 முதல் இந்து அறக்கட்டளை வாரியத்தின் மருத்துவ ஆதரவுப் பிரிவு உறுப்பினராக, தைப்பூசம், மகாசிவராத்திரி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சேவையாற்றிவருகிறார் திரு ரமேஷ்.
தான் தாதியாகச் சேர்வதற்குக் காரணமாக இருந்த தாயே ஈராண்டுகளுக்குமுன் இறந்துபோனபோதும், அவரால் தொடங்கிய வாழ்க்கை, பணியிடப் பயணம் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் திரு ரமேஷ்.
“என் தாயார் இருந்தவரை அவருக்கு ஒரு குறையும் வைக்காமல் அவரைப் பார்த்துக்கொள்ள முடிந்ததற்குக் காரணம் தாதியாக நான் பெற்ற பயிற்சியே. அவர் இறந்தபின்பு மனச்சோர்வின் ஆழங்களிலிருந்து நான் மீண்டுவருவதற்கு வழிவகுத்ததும் தாதிமைத் துறையே,” என்றார் திரு ரமேஷ்.
இன்று பலரும் தாதிமைத் துறையில் படிப்பு மேற்கொண்டாலும் அத்துறையில் நீடிப்பதில்லையென வருந்தினார் திரு ரமேஷ். “பிறருக்கு அணையாடை (diaper) மாற்றுவது, சுத்தம் செய்வது சிலருக்குப் பிடிக்காத விஷயம். ஆனால் அதுதான் தாதிமையின் அடிப்படை,” என்றார் திரு ரமேஷ்.
தற்போது தாதிமைத் துறையில் சம்பளங்கள் அதிகரித்தாலும் தாதியாகச் சேர்வதற்கு அதிமுக்கியம் விருப்பமே, பணமல்ல என்றார் அவர்.
தொழில்நுட்பராகத் தாம் இன்னும் அதிகமாகச் சம்பாதித்திருக்கலாம் என்றபோதும் தாதியாகக் கிடைக்கும் மனமகிழ்ச்சி வேறு எந்தத் துறையிலும் இல்லை என்றார் திரு ரமேஷ்.