திபெத்தின் தென்மேற்குப் பகுதியில், 21,778 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது பனியால் மூடப்பட்ட கைலாய மலை.
புனித மலையாகக் கருதப்படும் அம்மலையில் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதனை சுற்றி 52 கிலோமீட்டருக்கு பயணிகள் நடைப்பயணம் செய்வதே வழக்கம்.
ஆனால், மலையைச் சுற்றி வருவதுதானே என அதைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அப்பாதை சீரற்ற, கற்களும் மேடுபள்ளமும் நிறைந்த கரடுமுரடான பாதை.
ஆன்மிகப் பயணமாக மட்டுமல்லாமல், பொன்னொளி பாயும் இம்மலையின் அழகை ரசிக்க பல சுற்றுப்பயணிகள் பேரளவில் வருகைபுரிவர்.
ஆனால், இதுபோன்ற உயரமான மலைகளுக்குச் செல்லும் வரை, அவற்றின் உண்மையான சவால்களை எவராலும் முழுமையாகக் கணிக்க முடியாது.
மேலும், அங்கு சென்றுவந்தவர்களும் அவர்கள் சந்தித்த சவால்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்வதும் அரிதே.
மலையேறும் மக்களின் ஆர்வம் குறைந்துவிடக்கூடாது என்பதே அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றார் தம் குடும்பத்துடன் கைலாய யாத்திரை மேற்கொண்ட திருவாட்டி விக்னேஸ்வரி காளிமுத்து.
அதற்குமுன் மலையேற்ற அனுபவம் இல்லாத குமாரி மகா சந்தர்ஜன், திரு சந்தர்ஜன் சொக்கலிங்கம், திருவாட்டி விக்னேஸ்வரி ஆகிய மூவரும் தங்கள் அனுபவத்தைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தங்கள் அனுபவத்தின் மூலம் மற்றவர்கள் மலையேறுவதற்குமுன் நடைமுறை இயல்பை அறிந்துகொள்வதே அவர்களின் விருப்பம்.
கைலாய மலையேற்றத்தைப் வெறும் பயணமாக மட்டுமின்றி, ஆன்மிக அழைப்பாகவும் பார்த்தார் 57 வயதான திருவாட்டி விக்னேஸ்வரி.
“நான் எப்போதெல்லாம் தியானம் செய்கிறேனோ அப்போதெல்லாம் கைலாய மலை என் கண்முன் வந்து நிற்கும்,” என்ற அவர், அதனைத் தமது ஒன்றரை ஆண்டுக் கனவான இந்த யாத்திரையை மேற்கொள்ள ஓர் அறிகுறியாகப் பார்த்தார்.
ஆனால் அவரின் மகள் குமாரி மகாவிற்கோ வேறு நோக்கம்.
“அப்படிப்பட்ட ஓர் இடத்திற்கு என் பெற்றோர் தனியாகச் செல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை. அதனால் அவர்களுடன் செல்ல முடிவு செய்தேன். பல சிரமங்களைக் கடந்து என் விடுப்பு கோரிக்கையும் ஏற்கப்பட்டது,” என்றார் 24 வயது குமாரி மகா.
தியானம், நடைப்பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, கைலாய மலை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளல் என பல்வேறு வகையில் தங்களைத் தயார்படுத்திக்கொண்டனர் சந்தர்ஜன் குடும்பத்தினர்.
ஆனால், அவர்களுக்குக் காத்திருந்த சவால்களோ கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.
இவ்வாண்டு ஜூன் 6ஆம் தேதி ஒன்பது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து தங்களின் 17 நாள் பயணத்தை அவர்கள் தொடங்கினர்.
சிங்கப்பூரிலிருந்து சீனாவின் செங்டூ பகுதிக்கும் அங்கிருந்து திபெத்தின் லாசா பகுதிக்கும் விமானம் மூலம் சென்ற அவர்கள், இறுதியாக பேருந்து வழிமூலம் ஷிகாசே பகுதியைச் சென்றடைந்தபோதுதான் முதல்முறையாக உயரமான நிலப்பரப்பின் தாக்கத்தை உணர்ந்தனர்.
“இந்தப் பயணம் நான் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு கடினமாக இருந்தது. மூச்சுவிடுவதே மிகவும் சிரமமாக இருந்தது,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.
கிரிவலம் என அழைக்கப்படும் கைலாய மலையைச் சுற்றி வரும் மூன்று நாள் நடைப்பயணத்திற்கு முன்பு, ஆறு நாள்கள் திபெத்தில் கழித்து அங்குள்ள உயரத்திற்கும் பருவநிலைக்கும் அவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டனர்.
“சிங்கப்பூரில் பரபரப்பான வாழ்க்கைமுறைக்குப் பழக்கப்பட்ட நாங்கள் பரிக்கிரமாவின்போது ஒவ்வொன்றையும் மிகவும் மெதுவாகவே செய்யவேண்டியிருந்தது. மூச்சுவிடுவது போன்ற எளிய செயல்களுக்கும் பெரிய அளவில் வலிமை தேவைப்பட்டது.” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.
எளிதில் சோர்வடையாமல் இருப்பது, மேடுபள்ளமான பாதையைச் சற்று எளிதில் கடப்பது போன்ற காரணங்களுக்காக கைலாய கிரிவலம் செல்வோர் குதிரைகளைத் தெரிவுசெய்வர்.
“நாங்கள் குதிரையைத்தான் அதிகம் நம்பியிருந்தோம். ஆனால், குதிரைகளுக்குப் பற்றாக்குறை இருந்ததால் நாங்கள் 18 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. பின்னர் குதிரை கிடைத்து, அதன்மீது ஏறிய பிறகுதான் எங்களால் ஓரளவிற்கு மூச்சுவிட முடிந்தது,” என காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும் அளவிற்குத் திருவாட்டி விக்னேஸ்வரி தமது பயணம் குறித்து விவரித்தார்.
ஆனால், குமாரி மகாவுக்கோ இப்பயணத்தை எந்தத் துணையுமின்றி முடிக்க வேண்டும் என்ற மனவுறுதி.
கிரிவலத்தில் ஆக உயரிய, உயிர்வாயு மிகவும் குறைவாக இருக்கும் பகுதியான டோல்மா லா பாஸில் நிலைமை சற்று தலைகீழாக மாறியது.
“நான் உயிரிழந்துவிடுவதுபோல உணர்ந்தேன். மூச்சுவிடுவது எவ்வளவு வலியைக் கொடுத்தாலும், ஒவ்வொரு மூச்சையும் பொன்போலப் பார்த்தேன். நான் தனியாகப் பேசவும் தொடங்கினேன்,” என்றார் 61 வயதான திரு சந்தர்ஜன் சொக்கலிஙம்.
“பசியெடுக்காது, அப்படியே பசியெடுத்தாலும் சாப்பிடவும் தோன்றாது. அடிக்கடி உட்கார்ந்துகொள்வேன். ஆனால், நான் எப்போதெல்லாம் கண்களை மூடிக்கொள்கிறேனோ அப்போதெல்லாம் ஒரு தெய்வீக ஆற்றல் என்னை எழுப்புவதுபோல் உண்ர்ந்தேன்,” என்றார் அவர்.
ஒரு கட்டத்தில் அனைவரும் தனித்தனியாகப் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானதோடு அவர்களுக்கிடையே இருந்த அக்கறையும் அவர்களுக்கு என்னானதோ ஏதானதோ என்ற அச்சமும் தலைதூக்கியது.
“என் உடலில் உயிர்வாயு அளவு குறைந்து முதலுதவி வாகனம் வரும் அளவிற்கு நிலைமை மோசமானது. அந்த நேரத்தில் என் கணவரையும் மகளையும் தொடர்புகொள்ள முடியாமல் பதறிப்போனேன்,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.
இந்த யாத்திரை, குடும்பப் பிணைப்பை மட்டுமின்றி தங்களை மேலும் வலிமையானவர்களாக மாற்றியுள்ளதாக சந்தர்ஜன் குடும்பத்தினர் கூறினர்.
“வாழ்க்கையில் இனி என்ன சவால்கள் வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையைப் பெற்றுள்ளேன். அவற்றைக் கடந்து செல்லமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அதைவிட வேறேதும் பெரிதாகவோ சவாலாகவோ தெரியவில்லை. பிறப்பு இறப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துள்ளது,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி.
“இது ஒரு எளிமையான பயணமன்று. கழிவறை போன்ற அடிப்படை வசதிகளின்றி இப்பயணம் எங்களை பல வழிகளில் சோதித்தது. ஆனால், எங்களுக்குக் கிடைத்த இந்த ஆன்மிக அனுபவத்துக்காகவே நாங்கள் திரும்பிவருவோம்,” என்றார் குமாரி மகா சந்தர்ஜன்.
இத்தகைய புனிதப் பயணத்தை மேற்கொண்ட நன்றியுணர்வுடன் இருக்கும் சந்தர்ஜன் குடும்பத்தினர், கைலாய மலை போன்ற ஒரு புனிதத் தலத்தைச் சுற்றுப்பயணிகள் சிலர் அசுத்தப்படுத்துவதாகக் கூறி வருந்தினர்.
அம்மலையின் புனிதத்தன்மையும் தூய்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள்.
இதுபோன்ற உயரமான மலையை முதன்முறை ஏறுபவர்கள் எவ்வழிகளில் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி சந்தர்ஜன் குடும்பத்தினரின் இந்தப் பயணம் எழுப்புகிறது.
அதற்கான பதிலை அறிந்துகொள்ள தமிழ் முரசு முற்பட்டது.
சிகரம் தொட்ட மருத்துவரின் அறிவுரை
தேசிய பல்கலைக்கழக மருத்துவனையின் எலும்பியல் அறுவைச் சிகிச்சை துறையின் இணை ஆலோசகரும், எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் சிங்கப்பூர் மருத்துவரும், மலை மருத்துவத்தில் அனைத்துலக பட்டயக் கல்வி சான்றிதழ் பெற்றுள்ள டாக்டர் குமரன் இராசப்பனைச் சந்தித்தோம்.
உயரமான மலைகளில் ஏறுவதற்கு உடல்வலிமையுடன் மனவலிமையும் தேவை என்கிறார் டாக்டர் குமரன், 41.
“முதல்முறையாக மலையேற விரும்புவர்கள் முதலில் சிறிய மலைகளை ஏற முயல வேண்டும். அது அவர்களை வெவ்வேறு பருவநிலைக்குப் பழகப்படுத்திக்கொள்ள உதவும்,” என்ற அவர், அதே சமயத்தில் எவ்வளவுதான் நாம் தயார்ப்படுத்திக்கொண்டாலும் எல்லா நேரமும் நாம் எதிர்பார்த்தபடி மலையேற்றம் அமைவதில்லை என்றும் சொன்னார்.
மலை ஏறுவது சிலருக்கு உடற்பயிற்சியாக, இதுவரை செய்யாத ஒரு தனிப்பட்ட இலட்சியமாக அல்லது ஆன்மிகத் தேடலாகக்கூட இருக்கலாம்.
அந்த வகையில், ‘நாம் ஏன் மலை ஏறுகிறோம்?’ என்ற காரணத்தை நன்கு அறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் டாக்டர் குமரன்.
அப்புரிதல்தான் நாம் எவ்வளவு தொலைவுவரை போக முடியும் என்பதற்கான தனிப்பட்ட எல்லையை வகுக்க உதவும் என்று அவர் கூறினார்.
“’ஹேஸ்’ எனப்படும் அதிக உயரத்தில் ஏற்படும் பெருமூளைவீக்கமும் (high-altitude cerebral edema) ‘ஹேப்’ எனப்படும் அதிக உயரத்தில் ஏற்படும் நுரையீரல் வீக்கமும் (high-altitude pulmonary edema) உயரமான மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய உயிருக்கு ஆபத்தான நோய்கள்,” என்றார் டாக்டர் குமரன்.
“அவற்றிற்கான அறிகுறிகள் தோன்றும் நேரத்தில் செய்ய வேண்டிய மிகச்சிறந்த, பாதுகாப்பான நடவடிக்கை உடனடியாக குறைந்த உயரத்துக்குச் செல்வதுதான்.
“எடுத்துக்காட்டாக, முதன்முறையாக நேர்முகத் தேர்வுக்குச் செல்லுமுன் நாம் எப்படிப் பயிற்சி செய்கிறோமோ, அதேபோன்ற அணுகுமுறையும் மலையேறும் பயணத்திற்கும் தேவை. எல்லாம் இறைவன் கையில் என இருந்துவிட முடியாது. உங்களால் முடிந்த அளவு பயிற்சிகளை மேற்கொண்டு, மற்றதெல்லாம் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று டாக்டர் குமரன் அறிவுறுத்தினார்.