செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவான ‘மீலாதுன் நபி’ ஆவணப்படம்

செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவான ‘மீலாதுன் நபி’ ஆவணப்படம்

3 mins read
99952f35-d0f8-4fa3-b4d3-4a3b7e5c6ca0
(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் இணைச் செயலாளர் சலீம், இயக்குநர் மில்லத் அகமது, ஜமாஅத்தின் தலைவர் கௌஸ் மரைக்கார், பொதுச் செயலாளர் கபீர் மரைக்கார், பொருளாளர் செய்யது அலி ராஷிக். - படம்: மில்லத் அகமது

இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தைப் பற்றிய படம் எனக் கேள்வியுறும்போது, ‘இது சாத்தியமா?’ என்ற கேள்வி உடனே தோன்றக்கூடும். 

நபிகள் நாயகத்தின் உருவத்தைச் சித்திரிப்பது இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி குற்றம் என்பதால் இதனை இயக்குநர் மில்லத் அகமது எப்படிச் செய்து முடித்தார் என்ற எண்ணம் எழக்கூடும்.

இருந்தபோதும் படத்தைப் பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனது இந்த எண்ண ஓட்டங்கள் மாறத் தொடங்கின.

நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சித்திரிப்புகளில் எந்தப் புனைவுக்கூறுகளும் இன்றி இஸ்லாமியப் புனித நூல்களான திருக்குர்ஆன், ‘ஹதீஸ்’ ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்ற விளக்கத்துடன் தொடங்கியது திரைப்படம். அதற்கடுத்து அவரவர் இறைவனும் சமயமும் அவரவர்க்கு உயர்ந்தது என்ற நடுநிலையான, நல்லிணக்கம் போற்றும் வாசகத்தையும் கொண்டிருந்தது.

இந்த இரண்டு மணி நேரத் திரைப்படத்தில் சமய போதகர்களின் விளக்க உரைகள், பாடல்கள், வரைகலை ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய காட்சிகளும் திறம்படக் கோக்கப்பட்டுள்ளன. இசைக்கருவிகள் அவ்வளவாகப் பயன்படுத்தப்படாமல் பாடல்கள் இறையன்பு ததும்பி இதமூட்டும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தன. 

“மீலாதுன் நபி என்றால் நபிகளின் பிறந்தநாள் என்று பொருள். இந்தப் பெயர் இந்தியாவில் மிகவும் பிரபலம் என்பதால், பாமர மக்களையும் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இத்தலைப்பு சூட்டப்பட்டது,” என்றார் இயக்குநர் மில்லத் அகமது.

சென்னையில் 1997ல் தூர்தர்ஷனில் வெளியான ‘சுபயோகம்’ என்ற நாடகத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர் இவர்.

பின்னர் பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, திரையுலகப் பெரும்புள்ளிகளான ராஜ் கபூர், தமிழரசன், ‘அதியமான்’, பாண்டியராஜன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இடையில் பஹ்ரேன், சிங்கப்பூர் எனப் புலம்பெயர்ந்த போதிலும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தமது 20 ஆண்டுகாலக் கனவை இவர் கைவிட்டுவிடவில்லை.

‘மீலாதுன் நபி’ ஆவணப்படச் சுவரொட்டி.
‘மீலாதுன் நபி’ ஆவணப்படச் சுவரொட்டி. - படம்: மில்லத் அகமது

கவனத்துடன் கையாளப்பட்டது

சமயம் சார்ந்த தகவல்களில் எவ்விதப் பிழையும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள், சமய மாணவர்கள் மூலம் இப்படத்தின் திரைக்கதை பலமுறை சரிபார்க்கப்பட்டது என்றார் இயக்குநர். 

படத்தின் கிட்டத்தட்ட 35 விழுக்காட்டுக் காட்சிகளுக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஏழு விதமான தொழில்நுட்பங்கள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் திரு மில்லத் கூறினார். 

தொழில்நுட்பம் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயன்படுத்தும்போது ஏற்பட்ட புரிதல் குறைபாடுகளால் பலமுறை காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

“இதற்காகப் பணமும் நேரமும் விரயமானது என்றே சொல்லுவேன். சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டே இந்தியாவிற்குச் சென்று படப்பிடிப்பை நடத்துவதும், படத்தொகுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதும் பெரும் சவாலாக இருந்தது,” என்றார் அவர்.

இருப்பினும், இசை அமைப்பாளர் ராம், கேமரா கலைஞர் லலித் ராகவேந்தர் உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களின் ஒத்துழைப்பால் இப்படம் வெற்றிகரமாக நிறைவுபெற்றதையும் அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தன்னம்பிக்கையுடனேயே ‘மீலாதுன் நபி’ படத்தை கடந்த 2025 அக்டோபர் 31ஆம் தேதி திரு மில்லத் வெளியிட்டார். இப்படத்தை விளம்பரப்படுத்த திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் போன்ற இடங்களுக்குச் சென்று விநியோகிப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார்.

தற்போது சிங்கப்பூரில் உள்ள தமிழ் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினர், மாணவர்களின் கல்வி நிதிக்காக மார்ச் 28ல் சுல்தான் பள்ளிவாசல் அரங்கில் இப்படத்தின் இரண்டு காட்சிகளைத் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.

முயிஸ் ஒப்புதல் சான்றிதழ், சிங்கப்பூரில் பிஜி13 சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுள்ள இப்படத்தை மலேசியாவிலும் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் தமிழ் மொழியின் சிறப்புகளை விளக்கும் மற்றொரு புதிய ஆவணப்படத்தை உருவாக்கி முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகத் திரு மில்லத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்