மூளையை இளமையாக்கும் பன்மொழிப் புலமை

2 mins read
24dd4e6d-992f-431c-8097-df146b3bad73
மொழிகளைக் கற்பதற்கு அப்பால், அவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பதும் முக்கியம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

வயது ஏற ஏற, மூளை சோர்வடைவதும் நினைவாற்றல் உள்ளிட்ட திறன்கள் மெல்லக் குறைவதும் இயல்பு. மூளையை இளமையாகவும் துடிப்புடனும் வைத்திருக்க, புதிர்களுக்கு விடை கண்டறிவது சிறந்த வழியாகப் பரிந்துரைக்கப்படும் நிலையில், புதிய மொழியைக் கற்பது சிறந்த வழியாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

‘நேச்சர் ஏஜிங்’ எனும் மருத்துவ சஞ்சிகை அண்மையில் வெளியிட்ட ஆய்வில், பன்மொழித் திறன் மூளைக்கு வயதாகும் வேகத்தைக் குறைப்பதாகவும் அறிவாற்றல் குறையும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 27 நாடுகளைச் சேர்ந்த 51 முதல் 91 வயது வரையுள்ள 80,000க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரே மொழி பேசுபவர்களைக் காட்டிலும் பன்மொழி பேசுபவர்களின் மூளையில் வயதானதற்கான அறிகுறிகள் பாதிக்கும் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பன்மொழிப் புலமை மூளையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக வல்லுர்கள் கூறிவரும் நிலையில், பல்வேறு கலாசாரங்கள், சூழல்களில் ஈடுபடுத்திக்கொண்டு அதற்கேற்ப மூளைத் தசைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது, அதன் விளைவு பன்மடங்காகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது மறதிநோய், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட நரம்புச் சிதைவினால் ஏற்படும் நோய்களையும் தாமதப்படுத்தும் என்கின்றனர்.

புதிய மொழியைக் கற்க முயல்வதும் புதிய கலாசாரங்களில் ஈடுபடுவதும் மூத்தோருக்குச் சாத்தியமானவைதான் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மனித மூளை வாழ்நாளில் பல்வேறு நரம்பியல் நிலைகளைக் கடந்து வருகிறது. கல்வி, பணி எனப் பல்வேறு விதங்களில் அதன் தசைகளைப் பயிற்சிக்கு உட்படுத்தினாலும் வாழ்வியல் முறை, மூப்படைதல், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு காரணிகளால் அதன் செயல்பாடுகள் பாதிப்படையலாம். எந்த வயதிலும் புதிய மொழியினைக் கற்பது குறிப்பிடத் தகுந்த பலனை அளிக்கும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்மொழிப் புலமை கொண்டோரிடம் படைப்பாற்றல், கவனம், முடிவெடுக்கும் திறன், ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடும் திறன் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது சமூகத் திறனை அதிகரித்து, தனிமை தரும் சிரமங்களையும் போக்க உதவுவது கூடுதல் பலன் என்றும் ஆய்வு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்