இன்றைய பரபரப்பான உலகில், தனிமை என்பது பலரின் கவலையாக இருக்கிறது. அவர்களின் கவலையைப் போக்க உதவும் வகையில், ‘ஹாஃப்’ (HALF) அமைப்பு தனிமையைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கிய அரும்பொருளகம்தான் ‘மோஹோ’ (MUSEUM OF HIDDEN OBJECTS AND FEELINGS).
ஆர்ச்சர்ட் வட்டாரத்திலுள்ள ‘ஸ்கேப் வைட்’ தியேட்டரில் இந்த அரும்பொருளகத்தில் இடம்பெறும் இருவழித்தொடர்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிவரை, செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இடம்பெறும் அக்கண்காட்சியில் மொத்தம் எட்டு இருவழித்தொடர்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின்மூலம் சமூகத் தொடர்பையும் தனிமையின் பல்வேறு அம்சங்களையும் பார்வையாளர்கள் ஆராயலாம்.
கண்காட்சிக்குச் செல்வதற்குமுன் அனைவருக்கும் ஒரு ‘மோஹோ’ கடப்பிதழ் வழங்கப்படும். ஒவ்வோர் இருவழித்தொடர்புச் சாவடியில் இருக்கும் செயல்பாடுகளை முடித்தவுடன், அதற்கான முத்திரை கடப்பிதழில் குத்தப்படும்.
அதில் கொடுக்கப்பட்ட விரைவுத் தகவல் குறியீட்டை வருடி, சில தனிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தால் அவர்களுக்கேற்ப சாவிக்கொத்து (keychain) ஒன்று வழங்கப்படும்.
கண்காட்சியின் தொடக்கத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டு, அதில் தனிமையைப் பற்றிப் பார்வையாளர்களின் கருத்து என்ன என்பதை அதற்குப் பக்கத்தில் இருக்கும் வரைபலகையில் வரைவதற்கு வாய்ப்பு தரப்படும்.
வளர்ந்து வரும் உலகில், நாம் மறந்துபோன நினைவுகளைப் பிரதிபலிக்கும் விதமாக ஓவியக் குறிப்பேடு, பழைய தொலைபேசி, பயன்படுத்தப்பட்ட போர்வைகள், விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவை 12 கண்ணாடிப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.
தனிமையில் இனிமையான பாடல்களைக் கேட்பதற்காகவே ஒரு சிறப்பு அங்கமும் இடம்பெற்றுள்ளது. பிடித்த பாடல்களைக் கொடுக்கப்பட்ட ஒலிநாடா அட்டைகளில் எழுதி, அவர்களது இசைப் பதிவுப் பெட்டியில் சேர்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
மகிழ்ச்சி, கவலை, துயரம், அச்சம், பதற்றம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகவே, ‘தி கேபினட் ஆப் இமோஷன்ஸ்’ எனும் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் எதிர்கொள்ளும் உணர்ச்சிகளை, அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை கொடுக்கப்பட்ட அட்டைகளில் எழுதலாம்.
இறுதியாக, நமது ஆழமான எண்ணங்களைத் தனிமையில் பகிர்ந்துகொள்ள ‘தி கன்ஃபெஷன்’ அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நமது சிரமங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் பகிர்ந்துகொள்ள உதவியாக அந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்காலத்துடன் பேச, கண்காட்சியின் இறுதியில் 12 மாதத்திற்கு ஏற்ப 12 கடிதப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதி 2026ஆம் ஆண்டிற்கு அஞ்சல் செலுத்தலாம்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், சமூகத் தொடர்புகளைப் பற்றிய கலந்துரையாடலில் பேசிய ‘ஹாஃப்’ அமைப்பின் நிறுவரான சிந்தியா சு, “தனிமையில் வாழும் மனிதர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மோஹோ அரும்பொருளகம் ஒரு பாதுகாப்பான இடமாகத் திகழும்,” எனக் குறிப்பிட்டார்.
மோஹோ அரும்பொருளகத்திற்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டுகளைச் சிஸ்டிக் இணையத்தளம் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். 18 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கு அனுமதி இலவசம்.

