தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் நாடுகளுடனான நட்புறவைக் கௌரவிக்கும் பல்லிசை நிகழ்ச்சி

3 mins read
aaeb1945-c37a-4961-9e16-8949332eb4db
விக்டோரியா கலை அரங்கத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் Musical Mosaics: Imagineasian பல்லிய இசை நிகழ்ச்சி. - படம்: ஆசிய கலாசார சிம்ஃபொனி இசைக்குழு
multi-img1 of 3

நான்கு அண்டை நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள். 20க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள். ஒரே மேடையில்!

இந்த ஆண்டின் தேசிய தினத்தை முன்னிட்டு ஆசிய கலாசார சிம்ஃபொனி பல்லிய இசைக்குழு (Asian Cultural Symphony Orchestra) ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது.

நான்காம் பதிப்பாக ‘மியூசிக்கல் மொசைக்ஸ்: இமேஜினேஷியன்’ (Musical Mosaics: Imagineasian) எனும் பல்லிய இசை நிகழ்ச்சி விக்டோரியா கலை அரங்கத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

ஆனால் இம்முறை சற்றே மாறுபட்ட வகையில் அது நடைபெறும். 

ஆசியான் நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள நீண்டகால நட்பார்ந்த உறவைக் கொண்டாடுகிறது இவ்விசை நிகழ்ச்சி. 

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் அரங்கேறவிருக்கின்றனர்.

2015ஆம் ஆண்டிலிருந்து மேற்கத்திய இசைக்குழுவையும் பாரம்பரிய இசைக்கருவிகளையும் இணைத்துப் பல்லிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார் ‘இமேஜினேஷியன்’ நிகழ்ச்சியின் இசை இயக்குநர் அட்ரியன் சியாங், 46. 

“பொதுவாகச் சீன, மலாய், இந்திய இசைக்கருவிகளை மட்டும் வைத்து வாசிப்பது வழக்கம்.

“ஆனால் எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆசியான் நாடுகளுடனான சிங்கப்பூரின் நட்புறவை கௌரவிக்க மலேசியா, தாய்லந்து, கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசைக்கருவிகளை இணைத்துள்ளோம்,” என்றார் திரு சியாங். 

இசைநிகழ்ச்சியில் படைக்கப்படவிருக்கும் 8 இசை அமைப்புகளில் ஒன்று ‘த சிங்கப்பூரியன் ஃபோக் மெட்லி’ (The Singaporean Folk Medley)

அந்தத் தொகுப்பில் இடம்பெறவிருக்கும் ஒண்டே ஒண்டே (Ondeh Ondeh), சுரிராம் (Suriram), கோப்பி சுசு (Kopi Susu), ஜிங்கிலி நோனா (Jinkly Nona) ஆகிய அந்தக் காலக் கம்பத்து உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்கள் மலாய், பெரானாக்கான், யூரேசியர் ஆகிய மக்களிடையே பிரபலமானவை.

ஆனால், சற்று வித்தியாசமாக இந்தியப் பாரம்பரிய இசைக்கருவியான வீணையும் சீனப் பாரம்பரிய இசைக்கருவியான ஷெங்கும் அந்தத் தொகுப்பில் ஓர் உரையாடல் முறையில் அங்கம் வகிக்கவுள்ளன. 

“அவர்கள் சிறுபான்மையினர் என்றாலும், அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது,” என்றார் ‘த சிங்கப்பூரியன் மெட்லி’ (The Singaporean Medley) என்ற பாடல் தொகுப்பை இசையமைத்த டாக்டர் சகரியா கோ, 55.  

பல இனம், மொழி, கலாச்சாரம் கொண்டுள்ள நம் நாட்டின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக ‘த சிங்கப்பூரியன் மெட்லி’ (The Singaporean Medley) தொகுப்பு அமைகிறது.

இசையைப்போலப் பல வேறுபாடுகளைக் கடந்து நாம் எவ்வாறு ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதை அது சித்திரிக்கிறது.

“பாரம்பரிய, மேற்கத்திய இசைக்கருவிகள் வாசிக்கப்படும்போது அப்பழமையான பாடல்கள் புதுப் பொலிவு பெறுகின்றன. இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, இசைக்கலைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற முறையில் இசையை உள்வாங்கி வாசிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளேன்,” என்றார் டாக்டர் கோ. 

இன நல்லிணக்கத்தைப் போற்றும் பல்லிய இசை நிகழ்ச்சியில் இந்தியப் பாரம்பரிய இசையும் இடம்பெறுகிறது.

“தென்கிழக்காசிய இசைக்கலைஞர்களுக்கு மத்தியில் இந்தியப் பாரம்பரிய இசையின் பிரதிநிதியாக இருப்பதில் எனக்குப் பெருமை,” என்றார் 37 வயது வீணைக் கலைஞர் மாதவன் கலைச்செல்வன். 

பொதுவாக தபேலா, மிருதங்கம் போன்ற இந்திய இசைக்கருவிகளுடன் வாசிப்பது வழக்கம்.

ஆனால் இம்முறை மற்ற இசைக்கருவிகளுடன் வாசிப்பது ஒரு புதுமையான அனுபவம். ஒவ்வோர் இசைக்கருவிக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதிலிருந்து கற்றுக்கொள்ள இது போன்ற நிகழ்ச்சிகள் வாய்ப்பளிப்பதாகக் கூறினார் மாதவன். 

ஓர் இந்திய இசைக்கலைஞராக மேற்கத்திய இசைக்குழுவில் வாசிப்பது ஒருவிதச் சவால். இசைக்குறிப்புகளை இந்திய இசைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வாசிப்பதைவிட மற்ற இசைக்கருவிகளைச் செவிமடுத்து மனத்தளவில் உள்வாங்கி அதற்கேற்ப வாசிப்பது சிறந்தது என்றார் அவர். 

இசைக்கு வரையறை கிடையாது என்பதற்கேற்ப வீணையை ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் கேட்க இது போன்ற இசைநிகழ்ச்சிகள் வாய்ப்பளிப்பதாக மாதவன் கூறினார். 

சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் வென்ற குழலிசைக் கலைஞர் முனைவர் கானவினோதன் ரத்னம் நிகழ்ச்சியில் குழலிசை வாசிக்கவிருக்கிறார்.

அந்த இசைத்தொகுப்பு, நன்யாங் காலை உணவு, கோழிச்சோறு (Chicken Rice), ரொட்டி பரோட்டா ஆகிய சிங்கப்பூரின் மூன்று தனித்துவமான உணவு வகைகளைப் பற்றியதாகும்.  

இந்தப் பல்லிய இசை நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு https://www.acso.sg/2025/05/19/musical-mosaics-imagineasian/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்