சிங்கப்பூரின் ஆகப் பெரிய இரவு அனுபவமான சிங்கப்பூர் இரவுத் திருவிழா 17வது முறையாக மீண்டும் களைகட்டுகிறது.
‘புராணங்களும் இதிகாசங்களும்’ (Myths and Legends) என்ற கருப்பொருளில் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பிராஸ் பாசா, பூகிஸ் வட்டாரத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
சிங்கப்பூர், தென்கிழக்காசியச் சமூகங்களை வடிவமைத்த பாரம்பரியக் கதைகள், கலைகள், மரபுகளைப் பொதுமக்கள் இந்த விழாவின்வழி மீண்டும் கண்டறியலாம்.
“கலை, மரபுடைமை, கலாசாரம் ஆகியவற்றின் மூலம் நமது நகரத்தை வித்தியாசமாக ஆராயவும் புதிய கதைகளைச் சந்திக்கவும் பழக்கமான இடங்களை மீண்டும் கண்டறியவும் இந்த விழா ஒரு சிறந்த வாய்ப்பாகும்,” என்றார் விழா இயக்குநர் காசிம் கரீம்.
பிராஸ் பாசா, பூகிஸ் வட்டாரத்தில் 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம் என்று ‘மரபுடைமைஎஸ்ஜி’ (HeritageSG) அமைப்பின் விழாக்கள், வட்டார மேம்பாட்டுப் பிரிவின் மூத்த மேலாளரான யோகமலர் தியாகராஜன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரை உருவாக்கிய கதைகளை மக்கள் புதிய கோணத்தில் கண்டறிய இந்த விழா ஆர்வத்தைத் தூண்டும் எனத் தெரிவித்த அவர், ‘லெஜெண்ட்ஸ் ஆஃப்டர் டார்க்’ (Legends After Dark) எனும் சிறப்பு வழிகாட்டி நடைப்பயணத்தின் வாயிலாகக் கலைப்படைப்புகளுக்குப் பின்னணியில் உள்ள கதைகளையும் உந்துதல்களையும் பார்வையாளர்கள் ஆழமாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.
ஒளியும் இசையும் கலந்த ‘பூமி, கடலின் கதைகள்’
விழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகக் கட்டடத்தில் ‘பூமி, கடலின் கதைகள்’ (Tales of Earth and Sea) எனும் முப்பரிமாண ஒளிப்பட வீச்சு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 5 வரை இடம்பெறுகிறது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கும் இந்த ஒளிக்காட்சி, நிலம், நீர் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பின்வழி உள்ளூர்ப் பழங்கதைகளைப் பிரதிபலிக்கிறது. இதற்குப் பின்னணி இசையைச் சிங்கப்பூரின் ‘ஆர்டுசிக்’ (Artusik) குழுவினர், மலேசியாவின் யுஐடிஎம் (UiTM) கலைஞர்களுடன் இணைந்து அமைத்துள்ளனர்.
“ஆசிய, மேற்கத்திய வாத்தியங்களான காமிலன், தபேலா, எர்ஹு, சாக்ஸஃபோன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பழங்கதைகளுக்காக ஒரு புதிய இசை உலகை உருவாக்க விரும்பினோம்,” என்று இத்திட்டத்தில் பங்காற்றியுள்ள தபேலா கலைஞர் கோ. லட்சுமணன் கூறினார்.
தென்கிழக்காசியாவின் புராணங்களும் கலாசாரக் கதைகளும் தலைமுறைகளை இணைக்கும் ஒரு சிறந்த பாலம் என்ற அவர், பாரம்பரிய வாத்தியங்களை நவீன ஒலிகளுடன் இணைப்பதன் மூலம் ஒரு புதிய இசை மொழியில் இந்தக் கதைகளைத் தாங்கள் மீண்டும் சொல்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியப் பாரம்பரிய இசையைத் தாண்டி தபேலாவை வெளிப்படுத்தக் கிடைத்த இந்த வாய்ப்பு தமக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், இதன் மூலம் பலரும் தபேலாவையும் அதன் ஒலிகளையும் நெருக்கமாக அறிந்துகொள்ள இது உதவும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
கதகளியில் உருமாறும் சீனப் பழங்கதை
சிங்கப்பூர் இரவுத் திருவிழாவோடு இணைந்து நடைபெறும் ‘அ டேட் வித் ட்ரெடிஷன்’ (A Date with Tradition) நிகழ்ச்சியில், பாஸ்கர்ஸ் கலைக்கழகம் ஒரு தனித்துவமான படைப்பை வழங்கவுள்ளது.
பிரபல சீனப் பழங்கதையான ‘ஜர்னி டு தி வெஸ்ட்’ (Journey to the West) கதையை, ‘லேடி ஸ்பைடர்’ என்ற தலைப்பில் கதகளி நடன வடிவத்தில் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் அவர்கள் அரங்கேற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் நடைபெறும். அத்துடன் பார்வையாளர்களே கதையின் முடிவைத் தீர்மானிக்கும் ‘பஞ்சதந்திரா’ எனும் பரதநாட்டியப் படைப்பையும் பாஸ்கர்ஸ் கலைக்கழகம் அரங்கேறவுள்ளது.
சிங்கப்பூர் போன்ற பன்முகச் சமூகத்தில் அனைத்து இன மக்களையும் சென்றடையும் வகையில், மரபுடைமைக் கலையைச் சற்றுப் புதுமையான முறையில் படைக்க வேண்டியதன் அவசியத்தைப் பாஸ்கர்ஸ் கலைக்கழக நடன வடிவமைப்பாளரும் மூத்த கதகளி கலைஞருமான கலாமண்டலம் பிஜு வலியுறுத்தினார்.
“மற்ற இன மக்களின் கலாசாரத்தை உள்வாங்கி, அதனை நமது கலையோடு கலந்து, அவர்களுக்கே திரும்பக் கொடுப்பதே எங்களது எண்ணம்,” என்றார் அவர்.
“பிறரது கலாசாரத்தைப் புரிந்துகொள்ள நாம் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்,” என்றும் பிஜு கூறினார்.
பாரம்பரியக் கலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாம் எதை வேண்டுமானாலும் புதிதாகக் கற்றுக்கொள்ளலாம், நவீன நடனங்களைக்கூட ஆடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை உணர்த்தும் நமது வேர்களை அறிந்திருக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
இந்த நடனப் படைப்புகளைத் தவிர, சமூகச் சுவரோவியம் தீட்டுதல், சீன ஓப்ரா விளக்கங்கள், காகித விளக்குகள் செய்யும் பயிலரங்கு எனப் பல்வேறு அங்கங்களும் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் இடம்பெறுகின்றன.
பிற சிறப்பு அங்கங்கள்
தென்கிழக்காசியாவின் சிறந்த முப்பரிமாண ஒளிப்பட வீச்சுகளைக் கண்டுகளிக்க ‘மலாம்’ (MALAM) என்ற புதிய போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘த கேத்தே’ (The Cathay) கட்டடத்தின் வெளிப்புறச் சுவர்களில் அந்தப் படைப்புகள் திரையிடப்படும். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 20 படைப்புகள் ஆகஸ்ட் 21 முதல் 28 வரையும், ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் நேரடித் தேர்வுக்குப் பிறகு, முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் படைப்புகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 5 வரையும் திரையிடப்படும்.
மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நாடகக் குழுவினர் உருவாக்கிய விசித்திரமான ‘பறவை மனிதர்கள்’ நிகழ்ச்சி, ஆகஸ்ட் 21 முதல் 23 வரை தேசிய அரும்பொருளகத்தின் வெளியே உலாவந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தவுள்ளது.
பூகிஸ் கடல்சார் வணிக வரலாற்றைச் சித்திரிக்கும் ‘வைக்கிங்ஸ் ஆஃப் தி ட்ரோபிக்ஸ்’ (Vikings of the Tropics), மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிப் புட்டிகளால் உருவான 2.8 மீட்டர் உயரமான ‘ஃபார்ச்சூன் மெர்லயன்’ (Fortune Merlion), புயல் வீசும் கடல் பயணங்களை நினைவூட்டும் ‘ஸ்டார்மி ஸ்ட்ரெய்ட்ஸ்’ (Stormy Straits) எனப் பல புதிய கலைப்படைப்புகளும் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்றன.
கட்டணமில்லா கலை அனுபவம்
சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2026ல் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். ஒரு சில சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
பன்முகக் கலாசாரம், பாரம்பரியக் கதைகள், நவீனத் தொழில்நுட்பம் என அனைத்தும் ஒன்றிணையும் இந்த இரவுத் திருவிழா சிங்கப்பூரர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://www.heritage.sg/sgnightfest எனும் இணையத்தளத்தைப் பொதுமக்கள் நாடலாம்.


