ஏறத்தாழ 100 கலைஞர்கள், பத்துக்கும் மேற்பட்ட இசைக்கோவைகளுடன் ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தது ‘நாத யாத்ரா’ நிகழ்ச்சி.
சிங்கப்பூர் இந்தியப் பல்லிசை, பாடகர் குழு (Singapore Indian Orchestra and Choir) தனது நாற்பதாண்டுகாலப் பயணக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக ‘நாத யாத்ரா: ஒலிகளின் பயணம்’ எனும் கருப்பொருளில் அமைந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தியது.
வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, ஜலதரங்கம் எனப் பலவித இசை அம்சங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி அக்டோபர் 5ஆம் தேதியன்று சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தின் ஹூ பீ அரங்கில் நடைபெற்றது.
இந்திய இசையின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியதோடு, சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையிலும் அமைந்த இந்நிகழ்ச்சி தெமாசெக் அறக்கட்டளை, தேசியக் கலைகள் மன்றம் ஆகியவற்றின் ஆதரவில் நடந்தேறியது.
நிகழ்ச்சியில் கலாசார, சமூக இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அவர், “இந்தியப் பாரம்பரியத்தின் துடிப்பான இசையைச் சிங்கப்பூர்க் குரல்கள் உறுதிப்படுத்தியுள்ளன,” என்றார். இளையர்களின் ஈடுபாடு, பன்முகக் கலாசார ஒத்துழைப்பு, பாரம்பரியத்தை புதுமையுடன் இணைக்கும் திறன் ஆகிய முயற்சிகளை மேற்கொள்வதற்குக் குழுவினரை அவர் பாராட்டினார்.
“இக்குழு இந்தியப் பாரம்பரிய இசையை நவீன ரசிகர்களிடம் கொண்டுசேர்த்துள்ளது. எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகை வளமான மரபுகளைச் சிங்கப்பூரர்களிடம் கொண்டு சேர்க்க உதவுகிறது,” என்றும் திரு தினேஷ் வாசு சொன்னார்.
உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களுடன், குவீன்ஸ்டவுன் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த நாடாளுமன்றச் செயலாளரும், குழுவின் ஆலோசகருமான எரிக் சுவா வழிநடத்திய சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அவர், “இந்த இசைக்குழுவானது இசை என்பதைத் தாண்டி ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது; பன்முகத்தன்மையைத் தழுவிப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது; இக்குழுவின் ஆலோசகராகப் பங்காற்றுவது பெருமை,” என்றார்.
திருவாட்டி லலிதா வைத்தியநாதன் தலைமையில் கடந்த 1985 ஆம் ஆண்டு, சிறிதாகத் தொடங்கிய இக்குழு, உள்ளூர் வெளிநாடுகளில் சிறப்புக்குரிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் தனிப்பட்ட நிகழ்த்துகலை நிறுவனமாக உருவெடுத்த இக்குழு, பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதுடன், புத்தாக்கங்களை உட்புகுத்தவும் தவறுவதில்லை என்றார் குழுவின் நிறுவனர் திருவாட்டி லலிதா.
“இசைக்குழு நடத்துவது என்பதே தனி கலை. அதற்கெனத் தனி நுணுக்கங்களும் ஆழமும் உள்ளன,” என்று அவர் சொன்னார். தனி நிறுவனமாக உருவெடுத்தபின் இரண்டாவது பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தியதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்ததாகவும் கூறினார்.
குழுவின் மற்றொரு முதன்மை இசைக்குழு நடத்துநருமான விக்னேஸ்வரி வடிவழகன், “பாரம்பரிய, சமகால, அனைத்துலக இசைக் கோப்புகளை உள்ளடக்கியது இந்த நிகழ்ச்சி. கடந்த 30 ஆண்டுகளாக இக்குழுவுடன் பயணம் செய்கிறேன். இந்த நிகழ்ச்சிக்காகப் பல பாணிகளில் பயிற்சிகள் அளிக்க வேண்டியிருந்தது. இதில் பங்காற்றியது சிறப்பான அனுபவம்,” என்றார்.
அவர் இசைக்குழுவை வழிநடத்தியதுடன் சிறப்பு ஜலதரங்க நிகழ்ச்சியையும் படைத்தார்.
முழுமையான இசை நிகழ்ச்சியாக அமைந்தாலும், பங்கேற்பாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இரு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
குழுவின் இளையர் பிரிவினர் ஏற்பாட்டில் ஆசிய - மேற்கத்திய பாணி இசைக்கருவிகளுடன், 75 இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து படைத்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

