அவாண்ட் நாடகக் குழுவின் ‘கோப்பிக் கடை’ நாடகத்தின் முதல் நாளன்று (செப்டம்பர் 18), சிங்கப்பூர் தமிழ் மேடை நாடகத் துறைக்கு அளப்பரிய பங்கினை ஆற்றிவரும் ஏழு நாயகர்களுக்கு ‘நாடகக் கலைமாமணி’ விருது வழங்கப்பட்டது.
அவாண்ட் நாடகக் குழுவின் சார்பில் மீடியாகார்ப் நிறுவனத்தின் நிகழ்ச்சி நிர்வாக, சமூகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் சபநிதா சண்முகசுந்தரம் விருதுகளை வழங்கினார்.
கலைஞர்கள் அஹமத் அலி கான் அப்துல்லா கான், புரவலன் நாராயணசாமி, வனிதா இளஞ்சேரன், முத்துசாமி லிங்கம், வடிவழகன் சண்முகசுந்தரம், இளவழகன் முருகன், கார்த்திகேயன் சோமசுந்தரம் ஆகியோர் விருதைப் பெற்றனர்.
1990ல் அப்போதைய செக்கோஸ்லோவோக்கியா அதிபர் எழுதிய ஆங்கில நாடகத்தில் நடித்ததன் மூலம் மேடை நாடகத் துறையில் அறிமுகமான திரு அஹமத் அலி கான், 1993ல் தமிழில் நடிக்கத் தொடங்கினார்.
“இருமொழி நாடக எழுத்தாளரும் கவிஞருமான திரு இளங்கோவன்தான் ‘ஊர்வலம்’ எனும் நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்தார்,” என்றார் திரு அலி கான்.
அன்றிலிருந்து அவர் தொடங்கிய பயணம் அவரைத் தொலைக்காட்சி, விளம்பரங்கள், முழு நீளத் திரைப்படம்வரை இட்டுச் சென்றுள்ளது.
காந்தியாக நடித்தது மலரும் நினைவுகளில் ஒன்று. “எனினும், நான் முதலில் எழுத்தாளர்; பின்பே நடிகர்,” என்றார் நான்கு நூல்களை வெளியிட்டிருக்கும் திரு அலி கான்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ‘சங்கே முழங்கு’ நாடகத்துடன் தொடங்கியது முனைவர் இளவழகனின் மேடை நாடகப் பயணம். பின்பு ‘தொண்டன்’, ‘தாஜ் மகால்’ நாடகங்களுக்கு எழுத்தாளராகவும் உதவி இயக்குநராகவும் அடியெடுத்துவைத்த அவர், பீஷ்மா, சகுனி, பரசு, அபிமன்யு, துரியோதனா எனப் பல நாடகங்களிலும் கதை, வசனம் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் அவாண்ட் படைத்த முதல் மேடை நாடகமான ‘பீஷ்மா’வையும் அவர் எழுதினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு முத்துசாமி லிங்கம் தொலைக்காட்சி நாடகக் கலைஞராக 1995ல் தொடங்கினார். ‘அண்ணாமலை’, ‘டிரிப்பில் நைன்’, ‘நாம்’, ‘காக்கி போலா’, ‘டிக் டிக் டிக்’ போன்ற தொடர்களில் நடித்தார். ‘4G’, ‘ஏன்?’ போன்ற மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
“மேடை நாடகத்துக்கு என்றுமே ஒரு தனி இடம் உள்ளது. ஏனெனில், நேரடியாகப் படைக்குமுன் நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாடகம் முடியும்வரை ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அது முடிந்தபின் கிடைக்கும் மனதிருப்திக்கு நிகரில்லை,” என்றார் திரு லிங்கம்.
பிரபல தொலைக்காட்சி, மேடை நாடக நடிகர் திரு புரவலன் நாராயணசாமி ரவீந்திரன் நாடகக் குழுவில் தொடங்கி, அவாண்ட் நாடகக் குழுவில் தன் திறன்களை வளர்த்தார்.
“என் மனத்திலுள்ள நாடகம் என்றுமே அவாண்ட் குழுவின் ‘பீஷ்மா’ எனும் ஓரங்க நாடகம். அந்நாடகம் பல ஊர்களுக்கும் - மலேசியா, ஸ்காட்லாந்து, சிட்னி, மெல்பர்ன், இலங்கை, தமிழ்நாடு - சென்றுள்ளது. தமிழ்நாட்டில் ரஜினி, கே பாலச்சந்தர்கூட பார்த்தார்கள்,” என்றார் திரு புரவலன்.
“ஒன்றைப் பெறவேண்டும் என்று நினைத்துவிட்டால் இறுதிவரைப் போராடு. விளைவுகளையோ தோல்விகளைப் பற்றியோ கவலைப்படாதே. முன்னோக்கியே செல்.” இதுவே திருவாட்டி வனிதா இளஞ்சேரனின் கொள்கை. ‘கோப்பிக் கடை’ நாடகத்தில் தாயாராகவும் கடைக்காரராகவும் இவர் நகைச்சுவையாக, அன்பாக, ஆவேசமாக, பலவித உணர்ச்சிகளைப் பொழிகிறார்.
14 வயது முதல் அவர் நாடகத்துறையில் ஈடுபட்டு வருகிறார். ‘இளையர் அரங்கம்’, ‘இளமை’, ‘வெற்றி 3’, ‘யார் 2 & 4’, ‘அசுர வேட்டை’, ‘வேட்டை’, ‘சொர்க்கம்’, ‘கலாபக் காதலன்’ போன்ற பலவற்றிலும் நடித்துள்ளார். வசந்தம் ஒளிவழியில் ‘மெய்’, ‘ஆரியா’ உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். ‘எதிர்காலம்’, ‘பாலபாரதம்’ போன்ற நாடகங்களில் நடிகர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளார்.
“எந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதை முழுமையாகச் செய்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுபவள் நான்,” என்றார் திருமதி வனிதா.
பல்லாண்டுகளாக மக்களைத் தன் நகைச்சுவையாலும் அசராத நடிப்பாலும் கவர்ந்துவரும் திரு வடிவழகன் சண்முகசுந்தரம், ‘நாடகக் கலைமாமணி’ விருதைப் பெற்ற கையோடு தன் சீரிய பணியை அதே மேடையிலேயே தொடர்ந்தார். மக்களை வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்து, விருதுக்குப் பெருமைசேர்த்தார். ரவீந்திரன் நாடகக் குழுவின் நிறுவும் உறுப்பினரான அவர், இவ்விருதை மறைந்த திரு ரவீந்திரன், திரு ஆனந்த கண்ணன், திரு செல்வகுமார், திருவாட்டி மல்லிகா ஆகியோருக்குச் சமர்ப்பித்தார். அண்மையில் நடைபெற்ற பாஸ்கரீயம் கலை நிகழ்ச்சியில் ‘நாட்டிய கலா நிபுணர்’ விருதுடன் அவர் கௌரவிக்கப்பட்டும் உள்ளார்.
இவ்விருதைப் பெற்ற ஆக இளையவர், 1999லிருந்து மேடை நாடகங்களில் நடித்துவரும் கார்த்திகேயன் சோமசுந்தரம். “2015ல் இதே விருதை என் தந்தை திரு ரே சோமசுந்தரம் பெற்றார். என் தந்தை கலைகள்மீது காட்டிய காதல்தான் இன்றும் என்னை வழிநடத்துகிறது. அதிக இளையரை மேடை நாடகத்துக்கு அறிமுகப்படுந்துவதே என் மிகப் பெரிய நோக்கம்,” என்றார் திரு கார்த்திகேயன்.
இதற்குமுன், 2015ல் திரு ரே சோமசுந்தரம், திருமதி சித்ரா தேவி, திருமதி அஞ்சலை, திருமதி முத்துலட்சுமி ஆகியோருக்கு நாடகக் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2021ல், அவாண்ட் நாடகக் குழுவின் 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு 50 தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.