நன்யாங் பல்துறைத் தொழிற்கல்லூரியின் வரவேற்பு தினம் 2026

2 mins read
2fb3eaf0-4bcb-4a3f-829f-c1cec8875720
நன்யாங் பல்துறைத் தொழிற்கல்லூரி. - படம்: நன்யாங் பல்துறைத் தொழிற்கல்லூரி

நன்யாங் பல்துறை தொழிற்கல்லூரி தனது 2026ஆம் ஆண்டிற்கான வரவேற்பு தினத்திற்கு “நன்யாங் பல்துறைத் தொழிற்கல்லூரியை வித்தியாசமான பார்வையில் கண்டறியுங்கள்” என்ற கருப்பொருளுடன் அனைவரையும் வரவேற்கிறது. 

ஜனவரி 8 முதல் 10 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் விழா, கல்வி நிலையத்தின் துடிப்பான வளாகக் கலாசாரம் மற்றும் மாணவர்களின் பன்முகத்தன்மையை நேரில் கண்டு அனுபவிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. 

இந்த நிகழ்வின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை மாலை ‘சாய்சஸ்’ (CHOICES) என்ற பெற்றோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியின்போது கல்லூரி முதல்வர் ரசல் சான், மாணவர்களின் கல்வி வெற்றி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை மாணவர் சேர்க்கை குறித்த விரிவான விளக்க உரைகளும், கல்வி உதவித்தொகைகள் மற்றும் மாணவர் வாழ்க்கை தொடர்பான கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன. அதில் முன்னாள் மாணவர்கள் தங்களின் வெற்றிக் கதைகளைப் பகிரவிருக்கிறார்கள். 

அந்நாளின் சிறப்பம்சமாக ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் ‘ஃபிரைடே நைட் ஸ்பெஷல்’ அமையவிருக்கிறது. 

வளாகம் முழுவதும் கண்கவர் ஒளியமைப்புகளுடனும் வழிகாட்டிகளுடனும் கூடிய சுற்றுப்பயணங்கள் மற்றும் கலைக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குறிப்பாக, வடிவமைப்பு மற்றும் ஊடகப் பள்ளி (school of design and media) வழங்கும் பிரம்மாண்டமான வெளிப்புற ஒளிக்காட்சித் திரையிடல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தவுள்ளது.

கல்லூரியின் ‘ஃபுட் சென்ட்ரல்’ (food central) பகுதியில் ‘தி கரீபியன்’ (The Caribbean) என்ற பெயரில் வெப்பமண்டலக் கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர் சங்கங்களின் செயல்பாடுகளைக் காண்பதோடு கைவினைப் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்கலாம். 

வருங்கால மாணவர்கள் அந்தந்தப் பாடப்பிரிவுகள் சார்ந்த செய்முறைப் பட்டறைகளில் கலந்துகொள்வதுடன், முத்திரை அட்டைச் சவாலில் பங்கேற்று சிறப்புப் பரிசுகளையும் வெல்ல முடியும். 

இந்த விழாக்காலச் சூழலை மேலும் இனிமையாக்க வருகை[Ϟ]தரும் விருந்தினர்களுக்குச் சாஜி (Chagee) தேநீர், ஐஸ் மைலோ, அசய் (acai), டங்குலு போன்ற சுவையான சிற்றுண்டிகள் இலவசமாக வழங்கப்படும். 

குறிப்புச் சொற்கள்